வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 1 புதன்

நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருங்கள். (1தெச. 4:3).

சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். (உபா.7:14)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 21-23 | மாலை: அப்போஸ்தலர் 7:41-60

ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 1 புதன்

கர்த்தா என் நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன் இருக்கிற என் சுத்தத்திற்குத் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார் (2சாமுவேல் 22:25).

நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன் (சகரி.9:12) தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டு புதிய மாதத்திற்குள் பிரவேசிப்போம். கர்த்தர் இரட்டிப்பான நன்மைகளால் நம்மை முடிசூட்டி எல்லாத் தீங்குக்கும் விலக்கி இரட்சிக்கவும் நம்மை தாழ்த்தி ஜெபிப்போம்.

மறைவானது எதுவுமில்லை

தியானம்: 2026 ஜூலை 1 புதன் | வேத வாசிப்பு: சங்கீதம் 19:12-14; எபி.4:13-16

YouTube video

அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை (எபிரெயர் 5:13).

பாதி வருடத்தை கர்த்தர் அருளால் நிறைவுசெய்து புதிய மாதத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள நமக்கு, நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு (யோசு.8:1) என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார். யோசுவாவைப் பெலப்படுத்தின ஆண்டவர் நம்மையும் பெலப்படுத்தி இம்மாதத்தை ஆசீர்வதித்துத் தருவார்.

“நான் செய்த ஒரு தவறான காரியம், கடைசிவரைக்கும் யாருக்கும் தெரியாமலே இருந்தது. அது எவருக்கும் தீங்கு விளைவிக்காவிட்டாலும், எனக்குள் உண்டான குற்றஉணர்வு என்னைக் குத்திக் குதறிவிட்டது. மனுஷர் கைகளில் விழுவதிலும் ஆண்டவர் கைகளில் விழுவது நல்லது என்று உணர்ந்தேன். என் உள்ளத்தில் நான் மறைவாக கட்டி வைத்திருந்த விஷயத்தை உண்மைத்துவத்துடன் அவிழ்த்து விட்டேன். அவர் அருமையாகவும் என் தலை கவிழ்ந்து விடாமலும் காரியத்தைக் கையாண்டு, எனக்கு விடுதலை தந்தார். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.” இது ஒருவருடைய உண்மை சாட்சி.

தேவனுடைய மகத்துவத்தை வெளிப்படுத்துகின்ற அவருடைய சிருஷ்டிப்பையும், வல்லமைமிக்க வார்த்தையையும் ருசித்துப் பாடிய தாவீது, இந்த தேவனுக்கு முன்பாக எதுவும் மறைந்திருக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது என்பதை உணருகிறார். யார்தான் தன் பிழைகளை உணருகிறான்? உணர்ந்தால்தானே ஏற்றுக்கொள்ளமுடியும். ஏற்றுக்கொண்டால்தானே மனந் திரும்பி அறிக்கை செய்ய முடியும். அடுத்தவரில் பிழைகளைத் திருப்பிவிடுவதில் முனைப்பாயிருக்கிற மனிதன், தன் அவலநிலையை உணருவதில்லை. இங்கே தாவீது, “மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்” என்று ஜெபிக்கிறார். ஆம், இந்தப் பிரபஞ்சத்தை தாமே சிருஷ்டித்து, ஆளுகை செய்யும் தேவாதி தேவனுக்கு எதனை மறைக்கமுடியும்? மெய்யாகவே எந்தவொரு மனிதரும் காணமுடியாத சந்தர்ப்பத்திலும்கூட, நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியத்தை மாத்திரமல்ல, நாம் மனதிலே நினைப்பவை, கற்பனையில் பார்க்கிறவை என்று யாவையும் கர்த்தர் அறிவார். பின்னர் ஏன் நாம் அவருக்கு மறைக்கவேண்டும். மறைத்தால் அது நமக்குள் குற்றமனப்பான்மையைத் தோற்றுவித்துவிடும். இது நம்மை ஊனப்படுத்த வோ, நமக்குள் பயத்தைத் தோற்றுவிக்கவோ முடியும். இது மிகவும் ஆபத்தானது.

“அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாகவும் வெளியரங்கமாகவுமிருக்கிறது” (எபி.4:13). மனிதருக்கு எதையும் மறைக்கலாம், அல்லது, ஆலோசனை பெறுகின்ற நோக்கில் கூறினாலும், அவர்கள் அதை வைத்தே நம்மை வேதனைப் படுத்தலாம். மாறாக, எதையும் உண்மைத்துவமாய் அறிக்கையிட்டால் நம்மை ஏற்றுக்கொண்டு, நம்மை வழிநடத்த ஒரு அன்பான ஆண்டவர் நமக்கு இருக்கும்போது, நாம் ஏன் குற்ற உணர்வுடன் போராடவேண்டும்; மனிதரை நாட வேண்டும்? தைரியமாய் அவருடைய கிருபாசனத்தண்டை சேருவோமாக.

ஜெபம்: அன்பின் தகப்பனே, மறைவான குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட உம்முடைய சமுகத்தில் எங்களைத் தாழ்த்துகிறோம். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (ஜூலை – ஆகஸ்டு 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

“அண்டசராசரங்களையும் படைத்து ஆண்டு நடத்திவருகிற தேவாதிதேவனின்” நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

ஜூலை-ஆகஸ்டு தியானபுத்தகத்தின் வாயிலாக பங்காளர்கள் வாசகர்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உலகநாடுகளுக்கிடையே அமைதி இல்லை. அரசியல் குழப்பங்கள், கொடிய நோய் பரவலுக்கான செய்திகள், கால சூழ்நிலைகளில் வேறுபட்ட நிலை இவைகளே அன்றாடம் நாம் கேள்விப்படுகிற செய்திகள். எசேக்கியேல் 9:4ஆம் வசனத்தில் நாம் வாசிக்கிறபடி இதுபோன்ற எல்லா காரியங்களுக்காகவும் மேலும் தேசத்தில் காணப்படும் அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சு விட்டெழுது திறப்பிலே நின்று ஜெபிக்கிறவர்களாக இருக்க நம்மை அர்ப்பணிப்போம். நம்மனைவரின் ஒருமனப்பட்ட ஜெபத்திற்கு நல்ல பலனை நாம் நிச்சயம் காண்போம்.

சத்தியவசன தொலைக்காட்சி, வாட்ஸ்அப், இணையதளம், YouTube ஊடகங்கள் மூலமாகவும் மாதாந்திர பத்திரிக்கை, இலக்கியபணி வாயிலாகவும் அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். இவ்வூழியத்தை ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழில் ஜூலை மாத தியானங்களில் கிறிஸ்துவை நமது வாழ்வில் பிரதிபலிப்பதைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் ஆழமான சத்தியங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். ஆகஸ்டு மாதம் யோசுவா, நியாயாதிபதிகளின் புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருநாளின் தியானங்களும் நமது ஆவிக்குரிய வாழ்விற்கு அதிக பிரயோஜனமுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம்.

ஆ.ஜான் துரை

தாகம்!

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்டு 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: சங்கீதம் 42; யோவான் 4:1-15

என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (சங்கீதம் 42:2).

ஒரு மனிதன் உயிர்வாழ அவசியமானவற்றை சங்கீதம் 42 இன் முதல் இரு வசனங்கள் குறிப்பிடுகின்றன. 1. காற்று 2. தண்ணீர் 3. உணவு; இவைகள் ஆடம்பரமானவைகள் அல்ல; ஆவிக்குரிய வாழ்க்கையிலும் காற்று, தண்ணீர் மற்றும் உணவு ஆகியன முக்கியமானவைகளே. தேவனுடைய ஆவியே நமது மூச்சு (யோவான் 20:22), தேவனுடைய வார்த்தையே நமது தண்ணீர் (7:37-39), தேவனுடைய வார்த்தையே நமது உணவு (மத். 4:4). இன்று நாம் குடிக்கும் தண்ணீரைப் பற்றி தியானிப்போம். அது பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளம். (சுத்திகரிப்புக்கான தண்ணீர்) தேவனுடைய வார்த்தையைக் குறிக்கும். யோவான் 15:3 மற்றும் எபே.5:26 காண்க. இங்கு ஆவிக்குரிய தாகத்தை தீர்ப்பதற்கு தேவையானவை எவை?

