ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 5 புதன்

செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும், இவ்வூழியங்களைத் தாங்கும் ஆதரவாளர்களுக்காகவும், ஆங்கில புத்தக வெளியீடுகள், மாதாந்திர பத்திரிக்கைகளின் தேவைகள் சந்திக்கப்படவும், Associate Director Rev. Anilkumar அவர்கள் ஊழியத்தின் முன்னேற்றப் பணிக்கு எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைக் கொண்டுவரவும் ஜெபிப்போம்.

வீழ்ந்தது எரிகோ

தியானம்: 2026 ஆகஸ்டு 5 புதன் | வேத வாசிப்பு: யோசுவா 6:19-27

YouTube video

….. எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது (யோசுவா 6:20).

யோர்தானைக் கடந்து வந்தவர்கள், இப்போது எரிகோ மதிலுக்கு முன்பாக அதுவும் தேவன் சொன்னபடியே, எக்காளங்களை பிடித்தபடி நிற்கிறார்கள். எரிகோ மதிலை ஏழு தடவைகள் சுற்றி வந்து எக்காளங்களை ஊதும்படிக்கும், ஏழாவது தடவையிலே ஏழுதரம் அதை சுற்றிவந்து எக்காளங்களை ஊதும்படிக்கும் ஆண்டவர் சொன்னபடியே அனைத்தையும் செய்தார்கள், இப்போது அலங்கம் விழுந்துவிட்டது.

உள்ளே சென்று, அங்கிருந்த புருஷர் ஸ்திரீகள் அனைவரையும் சங்காரம் பண்ணினார்கள். அங்குள்ள அனைத்துமே சாபத்தீடானவைகள் என்று சொல்லி எதையும் எடுக்கவேண்டாம் என்று இஸ்ரவேலர் எச்சரிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் வேவு பார்க்க வந்தவர்களைப் பாதுகாப்பாக ஒளித்துவைத்த ராகாப் என்னும் வேசியையும் அவளது குடும்பத்தையும் காப்பாற்றும் விதமாக அவர்களைக் கொண்டு வரும்படிக்குச் சொல்லப்பட்டிருந்தது. வேவுபார்க்க இருவர் வந்தபோதே, எரிகோ நகரை அவர்கள் கைப்பற்றி விடுவார்கள் என்றதான நம்பிக்கை ராகாப்புக்குள் வேரூன்றி இருந்தது. எனவே அவர்களை ஒளித்துவைத்து பின்னர் அனுப்பும்போது, நீங்கள் எரிகோவைப் பிடிக்க வரும்போது, என்னையும் எனது குடும்பத்தையும் நினைந்தருளி, எங்களுக்கு உங்கள் கண்களில் தயவு கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அதனால் அவளும், அவளது குடும்பத்தாரும் அழிவினின்று பாதுகாக்கப்பட்டார்கள். அனைத்துமே தேவனின் திட்டப்படியாக, அவர் சொன்ன வாக்குப்படியாகவே நடந்தது. அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து செய்ததினாலேயே எல்லாமே வெற்றியாகவும் முடிந்தது. இங்கும் அவருடைய வார்த்தையும், அதற்குக் கீழ்ப்படிதலுமே முக்கியம் என்பது வலியுறுத்தப்படுகிறதை நாம் மறுக்கமுடியாது.

ஆவிக்குரிய வாழ்விலும் இதேவிதமான வழிநடத்துதலும், வெற்றியும் வேண்டும் என்று நாம் எண்ணுகிறோமா? அப்படியானால் வார்த்தையைப் பற்றிப் பிடித்திடுவோம். “உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்; நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காண்பிப்பேன்” என்று வாக்களித்தவர் நம்மை எப்போதும் வழிநடத்த வல்லவராய் இருக்கிறார். “இந்த நியாயப்பிரமாணப் புஸ்தகம் உனது வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதை தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்வாய்” என்றுதான் கர்த்தர் யோசுவாவிடமும் கூறியிருந்தார். அதையேதான் இன்று கர்த்தர் நம்மிடமும் கூறுகிறார்.

ஜெபம்: கிருபையுள்ள ஆண்டவரே, கர்த்தருடைய கட்டளைகளையும், சாட்சிகளையும் கைக்கொண்டு, அதற்குக் கீழ்ப்படிந்து வெற்றியுள்ள வாழ்க்கை வாழ கிருபை தாரும். ஆமென்.