வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 1 செவ்வாய்

உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன் (1யோவான் 5:13).

கர்த்தர் நம்மை பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார். (ஏசா.58:11)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 139-144 | மாலை: 1கொரிந்தியர் 11

ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 1 செவ்வாய்

யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (சங்கீதம் 146:5).

இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார் (ஏசாயா 12:6) என்ற வாக்குப்படியே நமக்குள் வாசம் பண்ணுகிற பரிசுத்தஆவியானவர் நம்முடைய பெலவீனங்களில் நமக்கு உதவி செய்து இம்மாதத்திலும் நமது கைகளின் பிரயாசங்களை எல்லாம் வாய்க்கச் செய்வதற்கு நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

நம்மை விசாரிக்கிறவர்

தியானம்: 2026 செப்டம்பர் 1 செவ்வாய் | வேத வாசிப்பு: 1பேதுரு 5:6-11

YouTube video

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேது. 5:7).

இப்புதிய மாதத்தை தந்த கர்த்தாதி கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். கர்த்தர் உங்கள் முன்னே போவார் (ஏசாயா 52:12) என்ற வாக்குப்படி கர்த்தர் நமக்கு முன்னேசென்று பாதைகளைச் செவ்வைப்பண்ணி, நம்மனைவரையும் ஆசீர்வாதமாய் நடத்துவார்.

எனக்கென்று யாருமேயில்லை, எங்களது துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள எவருமேயில்லை, என்று வேதனைப்படுகிறவர்கள் பலர். இதோ, கர்த்தர் நம்மை விசாரிக்கிறவர் என்று பேதுரு நம்மைத் தைரியப்படுத்துகிறார். ஆம், கர்த்தர் நம்மை விசாரிக்கிறவர்; அவர் நமக்காகப் பரிதபிக்கிறவர். நமக்கு ஆறுதல் அருளுகிறவர்; நம் கண்ணீரைத் துடைக்கிறவர். அவர் நம் வாழ்வில் எல்லாவற்றுக்கும் போதுமானவராக இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு தேவன் நமக்கு இருந்தாலும் நாம் பல தடவைகளில் சோர்வுக்கு இடங்கொடுத்து விடுகிறோம். நமது தேவை சந்திக்கப்பட தாமதிக்கும்போது மனமடிவாகி விடுகிறோம். நமது நியாயங்கள் புரட்டப்படும்போது, நம்மை ஆறுதல்படுத்த யாரும் இல்லாதபோது கலங்கிவிடுகிறோம். நம்மை அன்புடன் விசாரித்து ஆறுதல் வார்த்தை கூற யாரும் இல்லையே என்று கவலைப்படுகிறோம். அந்தவேளைகளிலெல்லாம் நம்மை விசாரிக்க ஒருவர் நமக்கிருக்கிறார், நம்முடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிட முடியும் என்பதை நாம் மறந்துவிடுவது ஏன்? பேதுரு எழுதிய இந்த வசனத்தை, “உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் விட்டெறிந்து விடுங்கள்” என்று ஒருவர் சொன்னார். உண்மைதான், நமது பாரங்களைச் சுமக்க ஆண்டவர் நமக்கு இருக்கும்போது ஏன் நாம் வீணாய் சுமக்கவேண்டும்?

ஆகாரின் வாழ்க்கையைப் பாருங்கள். சாராயின் கையின்கீழ் அடங்கியிருக்க விரும்பாமல் ஓடிப்போனாள். வனாந்தரத்தில் கர்த்தருடைய தூதனானவர் அவளைச் சந்தித்து, “எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” (ஆதி.16:8) என்று விசாரித்து, அவளை ஆறுதல்படுத்தி, நாச்சியாரிடத்துக்கு திருப்பி அனுப்பியும் வைக்கிறார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில், ஆபிரகாம், ஆகாரையும், பிள்ளையையும் அனுப்பிவிட்டபடியினால், வனாந்தரத்தில் அவள் அலைந்து திரிந்தபோது, அவள் கொண்டுவந்த தண்ணீர் செலவழிந்துவிட்டது. ஒன்றும் செய்ய முடியாதநேரம், ஆகார் பிள்ளையைச் செடியின் கீழ் விட்டுவிட்டு, பிள்ளை சாகிறதை தான் பார்க்கமுடியாது என்று தூரத்திலே போய் உட்கார்ந்து, சத்தமிட்டு அழுதாள். அவளின் சத்தத்தைக் கர்த்தர் கேட்டார். அவளின் அலைச் சலைக் கர்த்தர் கண்டார். “ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது? பயப்படாதே” (ஆதி.21:17) என்று அவளை விசாரித்து ஆறுதல்படுத்தினார். தாகத்தைத் தீர்க்க அவளுக்கு தண்ணீர்த் துரவையும் காண்பித்தார். கர்த்தர் ஏதோ கடமைக்காக நம்மை விசாரிக்கிறவர் அல்ல; மனதுருக்கத்துடன், கருத்துடன் விசாரிக்கிறவர். அன்று ஆகாரை விசாரித்தவர் நம்மைக் கைவிடுவாரா? ஆகவே, தைரியத்துடன் நமது பாரங்கள் துக்கங்களை அவர்மீது விட்டெறிந்து விடுவோமாக. அவர் பார்த்துக்கொள்வார்.

