பொல்லாப்பு நாசமாக்கும்

தியானம்: 2026 நவம்பர் 24 செவ்வாய் | வேத வாசிப்பு: 1சாமுவேல்12:1-25

YouTube video

நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான் (1சாமு.12:25).

உடல்நலம் சிலநாட்களாக நன்றாகவே இல்லையென்று உணர்ந்து, மருத்துவரை நாடினால், முதலாவது இரத்தத்தை எடுத்து சோதனை பண்ணுவார்கள். அதில் நமக்குச் சக்கரை வியாதியென்று கண்டுபிடித்துவிட்டாலோ, அவ்வளவுதான். நாம் இனிப்புள்ள பண்டங்களையெல்லாம் அடியோடே மறந்துவிட வேண்டியதுதான். எவ்வளவுதான் ஆலோசனைகளையும், மருந்துகளைக் கொடுத்தாலும் எந்த மருத்துவரும் இனிப்பு சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று சொல்லவேமாட்டார்கள். எவ்வளவுக்கு அதை விலக்கிட முடியுமோ விலக்கிடுங்கள் என்றே சொல்வார்கள். ஏனெனில் அது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் விஷமாக மாறிவிடும். அதை நாம் கேட்டு நடக்கிறோமா?

ஆண்டவரும் ஆசீர்வாதங்களைக் கொடுப்பார், ராஜா வேண்டும் என்றதும் ராஜாவைக் கொடுக்கிறார். பசியென்றதும் மன்னாவைக் கொடுக்கிறார். தாகம் என்றதும் தண்ணீரைக் கொடுக்கிறார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் கேட்பது ஒன்றுதான், “உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் என்னிடத்தில் அன்புகூரு. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். பொல்லாப்பை விட்டு விலகு. பொல்லாப்பைச் செய்தால் நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள்” என்று. ஆனால் அவர்கள் கேட்டு நடந்தார்களா?

கர்த்தர் நம்மிடம், நமது பணம் சொத்தைக் கேட்கவில்லை. மாறாக, அவருக்கு நாம் உண்மையாய் இருக்கவேண்டும். அவரது கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும். அவருக்குக் கீழ்ப்படியவேண்டும். நாம் செய்வது ஒரு சிறிய ஊழியப்பணியாக இருக்கலாம், அல்லது பெரிய ஊழியக்காரனாக இருந்து, பல சபைகளுக்கு மேய்ப்பனாகக் கூட இருக்கலாம். அல்லது நமது குடும்பத்தைப் பராமரிக்கும் ஒரு குடும்பப் பெண்ணாகக்கூட இருக்கலாம். எல்லாரிடத்திலும் ஆண்டவர் எதிர்பார்க்கும் தகுதி ஒன்று மாத்திரமே. அது “உண்மைத்துவம்” ஆகும். இந்த உண்மைத்துவத்தை மதிக்காமல் பொல்லாப்புக்கு நமது வாழ்வில் இடமளிப்போமானால் அதன் விளைவுகளையும் நாம் சந்திக்க நேரிடும்.

அப். பவுல் பல படிப்புகளையெல்லாம் கற்றுத் தேர்ந்த ஒரு அறிவாளியாக இருந்தார். அவர் தேவனுடைய அழைப்பைப் பெற்று ஊழியம் செய்தபோது, எல்லாவற்றையும் குப்பையென்று எண்ணுகிறேன் என்கிறார். ஆதியாகமத்திலிருந்து, வெளிப்படுத்தல் வரைக்கும் ஆண்டவர் இந்த ஒரே விஷயத்தையே மீண்டும், மீண்டும் வலியுறுத்துவதை நாம் உணரவேண்டும். கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்போம்.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, உமது எச்சரிப்பின் சத்தத்துக்குச் செவிகொடுத்து உண்மையும் உத்தமமுமாய் நடக்க உமதாவியின் பெலன் தாரும். ஆமென்.