ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 30 புதன்

கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார் (சங்.94:14) சென்றுபோன நாட்களில், மனிதர்களால் மறக்கப்பட்ட வேளைகள், கைவிடப்பட்ட சூழ்நிலைகளிளெல்லாம் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருந்து ஒன்பது மாதங்களை கடந்துவரப் பண்ணினார். கர்த்தருக்கே சகல கனத்தையும் மகிமையையும் செலுத்தி ஜெபிப்போம்.

இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம் (1கொரி. 15:51).

கிறிஸ்துவே என் எஜமான்!

தியானம்: 2026 செப்டம்பர் 30 புதன் | வேத வாசிப்பு: ரோமர் 6:11-23

YouTube video

அவரிடத்தில் பாவமில்லை. அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை (1யோவான் 3:5,6).

“நீங்கள் …..கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோம.6:14). அதற்காக இப்போது நாம் விடுதலையோடு பாவம் செய்யலாமா என்று தொடர்ந்து பவுல் கேட்கிறார். அப்படியல்ல! இன்னுமொரு வாக்குறுதியும் நமக்கு உண்டு. “பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன்; முடிவோ நித்தியஜீவன்” (ரோம.6.22).

இவ்வாக்குகள் யாவும் “நாம் இன்னும் பாவத்திற்கு அடிமைகளல்ல” என்பதை உறுதிப்படுத்துகின்றன. பாவம் செய்வது வேறு; பாவத்தில் தொடர்ந்து ஜீவிப்பது வேறு. நம் அனைவருடைய வாழ்விலும் பெலவீனமான சில பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் பகுதிகள் பிசாசுக்கு சாதகமாக அமையக்கூடுமானதால் அவைகளில் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். தவறி பாவத்தில் விழுந்தாலும் விழுந்த இடம் நல்லதென்று தொடர்ந்து அதிலே கிடக்கின்றவனும், தன் பாவத்தை நியாயப்படுத்துகிறவனும் தேவனால் பிறந்தவனாக, கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறவனாக இருக்கமுடியாது. அப்படிப்பட்டவன் தேவன் அருளும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதில்லை. எவன் தன் பாவத்தை உணர்ந்து, விழுந்த இடத்தைவிட்டு எழுந்து, அதை முற்றிலுமாக அருவருத்து, புதுஜீவியத்துக்குள் வருகிறானோ, அவனே விடுதலை பெற்றவன்.

அருமையான சகோதரனே, சகோதரியே, தேவன் தந்த அருமையான வாக்குறுதியின் அடிப்படையில் நாம் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். எத்தனை காலத்துக்குத்தான் குந்திக் குந்தி நடப்போம்? “நாம் எதற்கு அடிமைகள்?” மரணத்திற்கேதுவான பாவத்திற்கா? அல்லது நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கா? இவ்வுலக வாழ்வு உள்ளவரைக்கும் பாவ போராட்டம் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் மேற்கொள்ளப்படமாட்டோம் என்பது வாக்குறுதி. எப்பொழுது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் மரித்து அவரோடேகூட நாம் எழுந்திருந்தோமோ, அன்றிலிருந்து நமது எஜமான் கிறிஸ்துவே என்பதை நாம் சிந்திப்பதேயில்லை. அதுவே நமது தோல்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாகிவிடுகிறது. நாம் தோற்றுப் போகிறவர்களல்ல, கிறிஸ்துவினால் முற்றிலும் ஜெயம் பெற்றவர்கள். அந்த உறுதியோடு விழுந்துகிடக்கும் இடத்தை விட்டெழுந்து, பாவத்தை எதிர்த்துப் போராடி தேவ நாமத்தை மகிமைப்படுத்துவோமாக. முடிவு நித்தியஜீவன் என்பது சத்தியம். உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம் (எபிரெயர் 6:12).

ஜெபம்: “கர்த்தாவே, நீர் சம்பாதித்துக்கொடுத்த வெற்றியை நானும் சுதந்தரித்து, உமது பிள்ளையாக உமக்கென்று வாழ என்னை வழிநடத்தும். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 29 செவ்வாய்

இப்பொழுதும் தேவனே … உமது பராக்கிரமத்தை நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக (சங்.71:18) பங்காளர் குடும்பங்களில் முதுமைபெலவீனங்களோடு உள்ளவர்களை கர்த்தரின் கிருபை தாங்கி நடத்தவும், பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் உள்ள தாய், தகப்பன்மாரை தேவன் தமது அன்பின் கரத்தால் அரவணைத்து தமது சமாதானத்தால் நிரப்பி பாதுகாக்க வேண்டுதல் செய்வோம்.

