ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 16 வியாழன்

.. உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள் (எசேக்.36:31) அன்றாடம் நமது தேசத்தின் பல இடங்களிலும் நடை பெறும் துணிகரமான பாவங்கள், முன்பகை, விரோதம் காரணமாக நடைபெறும் கொலை சம்பவங்கள், சிறுகுழந்தைகளுக்கு நேரிடும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற சம்பவங்கள் முற்றிலுமாக தடுக்கப்பட ஜெபிப்போம்.

போதுமான கிருபை

தியானம்: 2026 ஜூலை 16 வியாழன் | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 12:1-9

YouTube video

அதற்கு அவர் என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார் (2கொரி. 12:9).

இந்த வசனம் நம் எல்லோருக்கும் மிகவும் பரீட்ச்சியமான ஒன்று. இந்தக் கிருபை எதற்குப் போதுமானது? எந்நிலையிலும் கிருபை நம்முடன் இருக்கிறது என்பதை நம்பமுடியுமா? கிருபை என்றால், தகுதியில்லாத நமக்குக் கிடைக்கின்ற அளப்பரிய ஈவு என்று நாம் சொல்லக்கூடும். எவ்வித தகுதியும் இல்லாத நம்மை நமது ஆண்டவர் இரட்சித்தாரே, இதற்கு மிஞ்சி என்ன சொல்ல! ஆனால் இந்தக் கிருபையை வைத்து இன்று பலர் தவறான உபதேசங்களைக் கொண்டு வருவது மிகவும் துக்கத்துக்குரிய விஷயம்.

இங்கே பவுலுக்கு ஒரு முள் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் எழுதுகிறார். அது என்ன என்பது தெரியாவிட்டாலும், சரீரத்தில் கொடுக்கப்பட்ட ஒரு வேதனை என்பது விளங்குகிறது. இது எதற்காக? பதினான்கு வருஷங்களுக்கு முன்னர் மூன்றாம் வானம் வரைக்கும் பவுல் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும், பல காரியங்கள் வெளிப்படுத்தப்பட்டன என்றும் அவரே எழுதியுள்ளார். இதை எழுதியபோது, தான்தான் அந்த மனுஷன் என்று குறிப்பிடாமல் “கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷன்” என்று தனக்குப் பெருமை சேர்க்காதபடி எச்சரிக்கையாகவே எழுதியிருக்கிறார். இவற்றைக் குறித்து தன்னை உயர்த்தாதபடிக்கே இந்த முள் தனக்குக் கொடுக்கப்பட்டது என்றும், அது தன்னைக் குட்டும் சாத்தானின் தூதனாயிருக்கிறது என்றும் எழுதுகிறார். இந்த முள் அவரை மிகவும் வேதனைப்படுத்தியபடியால் அதை அகற்றிவிடும்படி மூன்று தடவை கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டபோதும் முள் அகற்றப்பட்டதா, இல்லை! அதற்குப் பதிலாக, “என் கிருபை உனக்குப் போதும்” என்றும், என் பலம்தான் உனக்காக இருக்கிறதே என்றும் கர்த்தர் பவுலைத் தைரியப்படுத்தியதை வாசிக்கிறோம். இங்கே கிருபையின் பங்களிப்புத்தான் என்ன? பவுலின் பாடு நீங்கிற்றா? இல்லை. நீங்காவிட்டாலும், “நான் இருக்கிறேனே, அந்தக் கிருபை உனக்குப் போதாதா” என்பதுபோல கர்த்தர் அவரைப் பலப்படுத்தினாரே! “இதற்கும் நான் எம்மாத்திரம்” என்பதுபோன்ற பவுலின் வரிகள் இன்று நமக்குச் சவாலிடுகின்றன.

நாம் விரும்பியவைகள் விரும்பியபடி நடக்கும்போது, நமது ஜெபங்கள் கேட்கப்பட்டு காரியங்கள் வாய்க்கும்போது, “கர்த்தருடைய கிருபை” என்று நாம் அறிக்கையிடுகிறோம். அதில் தவறில்லை. ஆனால் நமது வேண்டுதலுக்கு எதிர்மாறாக நடைபெறும்போதும், “இதுவும் கர்த்தருடைய கிருபையே. இதிலும் அவர் என்னுடன் இருக்கிறார். அவருடைய பெலத்தைக்கொண்டு இத் தடைகளை தாண்டுவேன்” என்று அறிக்கை பண்ண முடியுமா? தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத்தேற்றும் (சங்.23:4).

ஜெபம்: பரமபிதாவே, எந்தவித சூழ்நிலையானாலும் நீர் எங்களோடுகூட இருப்பதினாலும் உமது கிருபை போதுமானதாயிருப்பதாலும் உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.”