அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (மார்ச்-ஏப்ரல் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(3) ரேனியஸ் மொழிபெயர்ப்பு

தமிழ் மொழியில் சிறப்பான முறையில் பிரசங்கிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த ரேனியஸ், பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் முதன் முதலில் பூமி சாஸ்திரப் பாடப்புத்தகம் இவராலேயே எழுதப்பட்டது. இவர் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும், வசனத்தமிழை முதன் முதலாகச் சந்தி பிரித்து எளிமையாக்கியவரும் இவரேயாவார். சுவிசேஷம் அறிவிப்பதிலும், பாடசாலைகளையும் சபைகளையும் ஸ்தாபிக்கும் முயற்சியிலும் இவரது பணி மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. இவர் திருநெல்வேலியில் 300 சபைகளை ஸ்தா பித்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பின் மொழி நடையைத் திருத்தினார். இவரால் திருத்தப்பட்ட சுவிசேஷங்களும் அப்போஸ் தலர் நடபடிகளும் 1827இலும், புதிய ஏற்பாடு முழுவதும் 1833இலும் வெளியிடப்பட்டது. 1840இல் இவரது புதிய ஏற்பாடும் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாடும் ஒன்றாக வெளியிடப்பட்டது.

பெப்ரீஷியசைப் போலவே ரேனியசும் கடவுளுக்குப் பராபரன் எனும் பதத்தை உபயோகித்துள்ள போதிலும், அவர் சில இடங்களில், ‘தேவன்’ எனும் பதத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பிலிருந்த சில இலக்கணப் பிழைகளையும் ரேனியஸ் திருத்தியுள்ளார். குறிப்பாக, அஃறிணைப் பன்மை எழுவாய்க்கு, ஒருமைப் பயனிலையே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் உபயோகிக்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், சாதாரண பேச்சு வழக்கில் இவ்விதம் பன்மை எழுவாய், ஒருமைப் பயனிலையுடன் உபயோகிக்கப் பட்டமையேயாகும். உதாரணமாக, விதைப்பவனுடைய உவமையில் விதைகள் விழுந்தது, பறவைகள் பட்சித்தது, அவை முளைத்தது, என்றே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டிருந்தது. ரேனியஸ் இவ்வாக்கியத்தை இலக்கணமுறைப்படி, விதைகள் விழுந்தன, பறவைகள் பட்சித்தன, அவை முளைத்தன என திருத்தினார். பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் இதைப்போன்ற பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பிலிருந்த சில வார்த்தைகளையும் ரேனியஸ் மாற்றியுள்ளார். உதாரணமாக, இந்த லோகம் என்பதை இவ்வுலகம் என்றும், வெளிச்சம் என்பதை ஒளி என்றும், வானராச்சியம் என்பதை பரலோகராச்சியம் என்றும், பாஷா என்பதை பஸ்கா என்றும், சிநேகம் என்பதை அன்பு என்றும் ரேனியஸ் மாற்றினார். மேலும் 1கொரிந்தியர்13 இல் ஓசைதரும் கிண்கிணி என்றிருந்ததை ஓசையிடுகிற கைத்தாளம் என்றும், அப்போஸ்தலர் 1:3இல் உயிரோடிருக்கிறவராகப் பிரசன்னப்படுத்தினார் என்பதை, உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார் என்றும், 2தீமோத்தேயு 4:7இல், விசுவாசத்தைக் கைக்கொண்டேன் என்றிருந்ததை விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் என்றும், எபிரேயர் 12:1 இல், சாட்சிகளின் இத்தனை பெரிய மேகம் என்றிருந்ததை மேகம் போல் இத்தனை திரளான சாட்சிகள் என்றும் திருத்தினார். இதிலிருந்து ரேனியசின் திருத்தங்கள் எத்தகையவை என்பதை அறியக்கூடியதாயுள்ளது.

இதைப்போன்று, பெப்ரீஷியசின் மொழி நடையில் ரேனியஸ் பல திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையிலான புத்தகங்களையும், சங்கீதங்கள், ஏசாயா, தானியேல் எனும் புத்தகங்களையும் திருத்தியுள்ளார். ரேனியஸ் மொழிபெயர்ப்பு இலக்கணத்தில் ஆர்வமிக்கவர்களாய் இருந்தவர்களினாலேயே பாராட்டப்பட்டது. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவருடைய மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

(4) பேர்சிவெல் மொழிபெயர்ப்பு

ரேனியசினுடைய மொழி பெயர்ப்பு வெளிவந்த பின்னர், சில சபைகள் அம்மொழிபெயர்ப்பின் வசனநடை சிறந்ததெனக் கருதி அதை உபயோகிக்கத் தொடங்கினாலும் பெரும்பாலான சபைகள், அது மூல மொழியை விட்டு விலகிச்சென்றுள்ளது எனக் கூறி அம்மொழி பெயர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அச்சபைகள், பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பையே தொடர்ந்தும் உபயோகித்துவந்த போதிலும், அதன் வசன நடை அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இவ்விரு மொழிபெயர்ப்புகளிலும் உள்ள குறைகள் நீக்கப்பட்டதாகவும், அதேசமயம் இரண்டினதும் சிறப்பம்சங்கள் ஒருங்கே காணப்படுவதுமான ஒரு புதிய மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் அனைத்து சபையினராலும் உணரப்பட்டது. அச் சமயம், இத்தகைய ஒரு மொழி பெயர்ப்பைத் தாம் செய்து தருவதாக வட இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிகள் சென்னை வேதாகமச் சங்கத்துக்குத் தெரிவித்தனர். இதனால் யாழ்ப்பாணத்தில் வேதாகம மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்வதற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டது. பீட்டர் பேர்சிவெல் எனும் மிஷனரி இக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பீட்டர் பேர்சிவெல் மெதடிஸ்ட் மிஷனைச் சேர்ந்தவராவார். 1826 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்த இவர் தயாரித்த ஆங்கில தமிழ் அகராதி மிகவும் பிரபல்யமானது. யாழ்ப்பாண மொழிபெயர்ப்புக் குழுவில் மெதடிஸ்ட் மற்றும் அமெரிக்கன் மிஷன்களைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகித்தனர். இவர்களுக்கு வேதாகம மொழிபெயர்ப்பில் உதவி செய்தவர் தமிழ்ப்புலவர் ஆறுமுகநாவலராவார்.

(தொடரும்)