கர்த்தரின் சத்தம் கேட்கிறதா?
தியானம்: 2026 நவம்பர் 19 வியாழன் | வேத வாசிப்பு: 1சாமுவேல் 3:1-21

சாமுவேல் வளர்ந்தான் …. அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை (1சாமு. 3:19).
தனது மனைவிக்குக் காது கேட்பதில்லை, அது எவ்வளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை சோதித்துப் பார்க்கலாம் என்று எண்ணிய கணவர், தூரத்தில் இருந்து மனைவியைக் கூப்பிட்டார். பதில் இல்லை. சற்று அருகில் வந்து கூப்பிட்டார். அப்போதும் பதில் இல்லை. இன்னமும் பக்கத்தில் வந்து, எத்தனை தரம் நான் கூப்பிடுகிறேன், ஏன் பதில் இல்லை என்றார். மனைவியோ, “நீங்கள் முதல்தரம் கூப்பிட்டதில் இருந்து பதில் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறேன்” என்றாள். அப்பொழுதுதான் தனக்குத்தான் காது கேட்கவில்லை என்பது கணவருக்குப் புரிந்தது. இதுபோலவே, தேவன் பேசுகின்றபோதும் நாம் நமது செவிகளை மந்தமாக வைத்திருப்போமேயாகில் நமக்கு எதுவுமே கேட்காது. “தேவன் பேசுவதைக் கேட்க எவன் ஆயத்தமாய் இருக்கிறானோ, அவனுடனேயே தேவன் பேசுவார்” என்றதான இந்த வாக்கியத்தை நான் ஒரு புத்தகத்தில் வாசித்தபோதுதான் நான் என்னை உணர்ந்தேன்.
கர்த்தர் சாமுவேலைக் கூப்பிட்டது, சாமுவேலுக்கு நன்றாகவே கேட்டது. ஆனால் அவன் சிறுவனாக இருந்தமையால், தன்னைக் கூப்பிட்டது கர்த்தரா? அல்லது ஆசாரியனாகிய ஏலியா? என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. அதனாலேயே அவன் மூன்றுதடவைகளும் ஏலியினிடத்தில் போய் என்னைக் கூப்பிட்டீரா என்று வினாவுகிறான். இது கர்த்தருடைய சத்தம் என்பதை உணர்ந்துகொண்ட ஏலி, “ஆண்டவரே பேசும் அடியேன் கேட்கிறேன்” என்று சொல்லும்படிக்கு சாமுவேலை வழிநடத்துவதைக் காண்கிறோம்.
நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான பகுதி என்னவெனில், ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்யும் ஆசாரியனாக, வயதில் மூத்தவராக ஏலி இருக்கும்போது, கர்த்தர் சிறுவனாகிய சாமுவேலினிடத்தில் பேசியதின் காரணம் என்ன? ஏலியின் குமாரரின் அக்கிரமங்களைக் குறித்து, ஏற்கனவே தேவன் ஏலியை எச்சரித்து, நியாயத்தீர்ப்பையும் சொல்லிவிட்டார். இப்போது அது நிறைவேறப்போவதைக் குறித்து, சாமுவேல் மூலமாகப் பேசுகிறார். மறு நாளிலே, ஆசாரியனாகிய ஏலி, சிறுவனாகிய சாமுவேலிடம் கர்த்தர் பேசியது என்னவென்று கேட்டு அறிவதைக் காண்கிறோம்.
பெரியவன், சிறியவன், ஆசாரியன், ஆலயப் பணிவிடைக்காரன் என்று கர்த்தர் பார்க்கிறதில்லை. தமக்கு உண்மையாய் இருப்பவன், தனது வார்த்தைக்குச் செவிகொடுப்பவன் எவனோ அவனுடனேயே கர்த்தர் பேசுகிறார். இயேசு, “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்றாரே, அதன் அர்த்தம் என்ன? இயேசுவும் கூட சிறுபிள்ளைகளை தம்மிடம் சேர்த்துக் கொண்டாரே. சரி, எல்லாருக்கும் தானே காது இருக்கிறது. செவிகொடுக்கக் கூடிய காது நம்மில் யாருக்கு இருக்கிறது?
ஜெபம்: ஆண்டவரே, உம்முடைய சத்தத்தை கேட்கமுடியாதபடி, தடையாயிருக்கிற பாவங்களை எங்களுக்கு மன்னியும். நீர் எங்களோடு பேசும்படியாக உமது சமுகத்தில் ஆயத்தப்பட்டு காத்திருக்கிறோம். ஆமென்.