ஜெபம்: தகப்பனே, நீர் எங்களை நினைத்து விசாரித்து தேற்றுகிறீர். ஸ்தோத்திரம். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

“ஒருவராய்‌, சாவாமையுள்ளவரும்‌, சேரக்கூடாத ஒளியில்‌ வாசம் பண்ணுகிறவருமாகிய தேவனின்‌” நாமத்தில்‌ அன்பின்‌ வாழ்த்துக்களைத்‌ தெரிவிக்கிறோம்‌.

இம்மாத தியானப்புத்தகம்‌ சரியான நேரத்தில்‌ பங்காளர்களுக்கு அனுப்பிவைக்க கர்த்தர்‌ பாராட்டின கிருபைகளுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம்‌. தியானங்கள்‌ வாயிலாக தாங்கள்‌ பெற்றுக்கொண்ட நன்மைகளை எங்களுக்குத்‌ தெரியப்‌படுத்துங்கள்‌. உங்களோடு சேர்ந்து நாங்களும்‌ தேவனை மகிமைப்படுத்த அது ஏதுவாயிருக்கும்‌. தியானபுத்தகத்தை தங்கள்‌ விசுவாச நண்பர்களுக்கும்‌ உறவினர்களுக்கும்‌ அறிமுகப்படுத்துங்கள்‌.

ஜுலை 17ஆம்‌ தேதி வெள்ளிக்கிழமை சென்னையில்‌ நடைபெற்ற போதகர்‌, பங்காளர்களுக்கான வேதாகம கருத்தரங்கு சிறப்பாக நடைபெற கர்த்தர்‌ உதவி செய்தார்‌. கருத்தரங்கில்‌ பங்குபெற்ற பங்காளர்‌ அனைவருக்கும்‌ நன்றிகளைத்‌ தெரிவித்துக்கொள்கிறோம்‌.

சத்தியவசன தொலைக்காட்சி, வாட்ஸ்‌அப்‌, இணையதளம்‌, YouTube ஊடகங்கள்‌ மூலமாகவும்‌ மாதாந்திர பத்திரிக்கை, இலக்கியபணி வாயிலாகவும்‌ அநேகமாயிரமான மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டுக்‌ கொண்டு வருகிறது. வசனம்‌ வெறுமையாய்‌ திரும்பாமல்‌ கர்த்தர்‌ அனுப்பின காரியமாகும்படி வாய்க்க உங்கள்‌ ஜெபங்களில்‌ வேண்டுதல்‌ செய்யுஙகள்‌.

இவ்விதழில்‌ செப்டம்பர்‌ மாத தியானங்களில்‌ சகோதரி சாந்தி பொன்னு அவர்கள்‌ எழுதியுள்ள தியானங்களும்‌, மிஷனரிபணியைக்‌ குறித்த தரிசனம்‌, மிஷனரிபணிகளில்‌ உள்ள சவால்கள்‌, பணித்தளங்களில்‌ உள்ள பிரச்சனை மற்றும்‌ தேவைகளை நாம்‌ அதிகம்‌ அறிந்துகொள்ளும்படியாக மிஷன்பணிகளைப்‌ பற்றிய தியானங்களை அக்டோபர்‌ மாதத்திற்கு தொகுத்து வழங்கியுள்ளோம்‌. இத்தியானங்கள்‌ நமது ஜெபவாழ்விற்கு அதிக பிரயோஜனமுள்ளதாக இருக்கும்‌. தியானங்களை எழுதும்‌ சகோதர, சகோதரிகளை உங்கள்‌ ஜெபங்களில்‌ மறவாதீர்கள்‌.

