கிருபையை உதாசீனம் செய்யாதே
தியானம்: 2026 நவம்பர் 20 வெள்ளி | வேத வாசிப்பு: 1சாமுவேல் 4:1-22

தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றான் (1சாமு.4:22).
நாம் வாழும்பகுதியில் பராமரிப்புபணிகளுக்கென மின்சாரத் தடை ஏற்படுவதுண்டு. இது அரசாங்கத்தால் அறிவிக்கப்படும்போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் அறிவிப்பார்கள். எவ்வளவுதான் ஆயத்தத்தோடு இருந்தாலும், அந்த நேரம் வருகிறபோது யாருமே சந்தோஷமாக அந்த நேரத்தை எதிர்கொள்வது கிடையாது. ஒருவரையொருவர் சந்திக்கும்போது, இதைக் குறித்ததான மன உளைச்சலையும், சலிப்புத்தன்மைகளையும், கஷ்டங்களையுமே பகிர்ந்து கொள்வார்கள். சிலருக்கு இது பழகிப்போன ஒன்று.
கர்த்தருடைய பெட்டி தேவ பிரசன்னத்தை உறுதிப்படுத்துகின்ற ஒன்று. ஆனால் இது ஆசரிப்புக் கூடாரத்தில் இருக்கவேண்டும், ஆசாரியர் தவிர அதை யாரும் தொடக்கூடாது. ஆனால் இங்கே கர்த்தருடைய பெட்டி தங்களுடன் இருந்தால் கர்த்தருடைய மகிமை தங்களுடன் இருக்கும் என்று சொல்லி கர்த்தருடைய பெட்டியை நகரத்துக்குள்ளே கொண்டுவருகிறார்கள். அந்த நேரத்திலே ஒரே ஆரவாரமும், பெரிய சத்தமுமாக தங்களது சந்தோஷத்தை மக்கள் வெளிப்படுத்தினார்கள். அந்நேரத்தில் அது பெலிஸ்தருக்குப் பயத்தை உண்டுபண்ணிற்று. காரணம், இஸ்ரவேலரின் தேவனின் மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டும், அவர் எகிப்திலிருந்து அவர்களை விடுதலையாக்கிய விதங்களைக் கேள்வியுற்றும், அவர்களுக்குள் அவரைக் குறித்ததான பயமும், திகிலும் குடிகொண்டிருந்தது. அதனால் அவர்கள் சண்டையிட்டு, இஸ்ரவேலரை முறியடித்து, கர்த்தருடைய பெட்டியைக் கைப்பற்றிக்கொண்டனர். ஏலியின் குமாரரான ஒப்னி, பினெகாசின் அக்கிரமங்களும் இத்தோல்விக்குக் காரணமாயின. ஏலி, கர்த்தருடைய பெட்டி கையைவிட்டுப் போனதைக் கேள்விப்பட்ட போது, விழுந்து பிடரி எலும்பு முறிந்து செத்துப்போனான். அவனது மருமகள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்து, தனது கணவனும், மாமனும் இறந்துபோன செய்தியைக் கேள்வியுற்று அதிர்ச்சியில் பிள்ளையைப் பெற்று இறந்துபோனாள். கர்த்தருடைய பெட்டி பிடிபட்டதால் கர்த்தருடைய மகிமை இஸ்ரவேலை விட்டுப்போயிற்று என்று அறிக்கையிட்டாள்.
நாம் இன்று கிருபையின் காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். எனினும், அவரது கிருபைகளை உதாசீனம் செய்கிறவர்களாய் வாழுகிறோமா? கர்த்தரின் கிருபை நம்மைவிட்டு விலகுமாயின் நமது நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? பாவம் பெருகின இடத்தில் கிருபையும் பெருகிற்று. அதற்காகப் பாவம் செய்யலாமா என்று பவுல் நம்மைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளார். கர்த்தர் தமது கிருபையை விலக்குவதில்லை; அது விலகுவதற்கு நாமேதான் காரணமாகிறோம். ஆகவே, விசேஷமாக இந்த நாட்களில் எச்சரிப்புடன் வாழுவோம். தேவனுடைய வார்த்தையை உதாசீனம் செய்யாதிருப்போம்.
ஜெபம்: நல்ல ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தில் நிலைத்திருக்க கிருபைகளைத் தந்து நடத்துகிறீர். நாங்கள் அதை அலட்சியப்படுத்திடாதபடி ஜாக்கிரதையோடிருக்க உதவி செய்யும். ஆமென்.