ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 28 புதன்
ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படியாக (மத்.4:23) ஏற்படுத்தப்பட்ட எல்லா மிஷனரி இயக்கங்களுக்காகவும், ஸ்தாபன தலைவர்களுக்காகவும், அனுப்பப்பட்டுள்ள மிஷனரிகளின் சுகம் பாதுகாப்புக்காக ஜெபிப்போம். மிஷனரிப்பணிகளை பணத்தாலும் ஜெபத்தாலும் தாங்கும் குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதித்து செழிக்கச் செய்ய வேண்டுதல் செய்வோம்.
சீஷனுக்குரிய குணநலன்கள்
தியானம்: 2026 அக்டோபர் 28 புதன் | வேத வாசிப்பு: 1தீமோத்தேயு 1:18-20

… நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு (1தீமோத்தேயு 1:18)
வாலிபனான தீமோத்தேயுவுக்கு பவுல் பலவிதங்களில் சவாலிட்டார். இங்கே ”நல்ல போராட்டம்பண்ணு” என்றதொரு சவால் தீமோத்தேயுக்கு வருகிறது. நற்செய்தி பரப்புதல், சபையினரைப் பயிற்றுவித்தல் எல்லாமே தீமோத்தேயுவுக்குப் போராட்டங்களே. ஆனால் போரில் ஈடுபடும்போது “நல்மனச்சாட்சியையும்“ “விசுவாசத்தையும்“ விட்டுவிடக்கூடாது என்று பவுல் அறிவுறுத்துவதையும் காண்கிறோம். இவ்விரு காரியமும் மிகவும் முக்கியமானவை. ஆனால் இன்று “விசுவாசமானது“ வெற்றி செழிப்பு என்ற உலகரீதியான அர்த்தத்தால் மூடப்பட்டுவிட்டது. “நல்மனச்சாட்சி“ என்பது நல்லபெயர் எடுத்தால் அவர் நல்மனச்சாட்சி உள்ளவர் என்று சொல்லத்தக்கதாக மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தேவனுக்கு எதிரான எத்தனையோ தாறுமாறுகள் ஏற்பட ஏதுவாகிவிட்டது.
இன்றைய வாசிப்புப் பகுதியிலே பவுல் இருவரின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். இவ்விரு ஊழியர்களுமே தங்கள் நல்மனச்சாட்சியைத் தள்ளிவிட்டவர்கள், தவறான போதனைகளை பரப்பியவர்கள், தேவனையும் சுவிசேஷத்தையும் தூஷித்தவர்கள். ஆனால் உன்னதமான ஊழியத்துக்கு அழைக்கப்பட்ட இவர்கள் இப்படியாக தவறிப்போவது எப்படி? ஒன்று, உலக காரியமோ, ஆவிக்குரிய விஷயமோ எதுவானாலும் அவற்றை இவர்கள் தமக்கு சாதகமாகத் திருப்பி, தமக்குப் பலனுண்டாக “இது இப்படித்தான்” என்று எல்லைகளைப் போட்டுவிடுகின்றனர். “எனக்கு அதிகாரம் உண்டு” என்று அதிகாரப் பொறுப்பையும் எடுத்துவிடுவார்கள். அதனால் உண்மைகள் மறைக்கப்பட்டுவிடுகின்றன. அடுத்தது இவர்கள் தமக்கென்று ஒரு சிறு குழுவை அமைத்து, அதற்குள்ளே ஒருவரையொருவர் பாராட்டிவிட்டால் போதும்; தாங்கள் செய்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்துவிடுவர். நாளடைவில் தமது நல்மனச்சாட்சியைத் தள்ளிவிட்டு, உணர்வு கெட்ட மனச்சாட்சியைத் தரித்துக் கொள்கின்றனர். சமுதாயத்தில் அவர்களுக்கு இருக்கும் பெயர், அந்தஸ்து, வசதி வாழ்க்கை இவையாவும் சேர்ந்து இவர்களது மனச்சாட்சியை நாளடைவில் மாற்றிவிடும். இப்படிப்பட்ட படிப்படியான வீழ்ச்சிகளில்தான் தவறான போதனைகளும் கொள்கைகளும் உருப்பெறுகின்றன. நல்மனச்சாட்சியைத் தள்ளிவைத்தல் விசுவாசக்கப்பலை சேதப்படுத்துவது போலாகும். ஆ10கவே சொந்த கொள்கைகளையும், நமக்குச் சாதகமான புகழ்ச்சிகளையும் தவிர்த்து, நல்மனச்சாட்சியையும் விசுவாசத்தையும் காத்துக்கொள்ளும் நல்ல போராட்டத்தைப் போராட முன்வருவோமாக.
ஜெபம்: “கர்த்தாவே, நீர் அழைத்த அழைப்பிற்கு பாத்திரவானாக நடந்து, எந்த நிலையிலும் நல்மனச்சாட்சியையும் விசுவாசத்தையும் காத்துக்கொண்டவர்களாக, நல்ல போராட்டத்தைப் போராட உமது ஆவியின் பெலன் தாரும். ஆமென்.”