ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 31 வெள்ளி
இம்மாதம் முழுவதும் கர்த்தர் நமது நல்ல மேய்ப்பராக இருந்து குறைவில்லாமல் நடத்தினார். தீங்குநாளில் தமது கூடாரத்தில் மறைத்து, தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து நாச, மோசத்திற்குத் தப்புவித்தார். கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி நன்றி நிறைந்த இதயத்தோடு கர்த்தரை மகிமைப்படுத்துவோம்.
பரிசுத்தமாய் ஆண்டுகொள்
தியானம்: 2026 ஜூலை 31 வெள்ளி | வேத வாசிப்பு: 1தெசலோனிக்கேயர் 4:1-8

உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து, இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும்… இருக்கவேண்டும் (1தெச. 4:5,6).
அறிவு தெரிந்த காலந்தொட்டு, அறிவு மங்கிப்போகும் காலம் வரைக்கும் மனிதனுடைய அந்தரங்கத்தையே அசைத்துவிடுகிறது இயற்கையாக அவனுக்குள் இருக்கிற பாலுணர்வு. அது பரிசுத்த நோக்கத்திற்காக தேவன் தந்த ஈவு. பாவத்தில் விழுந்துவிட்ட மனிதனுக்கோ, அது தன்னோடும், பிறரோடும் தேவனோடும் பகையை ஏற்படுத்துகிற ஒன்றாக மாறிவிட்டது. மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் இன்று எத்தனையோபேர் வெளியே சொல்லமுடியாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமது நிலைமையை ஒப்புக்கொள்ளவும் முடியாமல் தவிக்கிறார்கள். இன்றைய வாசிப்புப்பகுதியில் இதைக்குறித்து பவுல், தெளிவாகக் கற்றுத் தருகிறார். தேவனுக்குப் பிரியமாய் நாம் நடக்கவேண்டுமானால், நாம் கிறிஸ்தவவாழ்வில் அதிகமதிகமாய் தேறவேண்டுமானால், இது கவனிக்கப்பட வேண்டியதொன்று.
ஆவியையும் ஆத்துமாவையும் ஒப்புக்கொடுக்கலாம்; ஆனால் சரீரத்தை ஒப்புக்கொடுப்பது இலகுவல்ல என்று ஒருவர் சொன்னார். மற்றவரோ, நாம் சரீரமின்றி வெறும் ஆவி ஆத்துமாவுடன் சிருஷ்டிக்கப்பட்டிருந்தால் நாம் மனுஷரே அல்ல என்றார். திருமண உறவுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு பாலுறவும் தேவனுக்கு அருவருப்பானதே. மனுஷன் வெகு இலகுவாக அகப்பட்டுக்கொள்வதும் இந்தப் பாவத்திலேதான். இது சிலசமயங்களில் தனி மனிதனை மாத்திரமல்ல, குடும்பங்களை, சபையை, சமுதாயத்தையும் பாதித்துவிடுகிறது. இது சரீரத்திற்கு மாத்திரமல்ல; ஆத்துமாவுக்கும் துன்பம் உண்டாக்குகிறது. மேலும் மனித உறவுகளையும், தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவையும்கூட கெடுத்துப்போடுகிறது. இவையெல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனக்குத் தவறு என்று தெரியும்; ஆனால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று இருபது வயதுமட்டுமே நிறைந்த ஒரு வாலிப சகோதரி என்னிடம் கண்ணீரோடு முறையிட்டாள்.
இந்த விஷயத்தில் மனிதர்கள் எல்லோருமே சோதிக்கப்படுகிறவர்களாகவே இருக்கிறோம். ஆனாலும் நமது அந்தரங்க உணர்வுகளை, விட்டுவிட முடியாத தவறான உறவுகளை தேவபாதத்தில் நாம் உண்மையாய் வைக்கும்போது, பரிசுத்தாவியானவர் நிச்சயமாய் நம்மை விடுவிப்பார். பலர் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று பெருமையாக எண்ணலாம். நல்லது, ஆனால் அதேசமயம் நமது தவறான மனஓட்டம், பாவசிந்தனை என்பவற்றை விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார் (1நாளா.28:9).
