என்னைத் தள்ளினார்கள்
தியானம்: 2026 நவம்பர் 22 ஞாயிறு | வேத வாசிப்பு: 1சாமுவேல் 8:1-22

அப்பொழுது கர்த்தர்: … அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள் (1சாமு.8:7).
இக்கரைக்கு அக்கரை பச்சையென்று பொதுவாகச் சொல்லுவார்கள். இது சாதாரணமாக மனிதராகிய நம் எல்லோருடைய மனநிலை எனலாம். வெயில் கொளுத்தும்போது, ஐயோ மழையைக் காணவில்லையே என்போம். மழைக்காலம் தொடங்கிவிட்டால், இதென்ன இப்படிக் கொட்டுகிறது, ஒரு வேலையும் செய்யமுடியவில்லையே என்று சினந்துகொள்வோம்.
இங்கே சாமுவேலுக்கு வயதாகி, அவன் தனது குமாரரை தனது ஸ்தானத்திலே நியமிக்க எத்தனித்தபோது, மக்கள் அதை நிராகரித்து, “உமது குமாரர் உம்மைப் போல இல்லை. எனவே மற்ற ஜாதிகளில் இருப்பதுபோல எங்களுக்கு ஒரு ராஜாவை நியமிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்கள். இதினிமித்தம் சாமுவேல் ஜனங்களோடு வாதிட்டுக்கொண்டிருக்கையில், கர்த்தர் சாமுவேலிடம், அவர்கள் கேட்டபடியே ஒரு ராஜாவை நியமிக்கும்படிக்குச் சொல்லுகிறார். “அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு என்னைத்தான் தள்ளினார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.
எகிப்திலிருந்து விடுதலையாக்கி, இம்மட்டும் வழிநடத்தி வந்த கர்த்தரை நம்பாமல், தங்களை ஆளுவதற்கென்று ஒரு ராஜாவை கேட்டுக் கொண்டார்கள் இஸ்ரவேலர். இதைக்குறித்து சாமுவேல் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுத்தார்கள். கடைசியில் தேவன் அவர்களுடைய விருப்பத்திற்கே விட்டுவிட்டார். இதுபோலவே, நாம் ஒரு தீர்மானத்தை எடுக்கும்போதும், நமது சுயமா? அல்லது தேவனுடைய சித்தமா? என்றதான போராட்டம் உண்டாகும். நாமும் பல தடவைகளில் நமது சுயத்தின்படியே தீர்மானங்களை எடுத்துவிட்டு, பின்னர் அந்தத் தீர்மானத்தில் தேவனுடைய ஆசீர்வாதம் வரவேண்டும் என்று எதிர்பார்த்து நிற்போம். நமது தீர்மானங்களில் தேவனை அப்படியே தள்ளிவிடுவோம். அந்நேரங்களிலும் கர்த்தர் நம்மைப் பார்த்து, “உங்களை ஆளாதபடிக்கு என்னை நீங்கள் தள்ளி விட்டீர்களே” என்று கூறக்கூடும்.
நமது வாழ்வில், நமது தீர்மானங்களில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? நமது மாம்ச விருப்பங்களுக்கும், சுயசித்தங்களுக்குமா? அல்லது தேவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவருடைய சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, காத்திருக்கிறோமா? நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன் என்கிறார் கர்த்தர் (சங்.46:10). அவருடைய கால நேரத்துக்குக் காத்திருக்க நாம் ஆயத்தமா?
ஜெபம்: “அன்பின் தேவனே, எங்களது சுயசித்தம் ஒன்றும் வேண்டாம். பரலோகத்தில் உமது சித்தம் செய்யப்படுவதுபோல பூலோகத்தில், எனது வாழ்விலும் உம் சித்தமே நிறைவேற எங்களை ஒப்புவிக்கிறோம். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.”