தாகம் விருப்பத்தை உள்ளடக்கியது.

தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தேவனை நன்கு அறிந்துகொள்ளவும், அவருடன் நெருக்கமாக இருக்கவும் மிகுந்த ஆசைப்பட வேண்டும். அந்த தாகம் இல்லாவிட்டால், அவர் விசுவாசியாகவோ அல்லது தவறான ஆதாரங்களைச் சார்ந்தவராகவோ இருப்பார். “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டு விட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்” (எரே.2:13). எப்பொழுதும் மாற்றுகளை நம்பி வாழ்வது ஆபத்தானது. “நீர் எங்களை உமக்காகப் படைத்தீர். எங்கள் இருதயங்கள் உம்மில் ஓய்வெடுக்கும் வரை அவை அமைதியற்றிருக்கும்”; என்று தூய அகஸ்டின் எழுதியுள்ளார். ஒரு விக்கிரகம் தேவனுக்கு மாற்றாக அமையலாம். இந்த மாற்றுகள் மெய்வாழ்வைத் தராது. சங்கீதம் 115:8 இல் உயிரற்ற சிலைகளின் பண்புகளை சங்கீதக்காரன் விளக்குகிறார். “அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள்.” நாம் தேவனை அறிந்து கொள்ளவும் அவரைப்போல மாறவும் வாஞ்சிக்கிறோமா? “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங்.63:1). இதுவே உண்மை!

தாகம் தீர்மானத்தை உள்ளடக்கியது.

ஒரு சிற்றுண்டிசாலையில் உணவு வழங்குபவர் “உங்களுக்கு என்ன தேவை?” என்று வினவுகிறார். அதை நாம்தான் முடிவு எடுக்கவேண்டும். ஆனால் அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசியின் வாழ்வில் எழும் ஆவிக்குரிய தாகத்தில் ஒரே ஒரு முடிவுதான் உண்டு. “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்”; (வெளி.22:17). எனக்கு நீரிழிவு நோய் இருப்பதாக எனது மருத்துவர் கூறிய பின்னர் எனக்கு அநேக ஆலோசனைகள் கூறினார். அதில் முக்கியமானது: “உமக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை சாப்பிடுவதில் உள்ள ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்”. தீர்மானம் உங்களுடையது. உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அழைப்பு சாதாரணமானது. வந்து குடியுங்கள். “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). இருதயத்தின் நிறைவுக்கு விசுவாசமே காரணம். உலகில் வேறு எதுவும் அதற்கு மாற்றாகாது.

தாகம் மகிழ்ச்சியை உள்ளடக்கியது.

உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை விளம்பரப்படுத்துவோர் “திருப்தி” என்பதை வலியறுத்துவர். அப்பொருள் உண்மையிலேயே நுகர்வோரை திருப்திபடுத்தும் எனில் அவர்கள் வேறொரு பொருளை நாட மாட்டார்கள். இயேசு நம்மை அனைத்து வழிகளிலும் திருப்தியளிக்கிறார். அவரை மாற்றுவதற்கு நமக்கு எந்த ஒரு விருப்பமும் இல்லை. “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது” (யோவான் 4:14). இரட்சிக்கப்படாத மக்கள் தங்களது தாகத்தைத் தீர்த்துக்கொள்ள வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறார்கள். பின்னர் தங்களது நித்தியத்திலும் அதைத் தணிக்கமுடியாது அவதிப்படுகிறார்கள் (லூக்கா 16:49). எசேக்கியேல் 47:1-12 இல் காணப்படும் ஜீவநதியின் தண்ணீர் கடவுளின் பிள்ளைகளுக்கு ஆழத்தின்மேல் ஆழமாகக் கிடைக்கும். ஜீவத்தண்ணீர் இலவசம்; ஆனால் அது இயேசுவின் ஜீவனாலே நமக்குக் கிடைத்தது. நாம் தாகமடையாமல் இருப்பதற்காக அவர் சிலுவையில் தாகமானார் (லூக்கா 19:28). இந்த அழைப்பு நித்தியமானது. என்றும் ரத்து செய்யப்படமாட்டாது. நீங்கள் இந்த அழைப்புக்கு பதிலளித்தீர்களா ஆம், எனில் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டீர்களா?

தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன் (வெளி.21:6).

(மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை)

வேதாகமத்தில் எப்படிப் பல பதிப்புகள் நமக்குக் கிடைத்தன!

வேதாகமம் உருவானது எப்படி? (ஜூலை – ஆகஸ்டு 2026)
Dr.உட்ரோ குரோல்

5. கோடக்ஸ் அலெக்சான்டிரினஸ்

இந்தக் கையெழுத்துப் பிரதி, எகிப்தில் கி.பி.450 இல் நகல் எடுக்கப்பட்டது. 1708 இல் அலெக்சான்டிரியாவில் உள்ள கோத்திரப்பிதாவின் கைகளில் கிடைத்தது. பின்னர் இது 1757 இல் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் ஒப்படைக்கப்பட்டது. கிறிஸ்தவ திருச்சபையின் ஆரம்ப 500 வருஷங்களில் கிடைத்த மிக முக்கியமான வேதாகமத்தின் கையெழுத்துப் பிரதிகளில் சில இவை. 1200 வருடங்களாக லத்தீன் வல்கேட் வேதாகமம் கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப் பட்ட தரமான மொழியெர்ப்பாக இருந்தது.

இப்பொழுது நாம் கடந்த 500 வருடங்களாகச் செய்யப்பட்ட வேதாகம மொழி பெயர்ப்புகளைப் பார்ப்போம். முதலாவது ஜேம்ஸ் மன்னரின் பதிப்பு. இங்கிலாந்தின் அரசராய் இருந்த ஜேம்ஸ்-I க்கு, அப்போது மக்கள் பயன்படுத்தி வந்த ஜெனீவா வேதாகமம் பிடிக்கவில்லை. அது ஜான் கால்வினின் மைத்துனரான வில்லியம் விட்டிங்காம் என்பவரால் 1557 இல் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் வைத்து மொழிபெயர்க்கப்பட்டது. அது ஜெனீவா வேதாகமம் என அழைக்கப்பட்டது. இந்த வேதாகமம்தான், ஜான் பனியன், வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர்கள் பயன்படுத்தியதாகும். அமெரிக்காவுக்கு யாத்திரீகர்களாக வந்த மதகுருக்கள் இந்த வேதாகமத்தைத்தான் கொண்டுவந்தார்கள். ஜேம்ஸ் மன்னருக்கு இது பிடிக்காததால், அவர் இன்னொரு மொழிபெயர்ப்புச் செய்யுமாறு கட்டளையிட்டார்.

வேதாகமத்தை நல்லமுறையில் ஆங்கிலத்தில் அரசரின் கட்டளைப்படி மொழிபெயர்ப்பதற்காக 1604 ஜூலை 22ஆம் நாள் 54 மொழிபெயர்ப்பாளர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஆறு குழுக்களாகப் பிரிந்து வேலை செய்தனர். இரண்டு குழுக்கள் வெஸ்ட் மினிஸ்டரிலும், இரண்டு குழுக்கள் கேம்பிரிட்ஜிலும், இரண்டு குழுக்கள் ஆக்ஸ்போர்டிலும் கூடி மொழி பெயர்ப்பு செய்தனர். அவர்கள் 35 வருடங்களுக்கு முன்பாக கான்டர் பரியின் ஆர்ச் பிஷப்பினால் மொழி பெயர்க்கப்பட்ட “பிஷப்பின் வேதாகமத்தையே” பின்பற்றினர். அவசியம் ஏற்பட்ட இடங்களில் மட்டும் மாற்றங்கள் செய்தனர். அவர்களுடைய வேலை மிகவும் கவனமாகத் திறமையாகச் செய்யப்பட்டது. மொழிபெயர்ப்பாளர்களின் பணி நன்கு மேற்பார்வையிடப்பட்டது. லத்தீன் வல்கேட் வேதாகம மொழிபெயர்ப்புக்குப் பின் ஜேம்ஸ் மன்னரின் மொழிபெயர்ப்புதான் மிகவும் வெற்றிகரமானதாய் இருந்தது. இந்த ஜேம்ஸ் மன்னரின் பதிப்பு வேதாகமம் இன்றும் உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்களால் பிரியத்துடன் பயன்படுத்தப்படுகிறது.

