ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 11 சனி

பங்காளர் குடும்பத்தில் பல மாதங்களாக, வருடங்களாக நிரந்தர வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு கர்த்தர் இவ்வாண்டிலே அற்புதங்களைச் செய்து சிறந்த வேலையைக் கட்டளையிடவும், பல்வேறு சூழ்நிலைகளால் வேலைவாய்ப்பை இழந்த நபர்கள் மீண்டும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதற்கும் பாரத்தோடு ஜெபிப்போம்.

இயேசுவின் பாதையில்

தியானம்: 2026 ஜூலை 11 சனி | வேத வாசிப்பு: மாற்கு 15:1-5

YouTube video

அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. … இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான் (மாற்கு 15:3,5).

நம்மை அநியாயத்திற்குக் குற்றப்படுத்துகிறவர்கள் விஷயத்தில் எப்படிப் பதிலுரை கொடுக்கிறோம்? நமக்கு உடனே கோபம் வரும்; நமது நீதியை நாமே நிலைநாட்ட முயலுவோம், பலரிடம் முறையிடுவோம். இதுதான் இயல்பாக நடக்கின்ற விஷயம். நமக்காக போராடி நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாமே முயற்சி செய்வதால், ஆண்டவருடைய உதவியை நாம் இழந்துபோக நேரிடலாம் என்பதை அநேகமாக மறந்துவிடுகிறோம். பிறர் நம்மைத் தவறாக நினைத்துக் குறைகூறினாலும், அதைக் கர்த்தர் கரத்தில் விட்டுவிட்டு அமைதியாயிருக்க நம்மால் முடியாதிருப்பது ஏன்?

நமது வாழ்வின் சகல பகுதிக்கும் மாதிரியாக இயேசு ஒருவரே நமக்கு இருக்கிறார். அவர் நடந்தபடி நாமும் நடந்தால் நிச்சயம் நம்மால் இந்த உலகை ஜெயிக்க முடியும். இயேசு நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தார்; நன்மைகளை மாத்திரமே செய்த அவரை அதே யூத மக்கள் குற்றப்படுத்தி, பிலாத்துவின் முன்னிலையில் குற்றவாளியைப்போல நிறுத்தினார்கள். பிரதான ஆசாரியர்கள்கூட அவர்மேல் குற்றங்களைச் சாட்டிக்கொண்டே இருந்தார்கள். நியாயமாக அவருக்குக் கோபம் வந்திருக்கவேண்டும். தமது தெய்வீக வல்லமையைப் பிரயோகித்து, ஒரு நொடிப்பொழுதில் தம்முடைய பார்வையாலேயே எல்லோரையும் கீழே வீழ்த்தியிருக்கலாம். வானத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தேவதூதர்களை இறக்கியிருக்கலாம். ஆனால் இயேசுவோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்ததே வேதாகமத்தில் உன்னதமான ஒரு காட்சியாக அமைந்திருக்கிறது. அவர் கோபம் கொள்ளவுமில்லை; அவர்களுக்கு எதிராக மனதிலேகூட ஆத்திரம் கொள்ளவுமில்லை. ஏன்? இது எப்படி? இது முடிகின்ற காரியமா? முடியும்; எப்போது? ஆம், இயேசு தாம் பிதாவின் கரத்தில் இருப்பதை முற்றிலுமாக அறிந்திருந்தார். இதுதான் அந்த இரகசியம்.

இயேசுவை அவர்கள் கொடுமையாய் நடத்தினர், முகத்திலே துப்பினர், கேலிபண்ணினர், கசை அடி கொடுத்தனர். ஆனால் நமது ஆண்டவரோ வாய் திறவாதிருந்தார் என்று காண்கிறோம். நடந்தது அநீதி. ஆனாலும் நமது ஆண்டவர் மௌனமாகவே யாவையும் சகித்தார். அதனால்தான் அவர் இன்று ஜீவனுள்ள தேவனாக நமக்குள் இருக்கிறார். எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் மௌனமாக இருந்து கர்த்தர் நமக்காக யாவையும் செய்துமுடிக்க விட்டு விடுவோமாக. நியாயம் நம் பக்கம் என்று நியாயம் பேசுவதை விட்டுவிட்டு, தேவன் தமது நித்திய அன்பினால் பதிலளிக்க அர்ப்பணிப்போம். முடிவில் நீதி நிச்சயம் விளங்கும். அது இன்பமான முடிவாகவே இருக்கும்.

ஜெபம்: “கர்த்தாவே, எங்கள் வாழ்விலும் நியாயம் புரட்டப்படுகிறது என்பதை அறிந்து எங்களுக்காக நாங்களே வழக்காடுகிறவர்களாக இராமல், உமது நீதி வெளிப்பட பொறுமையோடே காத்திருக்கிறவர்களாக காணப்பட எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.