ஆ.ஜான் துரை

தேவனின் ஆளுகை!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: சங்கீதம்‌ 47: 1-9; ஏசாயா 42: 1-8

தேவன்‌ ஜாதிகள் மேல்‌ அரசாளுகிறார்‌; தேவன்‌ தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல்‌ வீற்றிருக்கிறார்‌ (சங்கீதம்‌ 47:8).

“உலகமயமாக்கல்‌: என்ற வார்த்தையை, இஸ்ரவேலின்‌ கோத்திரப்பிதாக்கள்‌, சங்கீதக்காரர்கள்‌, தீர்க்கதரிசிகள்‌, அப்போஸ்தலர்கள்‌ கேட்டதில்லை. ஆனாலும்‌ அவர்கள்‌ உலகளாவிய தன்மையில்‌ ஆர்வம்‌ கொண்டிருந்தார்கள்‌. யேகோவா யூதர்களின்‌ தெய்வம்‌ அல்ல; அவர்‌ “பூமியின்‌ இராஜாக்களுக்கு அதிபதி” (வெளி 1:5). கர்த்தருடைய பார்வையில்‌ தேசங்கள்‌ ஏற்றச்சாலில்‌ தொங்கும்‌ துளி போலவும்‌, தராசிலே படியும்‌ சிறு தூசிபோலவும்‌ (ஏசாயா 40:15); இருக்கின்றன. ஆனால்‌ அவை தேவனுடைய சத்திய வசனத்தின்‌ விதையை விதைக்கும்‌ வயல்களான திருச்சபையாகும்‌ (மத்‌.28: 18-20). “உமது ராஜ்யம்‌ வருக” என்று ஜெபிக்கும்‌ ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசிக்கும்‌ தேசங்களுக்கான வசன விதைப்பு ஊழியம்‌ அவசியமானது.

தேவன்‌ தேசங்களை உண்டாக்கினார்‌:

“மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும்‌ அவர்‌ ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி பூமியின்‌ மீதெங்கும்‌ குடியிருக்கச்செய்தார்‌” (அப்‌.17:26). உலகம்‌ ஆதாம்‌ ஏவாளுடன்‌ தொடங்கி, பெருவெள்ளத்திற்குப்‌ பிறகு (ஆதி.10-11) பல தேசங்கள்‌ வளர்ச்சிபெற்று வியாபித்தன. பழைய ஏற்பாட்டின்‌ முதன்மை கவனம்‌ இஸ்ரவேலை நோக்கி இருந்தாலும்‌ அதில்‌ பல்வேறு பிற தேசங்களும்‌ குறிப்பிடப்‌பட்டுள்ளன. மேலும்‌ உலகின்‌ ஒவ்வொரு தேசத்திற்கும்‌ நற்செய்தியைக்‌ கொண்டு செல்லும்படி கிறிஸ்துவின்‌ “மாபெரும்‌ கட்டளை” நம்மை வலியுறுத்துகிறது (லூக்‌.24:46-49).

தேவன்‌ தேசங்களைத்‌ தாங்குகிறார்‌:

“ஏனெனில்‌ அவருக்குள்‌ நாம்‌ பிழைக்கிறோம்‌, அசைகிறோம்‌, இருக்கிறோம்‌”; வெவ்வேறு மொழிகள்‌, பழக்கவழக்கங்கள்‌ மற்றும்‌ வளங்களைக்‌ கொண்டிருந்‌தாலும்‌ தேவனருளும்‌ சூரியஒளி, மழை. உணவு, காற்று மற்றும்‌ மண்‌ வளங்களை தேசங்கள்‌ சார்ந்துள்ளன. இவையும்‌ ஒன்றையொன்று சார்ந்துள்ளன. நமது தொலைபேசிகளில்‌ குறைந்தது இருபத்திரண்டு வெவ்வேறு நாடுகளின்‌ பொருட்கள்‌ உள்ளன என்பதை நான்‌ அறிகிறேன்‌. இங்குதான்‌ உலகமயமாக்கல்‌ வருகிறது.

தேவன்‌ காலங்களையும்‌ எல்லைகளையும்‌ நிர்ணயிக்கிறார்‌.

