வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 1 சனி

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (யோவான் 14:26).

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர்; அவர் உன்னோடே இருப்பார். (உபா.31:8)
வேதவாசிப்பு: காலை: யோபு 32-34 | மாலை: அப்போஸ்தலர் 27:21-44

ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 1 சனி

அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். …ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள் (ரோமர் 12:11,12).

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் (ஏசா.66:13) இந்த ஆகஸ்டு மாதத்தை கர்த்தர் காணச்செய்தார். நம்மைத் தேற்றுகிறவரும், வழிநடத்துகிறவருமாகிய பரிசுத்த ஆவியானவர் நம்மை சத்தியத்திற்குள் நடத்தவும் சோர்ந்துபோகாமல் ஓட நம்மைப் பெலப்படுத்தவும் அர்ப்பணித்து ஜெபிப்போம்.

கீழ்ப்படிதலின் ஆசீர்வாதம்

தியானம்: 2026 ஆகஸ்டு 1 சனி | வேத வாசிப்பு: உபாகமம் 28:1-14

YouTube video

இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின்; கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்து வந்தால் … (உபாகமம் 28:15).

இப்புதிய மாதத்திற்குள் நம்மை பிரவேசிக்க செய்த கர்த்தருக்கே கனமும் மகிமையும் உண்டாவதாக. கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நீர் எங்களை உருவாக்குகிறவர் ஏசா.64. அதி. 8ஆம் வசனத்தின்படி இம்மாதம் முழுவதும் பரமகுயவன் நம்மை திருச்சித்தம்போல் வழிநடத்த நம்மை அர்ப்பணிப்போம்.

ஜெபிக்கின்றபோது பலரும் இன்றையதியான வசனத்தின் தொடர்ச்சியான “கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார்” என்ற பகுதியை உபயோகிப்பதுண்டு. ஆனால் இதற்கு முன்னாக அநேக நிபந்தனைகளைக் குறிப்பிட்டு, அவற்றிற்குக் கீழ்ப்படியும்படிக்குக் கர்த்தர் கட்டளையிட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். அப்படி கீழ்ப்படியும்போதுதான் இந்த வாக்குத்தத்தம் நிறைவேறும். நாம் அவற்றை மறந்து இந்த வார்த்தையை மட்டும் பற்றிக்கொண்டிருப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

இன்றைய தியானப்பகுதியில் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, அவர் வழிகளில் நடக்கிறவன், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவன், இவர்களுடைய வாழ்வில் எவ்வகையான ஆசீர்வாதம் கடந்துவரும் என்பதே குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது. அது அவனுக்கு மாத்திரமல்ல, அவனுடைய சந்ததிக்கும் வரும்படியாக தேவன் அவ்வளவாய் ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். “பட்டணத்திலும் வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். போகையிலும் வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் பிள்ளைகள் மிருகஜீவன்களின் பெருக்கங்கள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். மா பிசையும் உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உனக்கு எதிராக ஒரு வழியாய் வந்தவர்கள், சிதறி ஏழு வழியாக ஓடுவார்கள்.” இவை யாவும் தேவனுடைய வாக்கு. இவ்விதமாக ஆசீர்வாதங்கள் கோர்வையாக நமக்குக் கடந்துவரும்.

அதேவேளை மற்றொரு புறம் சாபங்களும் கோர்வையாகவே கூறப்பட் டுள்ளது. அது தேவனை உதாசீனம் செய்பவர்களுக்கும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாதோருக்கும் உரியதாகும். “உன் சத்துருக்களுக்கு முன் நீ சிதறி ஏழு வழியாகச் சிதறுண்டு ஓடுவாய்” என்று சொல்லப்பட்டுள்ளது.

நாம் நிறைவான ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்பதே நமது விருப்பம். ஆனால் அதேவேளை, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் நமக்கு உண்டா? வருடந்தோறும் ஆசீர்வாத வசனங்களை எடுப்பதில் இருக்கும் ஆர்வம், இந்த வருடம் முழுவதும் வசனத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்றதான ஒரு தீர்மானத்தை எடுப்பதில் நமக்கு அந்த ஆர்வம் இல்லை, அதற்கு நாம் பின் நிற்பது ஏன்? அவர்கள் திருவசனத்துக்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள் (1பேது.2:8). இன்று நாம் யார்? வசனத்துக்குக் கீழ்ப்படியும் பிள்ளைகளா? அல்லது அதை அசட்டை பண்ணுகிறேமா?

ஜெபம்: அன்பின் தேவனே, உமது கட்டளைகளுக்கும் கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்து உம்மை நாங்கள் பிரதிபலிக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.