கிறிஸ்துவின் அன்பு

தியானம்: 2019 ஆகஸ்டு 16 வெள்ளி | வேத வாசிப்பு: ரோமர் 5:5-8

“உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாய் இருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா” (1கொரி.6:19).

தேவனுடைய சித்தத்தைச் செய்ய இந்த உலகம் அநேக தடைகளைக் கொண்டு வரும். ஆனால், அவற்றைத் தாண்டி அவர் சித்தத்தை நிறைவேற்ற தேவன் நமக்குப் பெலன் அருளுகிறார். முயற்சியும் தியாகமும் இல்லாமல் நாம் எந்தவொரு காரியத்தையும் நிறைவேற்ற முடியாது. தேவனுடைய பணியை நிறைவேற்ற முடியாமல் தடுக்கும் தற்காலிக தடைகளை வெல்லக்கூடிய ஆயத்தமும் அர்ப்பணிப்பும் நமக்கு மிக அவசியம். அதற்கு நமது சரீரத்தை பரிசுத்த தேவ ஆலயமாகப் பேண வேண்டியது கட்டாயம். உண்மையிலேயே, நாம் ஒரு பெரிய விலைக்குக்கொள்ளப்பட்டவர்கள். ஆகவே, நமது வாழ்க்கையில் தொடர்ந்தும் நமது இஷ்டப்படி செய்வதற்கு இடமில்லை. தேவன் நம்மை விடுவித்துள்ளார். நாம் இப்பொழுது அவருடையவர்கள். ஆகவே நாம், அவரது திவ்ய சித்தத்தை மாத்திரமே நிறைவேற்ற வேண்டியவர்கள்.

தேவன் எல்லோரையும் நேசிக்கிறார். அவர் தம்முடைய அன்பைத் தம்முடைய ஆடுகளுக்கு வெளிப்படுத்தவே விரும்புகின்றார். நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களையும் அவர் நேசிக்கின்றார். நாம் அவர்களிடம் அந்த அன்பை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். நல்ல மேய்ப்பன் தம்முடைய அன்பை நம்மோடு பகிர்ந்துகொண்டதுபோலவே, நாமும் அவருடைய அன்பை பிறருக்கு வெளிக்காட்டும் கருவிகளாகச் செயற்பட வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நாம், தேவனுடன் நேரத்தைச் செலவிடவும், அவருடைய அன்பைப் பிரதிபலிக்கவும் வேண்டியவர்கள். ஆகவே நாம் அழிந்துபோகும் ஆத்துமாக்களைக் குறித்து அக்கறையுள்ளவர்களாக இருந்து, வழிதெரியாத ஆடுகளுக்கு தேவ அன்பைக் காட்டி வழிநடத்த வேண்டியவர்கள். ‘தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்…’ (ரோமர் 5:5) என்று வாசிக்கிறோம்.

நாம் தேவனுடைய ஆலயம் என்றால், கிறிஸ்துவின் அன்பு நமக்குள் ஊற்றப்பட்டிருக்கிறதே! அந்த அன்பை நாம் அடக்கிவைக்கலாமா? அன்பின் அந்தச் செய்தியைப் பெற்ற நாம் ஒவ்வொருவரும், அந்தக் கல்வாரி அன்பின் நற் செய்தியை அறியாதவர்களுக்கும், நாம் சந்திக்கிற ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம். அதுவே நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற பெரிய பொறுப்பு.

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1கொரி. 3:16).

ஜெபம்: எங்களுக்குள் வாசம்பண்ணும் பரிசுத்தாவியானவரே, நற்செய்தியை அறியாத மக்களுக்கு தேவ அன்பை வெளிப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுகிறவர்களாக காணப்பட எங்களைப் பெலப்படுத்தும். ஆமென்.

சத்தியவசனம்