பொருத்தனையை நிறைவேற்றினாள்
தியானம்: 2026 நவம்பர் 16 திங்கள் | வேத வாசிப்பு: 1சாமுவேல் 1:19-28

அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால் … அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள் (1சாமு. 1:28).
ஒரு தொழில் நேர்முகப் பரீட்சைக்கு செல்லும்போது, எனக்கு இந்த வேலை கிடைத்தால், ஒரு தொகைப் பணத்தைக் காணிக்கையாகப் போடுவேன் என்று ஒருவர் ஜெபித்துவிட்டுச் சென்றாராம். அதேபோல வேலை அவருக்கே கிடைத்தது. இப்போது இவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவது? முதல் சம்பளம் வந்ததும் போட்டு விடுகிறேன் என்றார். முதல் சம்பளம் வந்தது, வந்த போக்கிலேயே செலவும் வந்து எல்லாமே முடிந்துவிட்டது. “அவர் கடவுள்தானே, அவருக்குத் தெரியாதா என்னுடைய கஷ்டம்” என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டாராம். இப்படியும் சிலர்.
அன்னாளும் ஒரு பொருத்தனை பண்ணித்தான் பிள்ளைக்காகத் தேவனிடத்தில் மன்றாடினாள். ஆனால் அவளோ தனது பொருத்தனையை மறந்து போகவில்லை. பிள்ளை பிறந்ததும் அவனை பால்மறக்கச் செய்தபின், தனது பொருத்தனையை நிறைவேற்றும்படிக்கு, அவனைக் கொண்டுபோய் ஆலயத்தில் விட்டாள். அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்.
அன்னாள் தனது தேவை முடிந்ததும், அதைப் பூர்த்தி செய்த தேவனை மறந்து விடவில்லை. பிள்ளையில்லாத தனக்குக் கிடைத்த பொக்கிஷம் என்று அவனைப் பொத்திப் பராமரிக்கவும் இல்லை. இவனைக் கொடுத்துவிட்டால் எனக்கு மீண்டும் பிள்ளை கிடைக்குமோ என்று சிந்திக்கவும் இல்லை. தனக்கு சமுதாயத்திலும், தன் சொந்தக் குடும்பத்திலும் இருந்த நிந்தையைக் கர்த்தர் நீக்கினார். அவருக்கு நான் கொடுத்த வாக்கை, என் பொருத்தனையை நிறைவேற்றுவேன் என்று சொல்லி அதை நிறைவேற்றி முடித்தாள். அதன் பின்னர் அநேக குமாரர், குமாரத்திகளைப் பெற்று சந்தோஷமாக வாழ்ந்தாள். அவள் கடவுளுக்குக் கொடுத்த சாமுவேலும், பின்நாட்களில் ஒரு பெரிய தீர்க்கதரிசியாக தேவனுடைய பணியைச் செய்யும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டான் என்று காண்கிறோம்.
தேவபிள்ளையே, நாம் தேவனுடைய சமுகத்தில் சொல்லும் வார்த்தைகள், உடன்படிக்கைகள், பொருத்தனைகளைக் குறித்து எவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கிறோம்? அவற்றைப் பெரிதுபடுத்தாமல், தேவனுக்கு எனது நிலைமை புரியும்தானே என்று எண்ணி, நம்மையும் ஏமாற்றி, தேவனையும் ஏமாற்றி வாழக்கூடாது. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். எனவே அவரைத் தொழுதுகொள்ளும் நாமும் அப்படியே இருக்கவேண்டும் என்றே அவர் விரும்புகிறார்.
ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, நாங்கள் பொருத்தனை பண்ணுகிறவர்களாய் மாத்திரம் இருந்துவிடாமல், அன்னாளைப் போல அதை நிறைவேற்றுகிறவர்களாயும் காணப்பட உமதருள் தாரும். ஆமென்.”