துக்கம் பறந்தது

தியானம்: 2026 நவம்பர் 15 ஞாயிறு | வேத வாசிப்பு: 1சாமுவேல் 1:18-22

YouTube video

பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனம் செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை (1சாமு. 1:18).

மிகவும் பாரமான பெட்டியொன்றை தலைமீது சுமந்துசென்று கொண்டிருந்தாள் ஒரு வயதான தாய். அவ்வழியே வந்த வண்டிக்காரன் அந்த அம்மாவைக் கண்டு, உதவி செய்ய நினைத்து, “அம்மா, வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள். அதிக பாரத்தோடு செல்லுகிறீர்களே” என்றான். அந்த அம்மாவும் சந்தோஷமாக ஏறிக்கொண்டார்கள். வண்டி சற்றுத் தூரம் சென்றதும் மூச்சிரைக்கும் சத்தம் கேட்டு, வண்டிக்காரன் திரும்பி பார்த்தபோது, அத் தாயின் தலையில் இன்னமும் அந்தப் பெட்டி இருப்பதைப் பார்த்து, அதிர்ந்து போய், “அம்மா, பெட்டியை இறக்கி வண்டியில் வையுங்கள். ஏன் இன்னமும் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்” என்றான்.

நாமும் பலவேளைகளில் இப்படித்தான் நடந்துகொள்வதுண்டு. ஜெபத்தில் எல்லாவற்றையும் ஆண்டவரின் பாதத்தில் இறக்கி வைத்துவிடாமல், அவரிடம் வாயால் அறிக்கையிட்ட பின்பும், நாமே அந்தப் பாரங்களை திரும்பவும் தூக்கிச் சுமந்துகொண்டு திரிவதுண்டு. ஆனால் அன்னாள் இங்கே அப்படிச் செய்யவில்லை. இங்கே அன்னாள் அவளின் மனப்பாரம் எல்லாவற்றையும் தேவனுடைய பாதத்தில் வைத்து விட்டாள், அதன் பின்னர் அவள் துக்கமுகமாக இருக்கவில்லை. தேவனுடைய சமுகத்துக்கு வருவதற்கு முன் துக்கமாக, அழுதுகொண்டு, சாப்பிடாமல் இருந்த அன்னாள். இப்போது தனது நிந்தையை நீக்க தேவனால் முடியும் என்று நம்பி, தேவனுடைய பாதத்தில் தனது துக்கத்தை ஊற்றிவிட்ட பின்னர், அவள் துக்கமுகமாய் இருக்கவில்லை என்று காண்கிறோம்.

இதுதான் உண்மையான நம்பிக்கை. தேவனிடம் கொடுத்த காரியத்தை அவரே பார்த்துக்கொள்வார். அவள் நம்பியதுபோலவே அவளுக்கு நடந்தது. அவள் கர்ப்பவதியாகி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவளாக கர்த்தருக்குள் களிகூர்ந்தாள். தன் நிந்தையை நீக்கிய தேவனைப் புகழ்ந்து பாடினாள். அவளுடைய துக்கம் எல்லாம் ஒரு கணப்பொழுதில் பறந்துபோனது. அவளது நிந்தையின் நாட்களெல்லாம் சந்தோஷமாய் மாறியது. அவளுடைய தேவையெல்லாம் நிறைவேறியது. அருமையானவர்களே, இந்த அன்னாளுக்குள் இருந்த அதே நம்பிக்கை இன்று நமக்குள் இருக்கிறதா? நாம் தேவனுடைய சமுகத்தில் ஒரு காரியத்துக்காக மன்றாடி அவரிடம் அதைக் கொடுத்துவிட்ட பின்னர் நமது மனநிலை எப்படியாக இருக்கிறது?

தேவனே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கையோடு இருக்கிறோமா, அல்லது சுயமுயற்சிகளில் இறங்குகிறோமா? அன்னாளைப் போல கர்த்தருக்குள் சந்தோஷமாய், அவருடைய கிரியைகளுக்காக காத்திருப்போமாக.

ஜெபம்: அன்பின் தேவனே, எங்கள் பாரங்களை உமது சமுகத்தில் இறக்கிவைத்த பின்பும் பலநேரங்களில் எங்கள் விசுவாசம் தடுமாற்றம் அடைகிறது. எங்களை மன்னியும். அவிசுவாசியாயிராமல் விசுவாசத்தோடிருக்க எங்களுக்குதவும். ஆமென்.