வலுகட்டாயமாக முடியுமா?
தியானம்: 2026 நவம்பர் 21 சனி | வேத வாசிப்பு: 1சாமுவேல் 5:1-12

செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று (1சாமு. 5:12).
இன்றும் சிலர் ஆண்டவரைப் பார்க்கிலும், ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெயிலும், தண்ணீரிலும் அதிக நம்பிக்கை வைத்திருப்பதைக் காணலாம். ஒரு பாட்டிலில் எண்ணையையோ, அல்லது தண்ணீரையோ ஆசீர்வதித்துக் கொண்டுவந்து தங்கள் வீடுகளில் வைத்துவிட்டால் ஆண்டவரின் ஆசீர்வாதம் எப்போதும் தமக்கு உண்டு என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இது போலவே அன்றும் பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டி இஸ்ரவேலர் மத்தியில் இருந்தால், அது அவர்களுக்குப் பெலனாய் இருக்கும் எனவே அதைப் பிடித்து, தமக்கு மத்தியில் வைத்திருந்தால் அது தங்களுக்கு நன்றாக இருக்கும் என்று எண்ணினார்கள். கர்த்தருடைய பெட்டியை கொண்டுவந்து தங்கள் தெய்வமாகிய தாகோனின் கோவிலிலே வைத்தார்கள். மறுநாள் தாகோன் சிலை கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக விழுந்து கிடந்தது. மறுநாளில் அதைத் திரும்பவும் எடுத்து அதன் ஸ்தானத்தில் வைத்தார்கள். மறுநாளும் அது விழுந்து அதன் தலை, அதன் இரு கைகளும் உடைந்து வாசற்படியில் கிடந்தது. அதுமட்டுமன்றி அங்கிருந்த அனைவரும் மூலவியாதியினால் பாடுபட்டார்கள். கர்த்தருடைய பெட்டி இங்கு இருப்பதினால்தான் தங்களுக்கு இந்தக் கஷ்டம் என்று உணர்ந்து இப்போது அதை அகற்றுவதற்கு பிரயத்தனப்படுகிறார்கள்.
அன்பானவர்களே, நாம் வலுக்கட்டாயமாக ஆண்டவரையோ, அவரது ஆசீர்வாதங்களையோ நமக்காக எடுத்துக்கொள்ள ஒருக்காலமும் முடியாது. கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையின்படி நடக்கிறவனே செழிப்பான் என்றும், இரவும் பகலும் அவருடைய வார்த்தைகளைத் தியானித்து அதன்படி நடக்கிறவனே பாக்கியவான் என்றும் வார்த்தை சொல்லுகிறது. நாம் அவருக்கு எவ்வளவுக்கு அருகில் செல்லுகிறோமோ அவ்வளவுக்கு அவரது சமுகத்தையும் நாம் உணரலாம்.
கர்த்தருடைய வழிநடத்துதல் வேண்டுமென்றால் அவருடைய வார்த்தையைத் தியானிக்க வேண்டும். அதுவே நமது கால்களுக்குத் தீபமும், நமது பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது, கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ அவன் ஆசீர்வதிக்கப்படுவான் என்று சங்கீதங்களில் எழுதப்பட்டுள்ளது. சிலர் குறுக்கு வழியில் பணக்காரர் ஆவதுபோல, கர்த்தருடைய ஆசீர்வாதத்தையும் நாங்கள் நினைத்தபடி சம்பாதித்து விடலாம் என்று நினைப்போமேயாகில் நம்மை நாமே ஏமாற்றுகிறவர்களாய் இருப்போம். கர்த்தர் நீதியுள்ளவர்; நமது வாழ்விலே நாம் எங்கே நிற்கிறோம் என்பதை நிதானித்து அறிந்து, நம்மை மாற்றிக்கொள்வோம்.
ஜெபம்: அன்பின் பிதாவே, குறுக்குவழியில் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுவிடலாம் என எண்ணி எங்களையே ஏமாற்றிக்கொள்ளாமல், உமது வசனத்துக்கு நடுங்கி கீழ்ப்படிந்து நடக்க எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.