ஜெபம்: கர்த்தாவே, அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும் நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவீர். வேதவசனத்திற்குக் கீழ்ப்படிந்து, பரிசுத்தமாய் வாழ எங்களுக்குக் கிருபை செய்யும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 30 வியாழன்
ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள். (சங். 62:10)
வேதவாசிப்பு: காலை: யோபு 24-28 | மாலை: அப்போஸ்தலர் 26
ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 30 வியாழன்
சத்தியவசன ஊழியத்திற்கு இம்மாதம் முழுவதும் ஜெபத்தோடு பங்காளர் காணிக்கையையும், ஆதரவாளர் காணிக்கையை அனுப்பி தாங்கிவந்த குடும்பங்களை கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகுமட்டும், அவர்களது கைகளின் பிரயாசங்கள் எல்லாவற்றையும் ஆசீர்வதித்து உயர்த்திட வேண்டுதல் செய்வோம்.
பாளையத்திற்குப் புறம்பே…
தியானம்: 2026 ஜூலை 30 வியாழன் | வேத வாசிப்பு: எபிரெயர் 13:8-16

ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளையத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்; (எபிரெயர் 13:13).
ஏழ்மை, வேற்று மனப்பான்மை, அருவருக்கத்தக்க வியாதிகள், எழுந்திருக்க முடியாதபடி பாவத்துக்குள் விழுந்து விடுகின்ற நிலைமைகள், கெட்ட பழக்கங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட எத்தனை மக்கள் சமுதாயத்திலும், சிறைச்சாலைகளிலும் ஒதுக்கப்பட்டு, புறம்பாக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் குறித்து நமது மனநிலைமை என்ன? சுயநலத்தோடு வாழவா நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்?
அன்று குஷ்டரோகிகள் சுத்தமடையும்வரை சமுதாயத்துக்குள் வராமல் தடுக்கப்பட்டனர். அன்றைய மதத்தலைவர்களோ, வியாதிப்பட்டவர்களின் உள்ளம் உடையும்வண்ணம் அவர்களை ஒதுக்கியே வைத்தனர். ஆனால் அப்படிப்பட்டவர்களை இயேசு தொட்டார். தீட்டான ஸ்திரீ தம் வஸ்திரத்தைத் தொட இடமளித்தார். அதட்டப்பட்ட கண்தெரியாத பிச்சைக்காரனை இயேசு தம்மிடம் அழைத்து, பார்வை கொடுத்தார். விபசாரத்தில் பிடிபட்டவளையும் அப்பாவத்திலிருந்து விடுவித்து புதுவாழ்வு கொடுத்தார். ஆனால், சமுதாயத்தில் வாழக்கூடாது என்று தள்ளப்பட்டவர்களுக்கு வாழ்வு கொடுத்த இயேசுவோ பாளையத்திற்குப் புறம்பாக்கப்பட்டார். பாளையத்திற்கு புறம்பே என்பது அசுத்தத்திற்கு சமம். ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்ட கல்வாரி மலையும் எருசலேமின் எல்லையில் ஒரு ஒதுக்குப் புறத்திலேதான் இருந்தது.
பாளையத்திற்குப் புறம்பாக்கப்பட்டவர்களைத் தேடிச்சென்றவர் இயேசு. இறுதியில் தாமே புறம்பாக்கப்பட்டு நிந்தைகளை அனுபவித்தார், அந்த இயேசு எங்கே? நாம் எங்கே? நான் இயேசுவின் பிள்ளையானால் அவர் இல்லாத இடத்தில் எனக்கு என்ன இருக்கிறது? பாளையத்தினுள் பாடிக் களிக்க அல்ல; பாளையத்திற்குப் புறம்பே ஆண்டவரோடே பாடுபடப் புறப்பட வேண்டிய அவசியத்தை நாம் மறக்கலாமா? இன்று நாம் ஒன்றைத் தெரிந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் இருக்கிறோம். பாளையத்திற்கு உள்ளேயா, புறம்பேயா? சமுதாய மேன்மையா, பாவிகளுடன் பாடுபடும் கிறிஸ்துவா? லெந்துநாட்களில் மட்டும் கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து பின்பு அதைக்குறித்த சிந்தனைகளற்று காணப்படுகிறோமா? நாம் முதலில் கிறிஸ்துவுடன் பாடனுபவிக்க நமக்குத் தடையாக இருப்பவற்றை இனங்கண்டு அழித்துவிடுவோம். சுய கௌரவம், மதிப்பு இவற்றைத் தள்ளிவிட்டு, பாளையத்திற்கு புறம்பே பாடுபடும் மக்களிடம் செல்லப் புறப்படுவோமாக.
அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார் (2தீமோத்.2:12).
ஜெபம்: எங்களை தேடிவந்த இயேசுவே, பாளையத்திற்கு புறம்பே பாடுபடும் மக்களிடம் நாங்கள் புறப்பட்டு செல்லவும், அதற்கு தடையாயிருக்கிற காரியங்களைத் தள்ளிவிடவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.