“அவர்களுக்குக்‌ குறிப்பிட்ட காலங்களையும்‌ குடியிருக்கும்‌ எல்லைகளையும்‌ நிர்ணயிக்கிறார்‌” (அப்‌.17:26). தேசங்களும்‌ பேரரசுகளும்‌ தோன்றி மறைகின்றன. தேசிய எல்லைகள்‌ மாறுகின்றன; ஆனால்‌ அதன்‌ வரலாறும்‌ புவியியலும்‌ கர்த்தரின்‌ கைகளில்‌ உள்ளன. தேசங்களின்‌ தலைவர்களை அவரே தோன்றப்பண்ணுகிறார்‌. “அவர்‌ இராஜாக்களை நீக்கி, இராஜாக்களை ஏற்படூத்துகிறவா”; (தானி. 2:21). “உன்னதமானவர்‌ மனுஷருடைய ராஜ்யத்தில்‌ ஆளுகை செய்து தமக்குச்‌ சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்‌ கொடுக்கிறார்‌” (தானி. 4:32). “தேவனே நியாயாதிபதி; ஒருவனைத்‌ தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்‌” (சங்‌. 75:7). தலைவர்கள்‌ செய்த சுயநலமான மற்றும்‌ செயல்களுக்கு தேவன்தான்‌ காரணம்‌ என்று இதற்கு பொருளாகாது. நாம்‌ ஒவ்வொருவரும்‌ நமது முடிவுகளுக்குப்‌ பொறுப்பாளர்கள்‌. தேவன்‌ தமது சித்தத்தை நிறைவேற்ற மனந்திரும்பாத அரசாங்கத்‌ தலைவர்களைக்கூட பயன்படுத்தமுடியும்‌. தமது மக்களான இஸ்ரவேலரைத்‌ தண்டிப்பதற்காகப்‌ புறஜாதிதேசங்களையும்‌, இயேசு பெத்லெகேமில்‌ பிறப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க ரோமானியப்‌ பேரரசரையும்‌ பயன்படுத்தினார்‌.

“கர்த்தராகிய தம்மை அவர்கள்‌ தடவியாகிலும்‌ கண்டுபிடிக்கத்தக்கதாகத்‌ தம்மைத்‌ தேடும்படிக்கு அப்படிச்‌ செய்தார்‌; அவர்‌ நம்மில்‌ ஒருவருக்கும்‌ தூரமானவரல்லவே” (அப்‌.17:27). பழைய ஏற்பாட்டுக்‌ காலங்களில்‌ “புறஜாதியாருக்கு ஒளியாக இருக்க இஸ்ரவேலர்‌ அழைக்கப்பட்டனர்‌ (ஏசாயா 42:6; 49:6). ஆனால்‌ அவர்கள்‌ அதில்‌ தோல்வியடைந்தனர்‌. இக்காலத்தில்‌ திருச்சபையார்‌ மூலமாக இச்சுவிசேஷ ஒளி உலகம்‌ முழுவதும்‌ செல்ல வேண்டும்‌ (லூக்‌. 2:32; அப்‌. 13:42-47). தேசங்கள்‌ கர்த்தருக்கு விரோதமாகக்‌ கலகம்‌ செய்துள்ளன (சங்‌. 2:1-3), ஆனாலும்‌ அவருடைய அழைப்பு யூதர்கள்‌ மற்றும்‌ புறஜாதியார்‌ இருவருக்கும்‌ சமமாக இன்றும்‌ செல்கிறது (சங்‌.2:10-12).

கர்த்தர்‌ தம்முடைய கிருபையினால்‌ நம்மை கிறிஸ்துவுடனேகூட எழுப்பி, தம்முடன்‌ உட்காரும்படிச்‌ செய்திருக்கிறார்‌ என்பதை நினைவில்‌ கொள்ள வேண்டும்‌ (எபே.2:5-6). அவர்‌ நம்மை ராஜாக்களாக்கியுள்ளார்‌ (வெளி.1:5-6). மேலும்‌, நாம்‌ “கிறிஸ்து இயேசுவின்‌ மூலமாக ஆளுகை செய்ய முடியும்‌ (ரோமர்‌5:1). தேவனுடைய புதிய வானம்‌ புதிய பூமியில்‌ சதாகாலமும்‌ என்றென்றைக்கும்‌ அரசாளமுடியும்‌ (வெளி. 22:3-5).

நாம்‌ வாழும்‌ தேசத்தில்‌ மார்க்கம்‌ தப்பி நடந்தோரை சத்திய வழிக்குள்‌ வரவழைக்க அவர்களுக்காக ஜெபிக்கவும்‌, நற்செய்தியைப்‌ பகிர்ந்து கொள்ளவும்‌ நம்மால்‌ இயன்றதனைத்தையும்‌ செய்ய மறக்கவேண்டாம்‌. தேவன்‌, “சகல கோத்திரம்‌, பாஷை, ஜனங்கள்‌, ஜாதிகள்‌” அனைவரையும்‌ மீட்க விரும்புகிறார்‌ (வெளி.5:9). தேவன்‌ ஒவ்வொரு தேசத்தின்‌ மீதும்‌ ஆளுகை செய்கிறார்‌. உங்களுடைய வாழ்க்கையின்‌ மீதும்‌ அவருக்கு ஆளுகை உண்டா?

(மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை)

வேதாகமத்தில் எப்படிப் பல பதிப்புகள் நமக்குக் கிடைத்தன!

வேதாகமம் உருவானது எப்படி? (செப்டம்பர் – அக்டோபர் 2026)
Dr.உட்ரோ குரோல்

மொழிபெயர்ப்புகளில் வேறுபாடுகள் தோன்ற காரணம் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைக்கும் வேதாகமப் பிரதி நகல்கள் வித்தியாசப்படுவதேயாகும். ஒரு மொழிபெயர்ப்பாளர் தன்னிடம் கொடுக் கப்பட்டிருக்கும் கைப்பிரதியையே மொழி பெயர்ப்பார். ஒவ்வொரு குழுவும் பயன் படுத்தும் மூல கையெழுத்துப் பிரதிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை அடித்துவிட அல்லது எடுத்துவிட எவரும் சதித்திட்டம் தீட்டுவதில்லை. கையெழுத்துப் பிரதிகளில் ஒரு நிகழ்ச்சி பற்றிய விளக்கத்தில் வேறுபாடுகள் இருக்கலாம். எதைப் பயன்படுத்துவது? என்பது மொழி பெயர்ப்பாளரின் முன்னுள்ள பிரச்சனை.

ஒவ்வொரு பிரிவும், குழுவும் ஏன் இப்படிக் குறைபாடும், மாற்றங்களும் உள்ள கையெழுத்துப் பிரதிகளைத் தெரிந்தெடுக்கின்றன? என்னும் கேள்வி வருகிறது. சில கையெழுத்துப் பிரதிகளில் தோல் அல்லது பாப்பிரஸ் சிதைவடைந்திருக்கும், கிழிந்திருக்கும், ஒரு துண்டு இல்லாமல் இருக்கும். சில இடங்களில் எழுத்துக்கள் மங்கி, வார்த்தை என்ன? என்று அறியமுடியாமல் இருக்கும். இவைகளை மொழிபெயர்க்கும்போது வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டல்லவா? ஆனால் மொழிபெயர்ப்பாளர் அனைவருடைய எண்ணங்களும், நோக்கங்களும் ஒரேமாதிரியாகவே இருக்கும்.

ஜேம்ஸ் மன்னரின் வேதாகமப் பதிப்புடன் தான் நான் வளர்க்கப்பட்டேன். நான் மனப்பாடம் பண்ணியிருக்கும் வேதவசனங்கள் எல்லாம் அதில் உள்ளவைகளே. எனக்குப் புதுப்பிக்கப்பட்ட ஜேம்ஸ் மன்னரின் வேதாகமப் பதிப்பும் பிடிக்கும். ஏனெனில் அதில் சில வார்த்தை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் சந்தோஷத்தைத் தரும்.

அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வேதாகம் வாசிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சுலபமாய் இருக்கிறது. சர்வ தேசப்பதிப்பைப் படிக்கும்பொழுது எழுத்தாளர்களான பவுல், பேதுரு, யாக்கோபு இவர்களின் நோக்கம் எனக்குப் புரிந்து விடுகிறது. அவர்களுடைய நிருபங்களின் முதல்பிரதி அதை வெளிப்படுத்துகிறது.

சரி. எந்தப் பதிப்பு சிறந்தது? அது நீங்கள் விரும்பி வாசிக்கும் வேதாகமம்தான்! நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பை மிக நல்லது என்று கூறிக்கொண்டு, அதை வாசிக்காமல் இருந்தால் அதனால் பலன் என்ன?

நீங்கள் உங்களுக்கு ஜேம்ஸ் மன்னரின் வேதாகமப் பதிப்பு பிடிக்கும் என்று கூறுவீர்களானால், அதைத் தினமும் விரும்பி வாசியுஙகள். நீங்கள் சர்வதேசப்பதிப்பு வேதாகமத்தைப் பிடிக்கிறது என்று கூறுவீர்களானால் அதை வாசியுங்கள். வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாக வசனங்களை ஆக்குங்கள். வேதவசனங்களின்படி உலகில் வாழ்ந்து காட்டுங்கள்.

