எதுவரைக்கும்?
தியானம்: அக்டோபர் 29 செவ்வாய்; வாசிப்பு: சங்கீதம் 13:1-3
‘என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து,
எனக்குச் செவிகொடுத்தருளும்.’ (சங்கீதம் 13:3)
கணவனை இழந்த விதவைத்தாய் ஒருவர் தன் மகனை இனக் கலவரத்திலும், இளைய மகளை வியாதியிலும் இழந்துவிட்டார். கஷ்டங்களும் துன்பங்களும் தொடர்ந்தன. ‘இன்னும் எதுவரைக்கும்?’ என்று கூறி பெருமூச்சு விட்டார் இத் தாயார். கவலை, வியாதி, கஷ்டம் என்று மாறி மாறி நம்மை வாட்டும் போது, இவைகள் எதுவரைக்கும்; எப்போது விடிவுவரும் என்று நாம் அங்கலாய்க்கிறோம். கேள்விகள் எழுவது தவறல்ல; ஆனால், கேள்விகள் மத்தியில் நாம் தேவனை நியாயம் விசாரிப்பதும், குறைகூறுவதும் நமக்கு நல்லதல்ல.
இப்படியான அனுபவத்தினூடாகவே தாவீதும் கடந்துசென்றான். ‘கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்’ என்று கதறினார். ‘எதுவரைக்கும்’ என்ற கேள்வி அடிக்கடி தாவீதின் வாயிலிருந்து புறப்பட்டது. ஆனாலும், இறுதியிலே, ‘நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்’ என்று பாடி முடிப்பார். தாவீதின் வாழ்வில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய பாடம் இதுதான்.
நாம் ஒரு காரியத்தை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. கர்த்தர் நம்மை மறப்பாரா? ஒருபோதும் இல்லை. ஆனால், அவர் மறந்துவிட்டாரோ என்று நாமே தான் நினைக்கிறோம். அது எப்போது நிகழுகிறது? தேவனின் ஆறுதலளிக்கும் வார்த்தைகளைக்கூட நமக்குப் பாரம் என நினைக்கும்போது (எரே.23:38,39), வேதத்தை நாம் மறக்கும்போது, கர்த்தர் நம்மை மறப்பதாக எண்ணுகிறோம். உண்மைதான், நாம் அவர் வேதத்தை மறந்தால், அவர் எப்படி நம்முடன் இடைப்படமுடியும். ஆகவேதான், ‘நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய்; ஆகையால், நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்’ (ஓசியா 4:6) என்றார் கர்த்தர். நமது பாவமே தேவனைவிட்டு நம்மைப் பிரித்துப்போடுகிறது.
ஆகவே, அந்தரங்க பாவங்களோ, பகிரங்கப் பாவங்களோ, சிறியதோ, பெரியதோ அவற்றை மனப்பூர்வமாக அறிக்கைசெய்து விட்டுவிட நாம் பயப்படக் கூடாது. அப்போதுதான் கர்த்தரின் முகத்தைத் தேடிக் கண்டடைய முடியும். எதுவரைக்கும் நமக்கு சஞ்சலம்? அவரை விசுவாசித்து, நூற்றுக்கு நூறு சதவீதம் அவரிலே தங்கி வாழும்வரைக்கும் சஞ்சலம்தான். எதுவரைக்கும் சத்துரு நம்மேல் தன்கையை உயர்த்துவான்? நமது பாவத்திலிருந்து நாம் வெளிவரும்வரைக்கும் சத்துரு தன் கையை உயர்த்துவான்? நாம் பாவத்திற்கு நீங்கலாகி தேவனால் பிறக்கும்போது, பொல்லாங்கனின் கைகள் விலகிவிடும்; தேவனுடைய ஓங்கிய புயமும் பலத்த கரமும் நம்மை மூடிக்கொள்ளும். அதன்பின், என்ன புயல் வந்தாலும் நாம் அசைக்கப்படவே மாட்டோம்.
ஜெபம்: “பிதாவே, என்றும் உம்மையே சார்ந்து, உமக்குள் உண்மையாய் வாழ்ந்து, எந்தச் சூழலிலும் உமக்குள் மகிழ்ந்திருக்கக் கிருபை தாரும்.”