ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 3 வியாழன்

கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன் (எரேமி.17:14) சுகவீனங்கள், அறுவைசிகிச்சைக்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கிறவர்கள், கேன்சர் மற்றும் தொற்று பாதிப்புகளினாலும் தாக்கப்பட்டு மனபாரங்களோடு உள்ள ஒவ்வொருவருடைய இருதயங்களை கர்த்தர் ஸ்திரப்படுத்தி, பூரணசுகத்தை விரைவிலே அவர்கள் பெற்றுக்கொள்வதற்கு கிருபை செய்ய ஜெபிப்போம்.

உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவி!

தியானம்: 2026 செப்டம்பர் 3 வியாழன் | வேத வாசிப்பு: ஆதி. 24:1-4; 12-14,சங்.37:1-7

YouTube video

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் (சங். 37:5).

சுற்றிலும் நடக்கின்ற காரியங்கள் நம்மை வியப்புறச் செய்யலாம். பொல்லாதவர்கள் பார்வைக்குச் செழித்திருக்கிறார்கள்; அநியாயம் செய்கிறவர்கள் தண்டனைக்குத் தப்பித்து இன்னும் அதிக அநியாயம் செய்கிறார்கள். இப்படிப் பல. இவற்றைக் கவனிக்கும்போது நாம் வாழுகின்ற வாழ்வின் வழியை நாமும் மாற்றிக்கொள்ள வேண்டுமா என்ற தடுமாற்றம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. அது கூடாது. அவர்கள், பார்வைக்கு இப்போது நன்றாயிருந்தாலும் அவர்கள் நிலைத்திருக்கமாட்டார்கள் என்று வார்த்தை சொல்லுகிறது. ஆகவே, நாம் பிறரைப் பார்த்து நமது வாழ்வை ஒப்பிட்டு சங்கடப்படாமல், நாம் உத்தமமாய் வாழவேண்டுமென்றால் அதற்கு ஒரே வழிதான் உண்டு; கர்த்தர் நமது காரியங்களை வாய்க்கப்பண்ண நாம் விட்டுவிடவேண்டியதே அது.

ஆனால், கர்த்தர் நமது காரியங்களை வாய்க்கப்பண்ண வேண்டுமானால் நாம் செய்யவேண்டியதும் உண்டு. முதலாவது நம் வழிகள், நினைவுகள், விருப்பங்கள் அனைத்தையும் கர்த்தரிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்கிறார் தாவீது. அதன் பின்பு, நாம் ஒப்புவித்த அனைத்தையும் கர்த்தர்தாமே செய்து முடிப்பாரென்று அவர்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும். இந்த இரு காரியங்களையும் நாம் செய்யும்போதுதான் கர்த்தரால் நமது வாழ்வின் வழிகளை வாய்க்கப்பண்ண முடியும்.

ஆபிரகாம், தனது மகன் ஈசாக்குக்கு பெண் பார்த்துவரும்படி தன் ஊழியக்காரனை அனுப்புகிறார். அவனோ தன் வழியை முதலில் கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கிறான். “என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்” (ஆதி.24:12) என்று ஜெபித்து, தன் வழியைக் கர்த்தரிடம் ஒப்படைத்தான். கர்த்தர் நிச்சயமாகவே தனது வழியை வாய்க்கப்பண்ணுவார் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டான்; கர்த்தர் அவனோடு கூட இருந்து காரியத்தை வாய்க்கப்பண்ணினார். நாமோ சில சமயங்களில் நமது காரியங்களை முதலில் மனிதரிடம் ஒப்படைக்கிறோம்; பின்னர் ஏமாற்றமடைகிறோம். ஜெபிக்கிறோம்; ஆனால், கர்த்தரின் நேரத்துக்குக் காத்திருக்க தவறிவிடுகிறோம். அல்லது, கர்த்தருக்கே உதவி செய்வதுபோல ஆலோசனை கொடுக்கிறோம். இறுதியில் தோற்றுவிடுகிறோம். வேதம் நமக்குக் கூறுவது என்ன? “கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” (ரோம.11:34,35). ஆகவே, கர்த்தரையே நாடி, அவரிடம் நமது வழிகளை ஒப்புவித்துவிட்டு, அவர் காரியங்களை வாய்க்கப்பண்ணும் வரைக்கும் அவருடைய கரத்துக்குள் அடங்கியிருப்போமாக.

ஜெபம்: “அன்பின் தேவனே, நீரே காரியத்தை வாய்க்கப்பண்ணுகிறவர்; உம்மிடத்தில் எங்கள் வழிகளை ஒப்புவிக்கிறோம். உமது கரத்தில் அடங்கியிருக்க பெலன் தாரும். ஆமென்.”