ஜெயம் நமக்கே !

தியானம்: 2026 செப்டம்பர் 29 செவ்வாய் | வேத வாசிப்பு: ரோமர் 6:1-11

YouTube video

(கிறிஸ்துவோடேகூட) மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே (ரோமர் 6:7).

வாக்குத்தத்தங்கள் என்றால் நமக்கு மிகவும் பிரியம். இந்த வருஷத்திற்குரியது அல்லது இந்த நாளுக்குரியது என்று வாக்குத்தத்தத்தைப் பிரித்து விடுகிறவர்களும் உண்டு, நல்லது. இவை அநேகமாக பாதுகாப்பும் ஆறுதலும் தருகின்ற பழைய ஏற்பாட்டு வாக்குறுதிகளாகவே இருக்கும். அதுவும் நல்லது. ஆனால், இப்போது ஒரு கேள்வி, புதிய ஏற்பாட்டின் முதலாவது வாக்குத்தத்தம் என்ன? இதனை “புதிய வாழ்க்கைக்குள் பிரவேசிக்கும் வாசலைப் போன்றது” என்று சகரியா பூணன் அவர்கள் தனது புத்தகம் ஒன்றிலே விளக்குகிறார். அந்த வாக்குத்தத்தம் இதுதான். “…. அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.” அல்லேலூயா!. நம்மில் யாராவது ஏதாவது ஒரு தடவையாவது இந்த வாக்குறுதியைச் சுதந்தரித்திருக்கிறோமா? “நான் உன்னோடுகூட இருப்பேன், உன் கண்ணீரைத் துடைப்பேன்” என்ற வாக்குத்தத்தங்களைத்தான் பிடித்துக்கொள்கிறோம்!

இங்கே, …அவர்களை மன்னிப்பார் என்றில்லாமல் “பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றிருப்பதைக் கவனியுங்கள். அப்பா சொல் கேட்காமல் குழிக்குள் விழுந்துவிட்ட மகன், கோபமாக வந்த அப்பாவிடம் மன்னிப்பு கேட்டால், அப்பாவும் மன்னித்தேன் என்று சொல்லிக்கொண்டு அவனைத் தூக்கிவிடாமல் கடந்துபோனால் மகனின் நிலை என்னவாகும்? ஆனால் தகப்பனோ அவனை மன்னித்துத் தூக்கிக்கொண்டு, வீட்டுக்கே கொண்டுபோகிறார். இதைச் செய்யத்தான் இயேசு வந்தார்.

“இந்த பாவ உலகில் ஜீவிக்கும்வரைக்கும் அடிக்கடி பாவம் செய்பத் தூண்டப்படுகிறோம். பாவத்தையும் செய்கிறோம். ஏனெனில் நாம் மனுஷர்” என்று சொல்வதை நாம் அடிக்கடி கேட்டிருக்கலாம். ஆனால், இது விழுந்த ஒருவர் கிடங்குக்குள்ளேயே தொடர்ந்து கிடக்கும் நிலைமையே தவிர வளர்ச்சியடையும் கிறிஸ்தவ வாழ்வு அல்ல; கிறிஸ்துவின் சாயலைத் தரிக்கும் வெற்றிவாழ்வும் அல்ல. மாறாக நமக்கு நாமே கொடுக்கும் அனுமதிப்பத்திரம் இது. தேவபிள்ளையே, உன் உண்மையான உள்ளான வாஞ்சை என்ன? இலக்கு என்ன? அதை நீ அடையவேண்டுமானால் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துத்தான் ஆகவேண்டும். பாவத்தோடு போராடுகிறேன் என்று இனி சொல்லிக்கொண்டிராமல், “ஜெயங்கொண்டவரால் பாவத்தை ஜெயிப்பேன் என்று சொல்வோமாக. ஏனெனில் பாவத்தோடு தினமும் போராடிக்கொண்டிருக்க பாவம் நம்மை ஆளுகையா செய்துகொண்டிருக்கிறது? நாம் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறோமே (ரோம.6:7)”.

ஜெபம்: “பாவத்தை ஜெயித்தெழுந்த இயேசுவே, நீர் சுதந்தரித்துக்கொடுத்த அந்த ஜெயத்தை நானும் பெற்றிட உமது வல்லமையால் என்னை நிரப்பும். ஆமென்.”