பாவத்தின் தண்டனை
தியானம்: 2026 நவம்பர் 18 புதன் | வேத வாசிப்பு: 1சாமுவேல் 2:27-36

ஒப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும் (1சாமு.2:34).
ஒரு ஆசாரியனாக இருந்தபோதிலும், ஏலி தன் குமாரரை கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் வளர்க்கக்கூடாமல் போயிற்று. அவர்களை அவன் பல தடவை எச்சரித்தும், அவர்கள் அந்த எச்சரிப்பின் சத்தத்திற்குக் செவி கொடுக்காமல் போனார்கள். அதனால் கர்த்தருடைய வார்த்தை ஒரு தேவனுடைய மனுஷனுக்கு உண்டாகி, அவன் இப்பொழுது ஏலியை கர்த்தரின் நாமத்தினாலே வந்து எச்சரிப்பதைக் காண்கிறோம்.
ஒரேநாளிலே அவனுடைய இரண்டு குமாரரும் இறப்பார்கள் என்றும், ஆசாரிய ஊழியம் இனி அவனுடைய சந்ததிக்கு இல்லையென்றும், அவர்கள் ஆசாரிய ஊழியத்திற்காகக் கையேந்தி நிற்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிப்பு கிடைத்தது. அது நடந்தும் முடிந்தது. ஏலி ஒரு ஆசாரியனாக இருந்தும், அவனுடைய குடும்பத்தைச் சரிவர கடவுள் பயத்தில் நடத்தக் கூடாமல் போனது எப்படி? அதே ஆலயத்தில் அன்னாள் விட்டுச்சென்ற சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் வளர்ந்தது எப்படி? ஏலியின் பிள்ளைகள் இப்படியாக துஷ்டராக இருந்ததற்கு என்ன காரணம்?
எல்க்கானாவும், அன்னாளும் மனமொத்து, தங்கள் மகனை தேவனுக்காகப் பெற்றுக்கொண்டோம், அவனைத் தேவனுடைய சமுகத்திலேயே விடுவோம் என்று கொண்டு வந்து பயபக்தியோடு விட்டுச்சென்றனர். ஆனால் இங்கே ஏலியின் குமாரரோ, மக்கள் பயபக்தியோடு தேவனுக்கென்று பலியிடும் பலியிலிருந்து, தங்கள் வாய்க்கு ருசியாகப் பொறுக்கி எடுத்தனர். தேவனுடைய நாமத்தைக் கனவீனப்படுத்தினர். தேவநாமத்தைக் கனவீனப்படுத்தும் வகையில் ஏலியின் குமாரர் நடந்தனர். ஆனால், தேவனுடைய நாமத்தைக் கனப்படுத்தியபடி இன்னொரு பிள்ளை வளருகிறது.
நமது குடும்பங்களிலே நாம் பிள்ளைகளை வளர்க்கும்போது, தேவனுடைய நாமத்துக்கு உரிய கனத்தைக் கொடுக்கவேண்டும் என்று நாம் சொல்லி வளர்க்கிறோமா? ஆலயத்திலே எப்படியாக அமர்ந்திருக்கவேண்டும், ஜெபிக்கும்போது எப்படியாக இருக்கவேண்டும், காணிக்கை போடும்போது என்ன மனநிலையோடு போடவேண்டுமென்று இப்படியான சின்னச் சின்ன காரியங்களையும் நாம்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். நாம் சிறிய காணிக்கை போடுவது போதாதென்று, பிள்ளைகள் கைகளில் சில்லறைக் காசுகளைக் கொடுத்து விடுவதுண்டு. நாம் சிறிய பணத்தைப் போட்டாலும் பரவாயில்லை, பிள்ளைகள் கைகளில் பெரிய நோட்டுக்களைக் கொடுத்து, கர்த்தருக்குக் கொடுப்பதற்கு அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். இவைகளே பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்கள் கர்த்தரைக் கனப்படுத்த ஊக்குவிக்கும்.
ஜெபம்: “தகப்பனே, தேவனுடைய நாமத்தை கனப்படுத்தும்படியாக பிள்ளைகளை வளர்ந்தெடுக்க பெற்றோராகிய எங்களுக்கு உதவிச்செய்ய ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.”