ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 31 திங்கள்

என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன் (யாத்.20:6) இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் நம்மேல் அன்புகூர்ந்து நமக்குக் காட்டின தயவிற்காகவும், அருளிய பெலத்திற்காகவும் நன்றி செலுத்தி, இனியும் சுமப்பேன், தாங்குவேன், தப்புவிப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காகவும் நன்றி நிறைந்த இதயத்தோடு ஸ்தோத்திரிப்போம்.

பாவத்திற்கு தப்பிக்கொள்!

தியானம்: 2026 ஆகஸ்டு 31 திங்கள் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 39:7-23

YouTube video

எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் (மத். 6:13).

உண்மையும், உத்தமமுமாய் தனது கடமைகளைச் சரிவரச் செய்த யோசேப்புக்கு, அதே இடத்தில் பாவசோதனை வந்ததை இன்றைய வாசிப்பிலே காண்கிறோம். ஆனால் யோசேப்போ அச்சோதனையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அவ்விடத்தை விட்டு ஓடிப்போனார். தன்னைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்வதற்கு ஓடிப்போவதைத் தவிர அந்த இடத்தில் அவருக்கு வேறு வழி ஏதும் இருக்கவில்லை. ஆனாலும் அவர் போத்திபாரின் மனைவியினால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான வசனம் என்னவெனில், “கர்த்தர் யோசேப்போடுகூட சிறையில் இருந்தார்;” (ஆதி.39:21-23) என்பதே. யோசேப்பு பாவம் செய்து தேவனைவிட்டு விலகாமல், பாவத்துக்கு விலகி ஓடி அதற்காக சிறையில் இருக்கவும்; துணிந்தார். எந்தப் பாவமும் செய்யாத யோசேப்பு பாவிகளின் சிறையில் இருந்தாலும் தேவனுடைய சமுகம் அங்கே அவரோடுகூட இருந்தது. கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப் பண்ணினபடியினாலும் அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.

பாவத்திலிருந்து தப்பிக்கொள்வதற்கு, பாவ சூழ்நிலைகளை நாம் தவிர்த்துக் கொள்வது அவசியம். குறிப்பிட்ட இடத்தில் நமக்குப் பாவ சோதனைகள் உண்டு என்று நாம் அறிந்தால் அந்த இடத்திற்குப் போகாமல் தவிர்த்துக்கொள்வதே பாவத்திலிருந்து தப்பிக்கொள்ள சாலச்சிறந்த வழியாகும். மீண்டும், மீண்டும் அதே இடத்திற்குப் போய், அதே சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டு பாவத்தில் விழுவதைவிடுத்து, அவ்விடத்தை, அச்சூழ்நிலைகளைத் தவிர்த்துக்கொள்வதே நல்லது. மழை பெய்து முடிந்ததும் வீதியில் சேறும் சகதியுமாக சில பகுதிகள் தோன்றும். அப்போது, “நான் பிறந்ததிலிருந்து விழுந்ததே கிடையாது” என்று சொல்லி அந்தச் சேற்றுக்குள்ளாக நடப்போமா? இல்லையே. சேற்றில்; விழுந்துவிடலாம் என்று அஞ்சி சகதியற்ற பகுதியைப் பார்த்து நடப்போமல்லவா! அதுபோலவே தான் பாவத்தில் இருந்து தப்பிக்கொள்வதற்கும் பாவமான சூழ்நிலைகளைத் தவிர்த்து நடக்கவேண்டும். “தன்னை நிற்கிறவன் என்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக்கடவன்” (1கொரி.10:12).

அருமையானவர்களே, நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டிய காலம் இது. ஏனெனில் நம்மை வீழ்த்த பிசாசானவன் பல வழிகளில் முயற்சி செய்துகொண்டிருக்கிறான். கர்ச்சிக்கிற சிங்கம்போல் சுற்றித் திரியும் சாத்தானின் வாயில் அகப்படாதபடி நம்மைக் காத்துக்கொள்வோம்.

ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, நீர் பாவத்தை ஜெயித்தவர். உம்முடைய பிள்ளையாகிய நானும் உமது பெலத்தால் பாவத்தை ஜெயித்து, வெற்றியான வாழ்வை வாழ, எனக்கு உதவி செய்வீராக. ஆமென்.”

ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 30 ஞாயிறு

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது (ஏசா. 6:31) இந்த ஆராதனைநாளில் சபைகளுக்குள் காணப்படும் குளறுபடிகள், பிரிவினைகள், கசப்புகள், ஏற்றத்தாழ்வுகள் இவை எல்லாம் முழுவதுமாக அகற்றப்படவும், சபைகள் சமாதானம் பெற்று பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருக வேண்டுதல் செய்வோம்.

மெய்யான விடுதலை

தியானம்: 2026 ஆகஸ்டு 30 ஞாயிறு | வேத வாசிப்பு: ரோமர்; 6:14-23

YouTube video

எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே (2பேது. 2:19).

எது ஒருவனை ஆளுகை செய்கிறதோ, எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ, அதற்கு அவன் அடிமையாய் இருக்கிறான். பாவம் நம்மை ஆளுகை செய்யுமேயானால் நாம் பாவத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறோம். அப்படியானால் பாவத்திலிருந்து எப்படி மெய்யான விடுதலையை அடைய முடியும்? ஆனால் பாவத்திலிருந்து ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு ஏற்கனவே விடுதலையைத் தந்துவிட்டார். ஆனாலும், நாம் இன்னமும் பாவத்தினால் பிடிக்கப்பட்டு அதற்கு அடிமைகளாயிருக்கிறோமே, ஏன்? காரணம் கேட்டால் எனக்கு விடமுடியவில்லை. இது எனது பெலவீனம்; என்னால் மீளமுடியவில்லை என்றெல்லாம் சாக்குகள் சொல்லுகிறோமே, ஏன்?

வியாதியை யாராவது இருகரம் நீட்டி என்னிடம் வா என்று அழைப்பார்களா? வியாதி வந்துவிட்டாலே நாம் அதை வெறுக்கிறோம். அதிலிருந்து விடுதலை பெற வைத்தியரை நாடி ஓடுகிறோம். இறுதியில் முற்றிலும் விடுதலை அடைகிறோம். அதுபோல பாவத்திலிருந்து முற்றிலுமான விடுதலைப்பெற, முதலாவது பாவத்தை நாம் வெறுக்கவேண்டும். பாவத்தை நாம் மனதார வெறுக்காதவரை பாவத்திலிருந்து ஒருபோதும் மெய்யான விடுதலை கிடைக்காது. இனிப்பை அதிகமாக விரும்பி உண்ணும் ஒருவர், வைத்தியரிடம் சென்றபோது அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இனிப்புப் பண்டங்களை உண்ணவேண்டாம் என்று வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று வீடு வந்தவருக்கு, பக்கத்து வீட்டிலிருந்து வந்திருந்த லட்டு உருண்டைகள் சோதனையாகிவிட்டன. ஒன்றைச் சாப்பிட்டால் என்ன ஆகப்போகிறது என்று எண்ணி சாப்பிடத் தொடங்கியவர், தன்னையும் அறியாமலேயே ஐந்து உருண்டைகளைச் சாப்பிட்டுவிட்டார். அதனால் மீண்டும் வைத்தியரின் முன் போய் வெட்கப்பட்டு நின்றாராம். சர்க்கரை வியாதி வந்தவர் இனிப்பை வெறுக்காவிட்டால் அவரால் அந்த வியாதியிலிருந்து முற்றிலும் விடுதலை பெறமுடியாது. அதுபோலவே பாவத்தை முற்றிலும் வெறுக்காவிட்டால் பாவத்திலிருந்தும் மெய்யான விடுதலையைப் பெற்றுக்கொள்ளவே முடியாது.

அருமையான சகோதரனே, சகோதரியே இன்று நம்மைப் பிடித்திருக்கும் பாவசோதனை என்ன? எந்தெந்தப் பாவத்திலிருந்து நாம் விடுதலை பெறமுடியாமல் தவிக்கின்றோம்? முதலாவது, அதை நாம் அடையாளம் கண்டு முற்றிலும் வெறுத்துவிடவேண்டும். அதன்பின், ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்டு மனந்திரும்பவேண்டும். அப்போது நமக்கு அப்பாவத்திலிருந்து பூரணமான விடுதலை கிடைப்பது நிச்சயம்.

ஜெபம்: “நீர் பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும் நேசர். நீர் வெறுக்கும் பாவத்தை நானும் வெறுக்க எனக்கு உதவி செய்யும். ஆண்டவரே, என்னை மன்னித்து வெற்றியுள்ள வாழ்வு வாழ எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.”