ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 19 சனி
நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் (ஆகாய் 2:19) என்ற வாக்குப்படியே சத்திய வசன ஊழியத்தை உற்சாக இருதயத்தோடே ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்கள் குடும்பங்களில் சிறியோரையும் பெரியோரையும் கர்த்தர் ஆசீர்வதித்து, அவர்கள் கையிட்டுச் செய்யும் வேலையில், தொழிலில் ஆலோசனைக்கர்த்தராக கூடஇருந்து பாதுகாக்க ஜெபம் செய்வோம்.
நித்திய பிதா!
தியானம்: 2026 செப்டம்பர் 19 சனி | வேத வாசிப்பு: யோவான் 15:9-12

ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்; அவனில் என் பிதா அன்பாயிருப்பார் (யோவான் 14:23).
சாலையோரத்திலே உடைந்துவிட்ட உள்ளத்தோடு, “நான் யாரிடம் செல்வேன்? என்னில் அன்பாயிருந்த தகப்பன் என்னை விட்டுச்சென்றதும் என் குடும்பத்தினர் என்னை எதிர்க்கிறார்களே? என் உற்றார் உறவினர் என்னை ஒதுக்குகிறார்களே!” என்ற வேதனையோடு, எங்கே செல்வது என்று அறியாமல் தன் வீட்டைவிட்டுச் சென்று கொண்டிருந்த அந்த வாலிபனை, “என் தகப்பனும், என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்” (சங்.27:10) என்ற வார்த்தை தடுத்து நிறுத்தியது. சத்தம் வந்த திசையை நோக்கிய வாலிபனின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. அங்கே ஒரு கூட்டத்தார் மத்தியில் இந்த வார்த்தைகளை ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவனையும் அறியாமல் அவனது கால்கள் கூட்டத்திற்குள் நகர்ந்தது. செய்தி கொடுத்தவர், உலகம் கொடுக்கமுடியாத சமாதானத்தைக் கொடுக்கின்ற, நித்திய பிதாவாகிய ஒருவரைக் குறித்துக் கூறிக்கொண்டிருந்தார். அவர் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோட ஆரம்பித்தது. கூட்டம் முடிந்ததும், ஆவலோடு பிரசங்கியாரிடம் சென்று அவர் கொடுத்த செய்தி தன்னைத் தொட்டது என்றும், தன் வாழ்க்கையைக் குறித்தும் கூறினான். பிரசங்கியார் அன்போடு அந்த வாலிபனை அணைத்து, அவனுக்கு ஆண்டவர் இயேசுவின் அன்பைக் குறித்துக் கூற, அவனும் அவரை ஏற்றுக்கொண்டு, தன்னை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தான். அன்றிலிருந்து அவனது வாழ்வே மாறிப்போய்விட்டது. இன்று அவன், கைவிடப்பட்ட அநேக பிள்ளைகளுக்கு ஒரு அன்பான தகப்பனாக இருந்து அவர்களை வளர்த்துவருகிறான்.
உலகப் பெற்றோர் சூழ்நிலைக் கைதிகளாக மாறி நம்மை விட்டுவிடவும் கூடும்; அல்லது நாளை அவர்களுக்குரிய காலம் முடிய அவர்கள் நம்மைவிட்டு மரித்தும் போய் விடுவர். தாய் தகப்பன் இல்லாமல் பரிதவிக்கின்ற எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் தாய் கைவிட்டாலும் தகப்பன் கை விட்டாலும் நம்மை ஒரு போதும் கைவிடாதவரும், மாறாதவரும், என்றும் ஜீவிக்கிறவருமான ஒருவர் நமக்கு இருக்கிறார். அவர் எவ்வளவு நம்மை நேசிக்கிறார் தெரியுமா? “நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும்” (யோவா.17:23). அவர் தமது குமாரனாகிய கிறிஸ்துவில் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு நம்மிலும் வைத்திருக்கிறார்.
இன்னும், இயேசு தாம் உலகத்தைவிட்டுப் போகும் வேளை வந்ததென்று அறிந்தவராய், “இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்” (யோவா.13:1). நமது பரம பிதாவும் மாறாதவர், அவருடைய நித்திய அன்பும் மாறாதது.
ஜெபம்: “நல்ல ஆண்டவரே, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொண்டு உமதன்பிலே நாங்கள் நிலைத்திருக்க தூயஆவியானவர் உதவி செய்ய ஜெபிக்கிறோம். ஆமென்.”