Daily Archives: April 3, 2018

ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 3 செவ்வாய்

“..நீங்களே என் சாட்சிகள்; என்னைத் தவிர தேவனுண்டோ” (ஏசா.44:8) இவ்வாக்குப்படி தேவன் தாமே தமது நாம மகிமைக்காக இணைத்த குடும்பங்களுக்குள் உள்ள பிரிவினைகள் கருத்து வேறுபாடுகள் நீங்கவும், அந்தக் குடும்பங்களுக்குள் தேவ சமாதானமும் அன்பின் ஐக்கியமும் காணப்பட ஜெபிப்போம்.

மனுஷரிடமல்ல, இயேசுவிடம்…

தியானம்: 2018 ஏப்ரல் 3 செவ்வாய்; வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 1:15-22

“…யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, …பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து…” (மத்தேயு 27:3).

நேற்றைய தினத்தில் நாம் தியானித்துபோல, பேதுருவின் வாழ்வில் நடந்த அந்தப் பெரிய மாற்றம் நம்மிலும் ஏற்படவேண்டும். நம்மிலும் தேவன் நிர்ணயித்தவைதான் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவ சித்தத்துக்கு நம்மை விட்டுக்கொடுத்து, இயேசுவின் சாயலை நாமும் வெளிப்படுத்தவேண்டும்.

ஆனால் யூதாஸ் அதில் தோற்றுவிட்டான். யூதாசும் பேதுருவும் இயேசுவுடன் இருந்தவர்கள். என்றாலும், யூதாஸ் கலிலேயன் அல்ல; அவ்வளவுதான் வித்தியாசம்; வேறு வேறுபாடுகள் இல்லை. யோவான் ஸ்நானனின் பிரசங்கத்தாலோ, இயேசுவின் பார்வையினாலோ ஏவப்பட்டு இயேசுவின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்தவன் யூதாஸ் என்று நம்பப்படுகிறது. என்றாலும் சீஷரோடு இயேசுவின் ஊழியத்தில் இருந்தபோது, கிடைக்கும் பண உதவிகளுக்கும் காணிக்கைகளுக்கும் இவனே பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தான். ஆனால், இவனுக்குள் இயல்பாகவே பொருளாசை இருந்திருக்கிறது. என்றாலும், தனது கடமையை சரிவரச் செய்து, தன் பெலவீனத்தை மேற்கொண்டு வெற்றிபெற அவனுக்குத் தருணம் இருந்தது. ஆனால் பொருளாசை மேலிட்டதால் முப்பது வெள்ளிக் காசுக்கு ஆசைப்பட்டுக் கெட்டுப்போனான்.

என்றாலும், இயேசுவின் மரண உபாதைகளைக் கேள்விப்பட்டு மனதிலே குத்துண்டான், வேதனைப்பட்டான். அது நல்லது. ஆனால் அவன் யாரிடம் போனான் என்பதில்தான் அவனது வாழ்க்கை தடுமாறிவிட்டது. அந்த முப்பது வெள்ளிக்காசையும் எடுத்துக்கொண்டு பாடுபடும் இயேசுவின் பாதத்தில் போய் விழுந்திருந்தால் காரியம் வேறாக இருந்திருக்கும்! அவனோ யார் அந்தப் பணத்தைக் கொடுத்தார்களோ, அவர்களிடம் போனான். அதனால் தன் வாழ்வையே இழந்து போனான். இயேசுவின் சாயலைத் தரித்து ஏனைய சீஷர்களைப்போல, இயேசுவைப் போல் மாறவேண்டிய ஒருவன், தலைகீழாக விழுந்து வயிறு வெடித்துச் செத்துப் போனான். இன்னும் சொன்னால், ஊழியத்துக்காக இன்னொருவன் தெரிந்தெடுக்கப்பட்டானே தவிர, யூதாஸ் தன் இடத்தை இழந்தே போனான்.

இந்த நிலைமை நம்மில் யாருக்கும் வேண்டாம். இப்போதே பெலவீனங்களோடும், தவறுகளோடும் இயேசுவின் பாதம் விழுவோம். அவர் தம்மைப் போல நம்மையும் நிச்சயமாய் மாற்றுவார்.

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவான் 1:9).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, யூதாஸின் நிலை எனக்கு வேண்டாம், எனக்கு நீர் கொடுத்திருக்கிற தருணங்களைத் தவறவிடாமல் நான் மனந்திரும்பி வாழ உதவியருளும். ஆமென்.

சத்தியவசனம்