மனக்கஷ்டம்

தியானம்: 2026 நவம்பர் 14 சனி | வேத வாசிப்பு: 1சாமுவேல் 1:1-17

YouTube video

கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள் (1சாமுவேல் 1:6).

இந்த உலக வாழ்விலே நாம் பலவிதமான போராட்டங்களையும், மனமடிவுகளையும், வேதனைகளையும், இழப்புக்களையும் சந்திக்கின்ற தருணங்கள் நேரிடத்தான் செய்யும். ஆனாலும் அவற்றை வெற்றி கொண்டு வாழ தேவனுடைய பெலனும், வழிநடத்துதலும் நமக்கு என்றும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இங்கே அன்னாளின் வாழ்விலே இரண்டு விதமான மனக்கஷ்டம் இருந்தது. ஒன்று அவளுக்குப் பிள்ளை இல்லை. சக்களத்தியோ அவளை அடிக்கடி மன மடிவாக்கிக் கொண்டு இருந்தமையால், அவள் அழுதுகொண்டும், சாப்பிடாமலும் மிகவும் மனக்கஷ்டத்தில் இருந்தாள். இரண்டாவது, அக்காலத்தில் மலடியாக இருப்பவளை பலர் ஆசீர்வாதம் இல்லாதவளாகவே பார்த்தனர். கர்த்தர்தான் அவளது கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், அதனால் கர்த்தரின் கண்களில் கிருபை கிடைக்காத ஒரு பெண்ணாகவே அவளை கருதினர். சமூதாயத்தில் அவளுக்கிருந்த இந்நிலைமை காரணமாக அவள் மனக்கஷ்டத்தில் இருந்தாள். அவளுடைய கணவனான எல்க்கானாவோ, எவ்வளவோ அவளை ஆறுதல்படுத்தினான். பத்துக் குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தும் அவளது மனம் ஆறவும் இல்லை, அவளது மனக்கஷ்டம் நீங்கவும் இல்லை. கடைசியில் அவள் தேவனுடைய ஆலயத்துக்குள் பிரவேசித்து, தேவனுடைய சமுகத்தில் தனது விண்ணப்பத்தை முன்வைக்கிறாள். அவள் அதிக நேரம் மௌனமாக வாயசைத்ததைக் கவனித்த ஆசாரியனான ஏலி அவள் வெறித்திருப்பதாகவே எண்ணுகிறான். அவளை வினாவியபோது, அவள், “நான் ஆண்டவரின் சமுகத்தில் என் உள்ளத்தை ஊற்றிவிட்டேன்” என்றே கூறினாள். உள்ளத்தில் இருந்த மனக்கஷ்டம் முழுவதையும் அப்படியே தண்ணீரை ஊற்றுவதுபோல, ஆண்டவரின் பாதத்தில் ஊற்றிவிட்டேன் என்கிறாள். அவளுக்கு ஆறுதலாக, “உனது வேண்டுதல் கேட்கப்பட்டது, சமாதானத்தோடே போ” என்று ஆறுதலான வார்த்தைகளை கூறி அன்னாளை அனுப்பி வைத்தான் ஆசாரியன்.

அருமையானவர்களே, இன்று நம்மில் பலரும், மனக்கஷ்டத்தில் இருக்கலாம். யாரிடத்திலும் சொல்லி ஆறுதல் அடையமுடியாத மனவேதனையில் இருக்கலாம். தேவனுடைய பாதத்திற்கு வாருங்கள். எதுவாக இருந்தாலும் அவரிடத்தில் இறக்கி வையுங்கள். ஏற்றகாலத்தில் நமக்குப் பதில் கொடுக்க அவர் ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். அன்று அன்னாளுக்குப் பதில் கொடுத்த தேவன், இன்று நமக்கும் பதிலளிக்க வல்லவராய் இருக்கிறார். “மனப்பாரத்தின் நேரத்திலே, மனவேதனையின் வேளையில் மனமுருகி நான் ஜெபிக்கையிலே, எந்தன் இயேசு நல்லவரே வாரும் ஐயா.”

ஜெபம்: “நாங்கள் எப்போதும் வந்தடையத்தக்க கன்மலையாகிய கர்த்தாவே, எங்கள் விசாரங்களையும் கவலைகளையும் உமது பாதத்தில் இறக்கிவைத்து விடுகிறோம். ஆமென்.