ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 18 சனி
பங்காளர் குடும்பங்களில் திருமணத்திற்கு காத்திருக்கும் பிள்ளைகளுக்கு தேவன் தமது தயவுள்ள சித்தத்தின்படியே தேவபயமுள்ள ஆவிக்குரியத் துணையைக் காண்பிக்கவும், அதிக விலைவாசி உயர்வினிமித்தம் அவர்கள் குடும்பங்களில் இருக்கும் பொருளாதாரத் தேவைகள் எல்லாம் சந்திக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.
துன்பத்தில் பிரியம்
தியானம்: 2026 ஜூலை 18 சனி | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 12:7-10

அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ள வனாயிருக்கிறேன் …. துன்பங்களிலும் இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் (2கொரி.12:10).
துன்பத்தில் நாம் பிரியமின்றி, அது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். ஆனால் இது சத்தியம். இதுதான் கிறிஸ்துவுக்குள்ளான வளர்ச்சியில் தேறி வருகிறவர்களுக்கான அடையாளம். நாம் இன்னும் குழந்தைகளா? முதிர்ச்சியை நாடி ஏணிப்படி ஏறுகின்றவர்களா?
பவுலுக்கு ஒரு முள் கொடுக்கப்பட்டதும், அவர் அதற்காக ஜெபித்தபோது, தமது கிருபை போதும் என்று கர்த்தர் பதிலளித்ததை முன்னர் கவனித்தோம். பவுல் தொடர்ந்து, “அந்தப்படி” என்று ஆரம்பிக்கிறார்; அது எந்தப் படி? “கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி…” கிறிஸ்துவின் வல்லமை என்னில் கிரியை செய்ய வேண்டுமானால் என் பலம் குன்றவேண்டும் என்பது இங்கே விளங்குகிறது. இதனால், துன்பங்கள் நேரிடுவதில் தான் பிரியப்படுவதாக பவுல் எழுதுகிறார். நம்மில் யாரும் இப்படியொரு ஜெபத்தைச் செய்திருக்கவே மாட்டோம். வச.10 ஐ குறித்து ஒரு தேவமனிதன் எழுதி யிருப்பதை உங்களுக்கு சுருக்கித் தருகிறேன்: “நான் பலவீனமாயிருப்பதிலும் தூஷிக்கப்படுவதிலும், துன்புறுத்தப்படுவதிலும், துரத்தப்படுவதிலும் களி கூருகிறேன். ஏனெனில் நான் எனது பெலத்தை இழந்திருந்தபோது, “கர்த்தரே போதுமானவர்” என்ற உண்மையை நான் உணர்ந்தேன், என்கிறார் இவர். இந்த நிலையை அடையும்போது, பிறருடைய அனுதாபத்தை நாடாமல், வரும் துன்பம் யாவும் கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெறவேண்டிய நிபந்தனைகள் என்று உணர்ந்து, தேவனிடம் திரும்புவோம்” என்றும் அவர் எழுதியுள்ளார்.
மேலும், பார்வையற்றிருந்த ஜார்ஜ் மத்திசன் என்பவர், “தேவனே, என் சரீரத்திலுள்ள முள் குறித்து நான் நன்றி சொன்னதில்லை. நான் சுமக்கும் சிலுவையின் மகிமைதனை எனக்குப் போதியும். இந்த முள்ளின் மதிப்பை எனக்குக் காண்பியும். என் வேதனையின் வழியே, நான் உம்மண்டை ஏறிவரும் படிக்கட்டு என்பதை உணர்த்தும். என் கண்ணீரே எனக்கான வானவில்லை உண்டாக்கியது என்பதை எனக்குக் காண்பியும்” என்று ஜெபித்தாராம். துன்பங்கள், நிந்தைகள், நெருக்கடிகள் வரும் போது, நாம் சோர்ந்துவிடுறோம்; அது இயல்பு. ஆனால் கிறிஸ்துவின் பலம் என்னில் வெளிப்படுகின்ற தருணம் அதுவே என்பதை நினைவுகூருவோமானால், துன்பத்திலும் களிகூராமல் நம்மால் இருக்கமுடியாது. வியாதிகள் நம்மை அதிகமாகத் தாக்கும்போது, அந்த வேதனை தாங்காமல் நாம் துடிப்பது இயல்பு. என்றாலும் சிலுவையில் நமது வேதனைகளைச் சுமந்தவர் என்னில் மகிமைப்படும் நேரம் அதுவே என்று எண்ணிப் பாருங்கள், துதி கீதம் எழும்பாமற் போகாது.
ஜெபம்: “ஆண்டவரே, என் பலவீனத்தில் உம் பெலம் விளங்குமானால், நான் பலவீனனாகவே இருந்துவிடுகிறேன்; நீர் என்னில் மகிமைப்பட்டால் அதுபோதும், ஐயனே! ஆமென்.”