அடுத்தபடியாக Revised Standard Version புதுப்பிக்கப்பட்ட தரமான பதிப்பு. இது 1952இல் செய்து முடிக்கப்பட்டது. ஆனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட எல்லா வேதாகமங்களை யும் விட அதிகமான சிக்கல்களையும், பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் கொண்டது. இது அமெரிக்காவின் தேசிய சபைக்குழுவால் வெளியிடப்பட் டிருந்தது.

1971இல் வெளியிடப்பட்டது இது. “The Living Bible” வேதாகம வசனப்பகுதிகளை அப்படியே மொழிபெயர்க்காமல், சுருக்கத்தை உரைநடையில் எழுதுவது போல் ஆக்கப்பட்டது. இது ஒரு தனிமனிதனால் செய்யப்பட்டது. அவர் பெயர் அறிவர் கென்னத் டெய்லர். அவர் தன்னுடைய பிள்ளைகள் படித்துப் புரிந்து கொள்ளும்படி அந்த வேதாகமத்தை எழுதியிருந்தார்.

1972 இல் The New American Standrad Bible முடித்து வெளியிடப்பட்டது. 1973 இல் புதிய சர்வதேச வேதாகமப் பதிப்பு வெளியானது. பின்னர் பத்து வருடங்களுக்குள் The New King James Version வெளியானது. இதில் சில மொழி மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டது. வேதாகம மொழியாக இருந்த thee, thy இவற்றை you, your என்று மாற்றினர்.

புதிய சர்வதேசப் பதிப்பு என்னும் வேதாகமத்தில் வேதாகம நூல்களை எழுதியவர்களின் நோக்கம் மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் வார்த்தைகளைச் சரியாகச் சொல்பொருளின்படி மொழிபெயர்க்கப்படவில்லை. இது மிகப்பழைய கையெழுத்துப் பிரதிகளை ஆதாரமாகக் கொண்டது.

17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிடைத்த, வேதாகம நூல்களின் மூலக் கைப்பிரதிகள் நகல்கள் தொகுக்கப்பட்டுத் தேவைப்படுவோருக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை TEXTUS RECEPTUS என்னும் அமைப்பு செய்திருந்தது. அதை ஆதாரமாகக் கொண்டுதான் ஜேம்ஸ் மன்னரின் வேதாகமப் பதிப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.

இத்தனை வேதாகமப் பதிப்புகளின் அவசியம் என்ன? ஏன் மீண்டும் மீண்டும் வேதாகமம் புதுப்பிக்கப்பட்டும் பதிப்பிக்கப்படுகின்றன. வேதாகமத்திலிருந்து வேத வசனங்களைப் பலவீனப்படுத்தும் எண்ணத்துடனோ, வேதாகமம் திரும்பத் திரும்ப புதுப்பித்து மொழிபெயர்க்கப் படவில்லை. ஆனால் சில வேதாகமப் பதிப்புகள் தாராள மனப்பான்மையுடன் தொடங்குகின்றன. மொழிபெயர்ப்பாளர்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வார்த்தைகளைத் தெரிந்தெடுப்பதிலும் தாராள மனப்பான்மையைக் காட்டிவிடுகிறார்கள். முறையான மொழிபெயர்ப்பாளர்களிடம் இந்த முறைக்கு ஒரு எதிர்ப்பு இருக்கிறது.

நாம் பாரபட்சமின்றி நடுநிலை வகிக்கவேண்டும். இந்த வேதாகமப் பதிப்புகள் எல்லாமே நல்ல நோக்கங்களுடன்தான் செய்யப்பட்டன. மொழி பெயர்ப்பாளர்கள் வேதாகமத்திற்கு ஒரு நல்ல சரியான மொழிபெயர்ப்பையே கொடுக்க விரும்பினர். அவர்களுடைய நோக்கமும் குறிக்கோளும் சரியானவைகளாகவே இருந்தன.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்