வேதாகம மொழிபெயர்ப்புகளைப் பற்றி வாதம் செய்வதை விட்டுவிட்டு, அதை வாசிக்கத் தொடங்கிவிடுவோமானால் அது நம் அனைவருக்கும் நல்லது. நாம் பரலோகத்திற்குச் சென்று சேருவது வரை உலகத்தில் இருக்கும் வேதாகமக் கைப்பிரதிகளில் சிறந்தது எது? உண்மையானது எது? என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியாது.

இன்று அது நமக்கு ஒரு விசுவாசச் செயலாக இருக்கிறது. அந்த விசுவாசத்தைச் செயல்படுத்துங்கள். இதுகுறித்து உங்களோடு வாதம் செய்கிறவர்கள், மறுத்துப் பேசுகிறவர்களிடம் இரக்கமாயிருங்கள். ஆத்திரப்படாதேயுங்கள்.

வேதாகமத்தை வாசியுங்கள்! கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள்! கர்த்தருடைய வசனம் உங்களை மாற்றட்டும். அப்படி நடக்குமானால் உங்க ளிடம் வேதாகமத்தின் சரியான மொழி பெயர்ப்பு உள்ளது.

அதிகாரம் – 4

வேதாகமத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்கள்
ஜான் விக்ளிஃப்

சீர்திருத்தத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர் ஜான் விக்ளிஃப். விடிவெள்ளி என்பது அதிகாலையில் சூரியஉதயத்துக்கு முன் கிழக்குதிசையில் ஆகாயத்தில் காணப்படும் பிரகாசமான ஒரு நட்சத்திரம்.

அவர் இங்கிலாந்தில் யாக்ஷையர் என்னுமிடத்தில் இப்ஸ்வெல் என்னும் கிராமத்தில் 1330இல் பிறந்தார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்லியோல் என்னும் கல்லூரியில் பயின்றார். தன் படிப்பை முடித்தபின் அதே கல்லூரியில் ஆசிரியர் ஆனார். அதன்பின் அவருடைய வாழ்நாள் முழுவதும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் அவருக்குத் தொடர்பு இருந்ததுபோல் தோன்றுகிறது. அவரது கல்லூரியில் ஆசிரியர் குழுவில் இவரே மிகவும் திறமையும் புகழும் பெற்றவராக கருதப்பட்டார்.

1372ஆம் வருடத்தில் இறையியலில் அறிவர் பட்டம் வென்றார். 1374 இல் இங்கிலாந்தின் மன்னர் இவரை லட்டர்வொர்த் தேவாலயத்தின் போதகராக நியமனம் செய்தார்.

விக்ளிஃப் ஒரு சமயச் சீர்திருத்த வாதியைப் போல எங்கும் பேசினார். ரோமாபுரியில் போப்பின் நடவடிக்கைகளைக் கண்டித்து ஆக்ஸ்போர்டிலும், லண்டனிலும் தைரியமாகப் பேசினார். அதேவேளையில் இவர் தனது சீர்திருத்தக் கருத்துக்களைச் சிறுசிறு கையடக்க துண்டுப்பிரதிகளாக அச்சிட்டு வெளியிட்டார். 1377 இல் ரோமாபுரியின் சபை நிர்வாகம் குறித்து விக்ளிஃப் தெரிவித்த எதிர்ப்புக்கருத்துக்கள் இவரை எல்லோரும் அறியச் செய்துவிட்டது. எனவே இவரை விசாரிக்கும்படி லண்டனின் பிஷப் இவரை தூய பவுல் பேராலயத்திற்கு வரும்படி கட்டளையிட்டார்.

1378இல் இவர் “பரிசுத்த வேதாகமத்தின் உண்மைத்தன்மை” என்னும் தலைப்பில் ஒரு செய்தியை அச்சிட்டு வெளியிட்டார். அதில் “வேதாகமத்தில் எந்தப் பிழையும் இல்லை; வேதாகமம் முழுவதிலும் தேவனுடைய வெளிப்பாடு இருக்கிறது” என்று வலியுறுத்தினார்.

விக்ளிஃப் தைரியமாக, அந்நிய ஆக்கிரமிப்புகள் மத்தியில் ஆங்கிலேயர்களின் உரிமைகள் பற்றியும், இங்கிலாந்து திருச்சபையில் நுழைந்து கொண்டிருக்கும் தீமைகள், தவறுகள், கெட்ட பழக்கங்கள் இவற்றையும் சுட்டிக்காட்டி அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்