ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 2 வியாழன்

அவர் … தம்முடைய திரளான தயவுகளின்படியும் செய்த மகா நன்மைக்குத்தக்கதாக … கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன் (ஏசா,63:7) நாம் வேண்டிக்கொண்டதற்கும் அதிகமாகவே கர்த்தர் அருளிய நன்மைகளுக்காகவும், வியாதியில் கொடுத்த விடுதலைக்காகவும், அருளிச் செய்த சமாதானத்திற்காக நன்றி செலுத்தி ஜெபிப்போம்.

அவருக்கே கணக்கு ஒப்புவி

தியானம்: 2026 ஜூலை 2 வியாழன் | வேத வாசிப்பு: ரோமர்;14:11-12; எபி.4:13-16

YouTube video

ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான் (ரோமர் 14:12).

வரவு செலவு எல்லாம் உடனடியாக பதியப்பட்டாலும், கணக்கு ஒப்புவிக்கும் போது ஏதோ ஒன்று தவறுவிட்டால், அதைக் கண்டுபிடிப்பது இலகுவல்ல; முதலிலிருந்து திரும்பவும் கணக்குப் பார்க்கவேண்டியதாகும். வாழ்க்கையும் இப்படியேதான். சரியாக இருப்பதுபோலவே தென்படும்; ஆனால், ஏன், எங்கே தவறுவிட்டேன் என்று புலம்புகின்ற நேரமும் வரத்தான் செய்கிறது. ஆனால் ஆண்டவர் யாவற்றுக்கும் துல்லியமாகக் கணக்கு வைத்திருக்கிறார்; அவர் கணக்கும் நாம் கொடுக்கும் கணக்கும் சரியாக இருக்கவேண்டுமே!

ஆம், நாம் ஒவ்வொருவருமே ஒருநாள் தேவனுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டியவர்கள்; நமக்குரிய வெகுமதிகள் நமக்காக வைக்கப்பட்டிருந்தாலும், முதலில் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் குறித்தும் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். ஏனெனில் தேவன் நம்மை நம்பி, ஒவ்வொன்றின் மேலும், ஒவ்வொருவர் மேலும், ஒவ்வொரு செயற்பாடுகளின் மீதும் நமக்கு உக்கிராணத்துவத்தைத் தந்திருக்கிறார். வாழ்வில் நாம் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் நமக்குப் பொறுப்பு உண்டு. “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று ஆண்டவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் (மத்.12:36). “உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறது என்ன?” என்று கேள்வி எழுப்பிய பவுல், கர்த்தர் யார் என்பதை உணர்த்துகிறார். அதைத் தொடர்ந்து, நாம் அவருக்குக் கணக்கொப்புவிக்க வேண்டியவர்கள் என்கிறார் (ரோமர் 14:10-12). பேதுருவோ, …நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள் (1பேதுரு 4:5) என்று எச்சரிக்கிறார்.

“அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது” என்ற எபிரெய ஆசிரியர், இப்படிப்பட்டவருக்கே நாம் கணக்கு ஒப்பு விக்கவேண்டும் என்கிறார். “நீ இயேசுவை உன் இரட்சகராக ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டாயா?” “அந்த இயேசுவை நீ என்ன செய்தாய்?” இந்தக் கேள்விகளைத்தான் பரலோக வாசலில் தூதர்கள் கேட்பார்களோ என்று ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. உண்மைதான்! இந்த இரண்டு கேள்விகளுக்குள்ளும் மற்ற எல்லாமே அடங்கியிருக்கிறது. ஆகையால் பிறரைக் குற்றப்படுத்துவதையும், பிறரில் குற்றத்தைப் போடுவதையும் விடுத்து, நாம் கணக்கொப்புவிக்க வேண்டியவர்கள் என்ற சிந்தனையுடன் முன்செல்வோமாக.

ஜெபம்: நியாயாதிபதியாய் வரப்போகும் ராஜாவே, எங்களைக் குறித்த கணக்குப் புத்தகம் தேவனால் சரிபார்க்கப்படுகிறது என்ற எச்சரிப்பினால் பயத்தோடே நடந்துகொள்ள உமதருள் தாரும். ஆமென்.