பாவத்தின் அகோரம்

தியானம்: 2026 நவம்பர் 17 செவ்வாய் | வேத வாசிப்பு: 1சாமுவேல் 2:12-26

YouTube video

அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள் (1சாமு. 2:17).

நம்மை அழைத்த தேவன் பரிசுத்தராய் இருக்கிறார். எனவே அவருடைய பிள்ளைகளாகிய நாமும், நமது எல்லாக் காரியங்களிலும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்றே அவர் ஆசிக்கிறார். நாம் மனுஷரை ஏமாற்றலாம். மனுஷருக்குக் காரியங்களை மறைக்கலாம். ஆனால் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து பார்க்கிற தேவனை நாம் ஏமாற்றவோ அல்லது அவருக்குக் காரியங்களை ஒளிக்கவோ முடியாது.

அன்னாள் ஆலயத்திலே கொண்டுபோய் விட்ட அவளது மகனான சாமுவேல், அந்த இடத்தில் ஒழுக்கமும், தேவனுக்குப் பயந்தவனுமாய் வாழ்ந்தான். ஆனால் அதே இடத்தில் ஆசாரியனாக இருந்த ஏலியின் குமாரரான ஒப்னியும், பினெகாசும் தேவனுடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து தேவனது கோபத்துக்கு ஆளானார்கள். தகப்பனாகிய ஏலி ஆலயத்தில் ஆசாரியனாக இருந்து தேவனுக்குப் பணிசெய்தபோதும், அவனுடைய குமாரர் பேலியாளின் மகனாக இருந்து, கர்த்தரை அறியாதவர்களாக இருந்தார்கள்.

கர்த்தருடைய பலி, பலிபீடத்தில் தகனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் ஒரு ஆயுதத்தினால் அதைக் குத்தி, நலமான இறைச்சித் துண்டுகளைத் தாங்கள் சமைப்பதற்காக எடுத்துக்கொண்டனர். ஆகவே பலியிட வரும் மக்களும், அதை விருப்பமில்லாமலேயே செய்துவந்தனர். இதைக்குறித்து எத்தனைமுறை சொல்லியும் ஏலியின் மகன்கள் கேட்காதே போனார்கள். தேவனுடைய காரியங்களை ஒரு விளையாட்டுப்போல எடுத்துக் கொண்டார்கள். அத்துடன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடுகிற பெண்களோடு தவறான உறவுகொள்வதும், இப்படியாக அவர்களுடைய பாவம் பெருகியது. ஏலி எத்தனையோ முறைகள் எச்சரித்தும் அவர்கள் அதற்குச் செவிசாய்க்கவில்லை. இது கர்த்தருக்கு விரோதமான பாவம் என்று ஏலி எச்சரித்தும் அவர்கள் கேளாதேபோனபடியினால், கர்த்தரே அவர்களைச் சங்கரிக்க முடிவு பண்ணினார்.

இன்றும் நாம் பாவம் செய்யும்போது, அதை மனுஷருக்கு இலகுவாக மறைத்துவிடுகிறோம். மனுஷருக்கு முன்பாக குற்றமற்றவர்கள்போல வேஷம் போட்டு நடக்கிறோம். ஒளிப்பிடங்களில் நாம் செய்யும் பாவத்தை எவரும் காணமாட்டார்கள் என்ற துணிவில் நாம் செயற்படுகிறோம். ஆனால் தேவன் அனைத்தையும் ஒருநாளில் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார் என்பது நிச்சயம். அவர் பரிசுத்தமுள்ளவர். தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக்கண்களை உடையவர். அவரோடு நாம் விளையாடமுடியாது. இன்றே மனந்திரும்புவோம். பிழையை அறிக்கையிட்டு மனம்வருந்துவோம். அப்போது அவர் நம்மை இரட்சிப்பார்.

ஜெபம்: “அன்பின் பிதாவே, கடிந்துகொள்ளப்பட்டும் மனந்திரும்பாமல் தங்கள் இருதயத்தை கடினப்படுத்திக்கொண்ட ஏலியின் பிள்ளைகளைப் போல் காணப்படாதபடி, பாவங்கள் உணர்த்தப்படும்போதே மனந்திரும்ப உமதாவியின் பெலன் தாரும். ஆமென்.”