வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 4 வெள்ளி
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். (அப். 16:31)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 4-7 | மாலை: 1கொரிந்தியர் 14:1-22
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். (அப். 16:31)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 4-7 | மாலை: 1கொரிந்தியர் 14:1-22
இம்மாதத்தில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காகவும், செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், தொகுப்புபணிகளுக்காகவும், தங்கள் ஆதரவான காணிக்கையால் தாங்கும் ஆதரவாளர்களை கர்த்தர் ஆசீர்வதித்திடவும் வேண்டுதல் செய்வோம்.
தியானம்: 2026 செப்டம்பர் 4 வெள்ளி | வேத வாசிப்பு: லூக்கா 18:1-8

தேவன் ….. அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? (லூக்கா 18:7).
பலவேளைகளில் நமது ஜெபங்கள் கேட்கப்படவில்லை, நமக்கு நீதி கிடைக்கவில்லை என்று நம்மில் அநேகர் மனம் சோர்ந்துவிடுவதுண்டு. ஆனால் இயேசு சொன்ன இந்த உவமையின்படி, தேவன், யார் யாருடைய விஷயங்களில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து சீக்கிரத்தில் அவர்களுக்கு நியாயம் செய்வார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். முதலாவது, அந்த நபர் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவராக இருக்கவேண்டும்; அடுத்தது, தேவனை நோக்கி இரவும் பகலும் விடாப்பிடியாக போராடி ஜெபிக்கும் ஒரு நபராக இருக்கவேண்டும். அதாவது நம்பிக்கை இழந்துவிடாமல், கர்த்தரையே பற்றிக்கொண்டு, அவர் நீதி செய்வார் என்ற உறுதியான விசுவாசத்துடன் அவரை நோக்கிக் கூப்பிடவேண்டும். ஒருபுறம் ஆண்டவர், மறுபுறம் மனித உதவி என்று இரண்டுபுறமும் கால்களை வைக்கக்கூடாது. தம்மிடம் விடாமுயற்சியுடன் ஜெபிக்கிறவர்கள் வாழ்வில் தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து நிச்சயமாகவே அவர்களுக்குப் பதில் கொடுப்பார்.
யாக்கோபின் வாழ்வைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். எப்படி? ஒன்று அவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவன்; அடுத்ததாக, அவன் விடியுமளவும் தேவனுடன் போராடினான். விடாப்பிடியாக. சோர்ந்துபோகாமல் போராடி, “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடமாட்டேன்” என்று ஜெபித்தான். அந்த நாளிலே அவன் பெயர்முதலாய் மாற்றமடைந்து, அவன் ஒரு புதிய மனிதனாக முன்னே சென்றான்.
கர்த்தரைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு சகோதரி, கணவரின் இரட்சிப்புக்காக 12 வருடங்களாக தேவனை நோக்கி இரவும் பகலும் ஜெபித்துக்கொண்டே வந்தாள். மனச்சோர்வுக்கோ, அவிசுவாசத்துக்கோ அவள் இடங்கொடுக்கவில்லை. தேவன் அவள் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அந்தக் கணவரை தமது அன்புக்குள் இழுத்துக்கொண்டார்.
அன்று தேவன் இஸ்ரவேலைத் தமக்கெனத் தெரிந்துகொண்டார்; அது அவர்களுக்கு கிடைத்த கிருபை. ஒன்றுக்கும் உதவாத பாவிகளாகிய நமக்காகத் தமது சொந்தக் குமாரனையே பலியாக்கி நம்மைத் தமது பிள்ளைகளாக்கினார். இந்த தேவன் நமது தேவைகள் விஷயத்தில் பாரா முகமாக இருப்பாரா? நமது தேவைகள் மாத்திரமல்ல, நமக்கு நேரிடுகின்ற அநீதிகளைக்கூட தேவனிடத்தில் இரவும் பகலும் நம்பிக்கையோடு அறிக்கை செய்வோம். கர்த்தர் நல்லவர்; ஏற்ற நேரத்தில் நிச்சயம் சகாயம் செய்வார். அவரது பொறுமையை சந்தேகிக்காதிருப்போமாக.
ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, நிச்சயத்துடனும், உறுதியான விசுவாசத்துடனும், தாமதித்தாலும் கர்த்தர் செய்வார் என்ற நம்பிக்கையுடனும் ஜெபிக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.”