சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜனவரி-பிப்ரவரி 2020

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று வாக்களித்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

2020ஆம் ஆண்டில் பிரவேசித்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் சமாதானகர்த்தர் நன்மை யாலும் கிருபையாலும் நிரப்பி வழிநடத்த ஜெபிக்கிறோம். தேசத்தில் தற்போது காணப்படும் போராட்டங்கள், பரவிவரும் கொள்ளைநோய்கள், மத கலவரங்கள், பொருளாதார வீழ்ச்சி வேலையில்லா திண்டாட்டங்கள் இவற்றின் மத்தியிலும் தேவன் தம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கவும் கர்த்தருடைய ஊழியம் வளர்ந்து பெருகவும் தொடர்ந்து நாம் ஜெபிப்போம். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது (மத்.24:6). இவைகள் அனைத்தும் கர்த்தருடைய வருகைக்கு முன்பாக நடைபெறவேண்டிய அடையாளங்களாகவே இருக்கின்றன.

சத்தியவசன ஊழியப்பணிகள் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை தேவனைத் துதிக்கும்படியாக எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் தங்களது ஜெபக்குறிப்புகள் மனபாரங்களையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்காக ஊழியர்களும் பங்காளர்களும் கர்த்தரிடத்தில் மன்றாடுவோம். இவ்வாண்டிலும் இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட வேண்டுதல் செய்யுங்கள். சத்தியவசன வெளியீடுகளை தங்களுக்கு அன்பானவர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள்.

புதியவருடத்தில் நம்மை உற்சாகப்படுத்தும் வண்ணம் தள்ளிவிடு! தரித்துக்கொள்! என்ற தலைப் பிலான சிறப்புச்செய்தியை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். Dr.உட்ரோ குரோல் அவர்கள் திருச்சபை இழந்த வல்லமையை மீண்டும் பெறுவதை விவரித்து அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து செய்தியை வழங்கியுள்ளார்கள். துதியின் அனுபவமானது எவ்வாறு காரியங்களை மாற்றியமைக்கிறது என்பதை துதித்தல் காரியங்களை மாற்றுகிறது என்ற தலைப்பில் வாரன் வியர்ஸ்பி அவர்களது செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும் உன்னில் தேவமகிமை என்ற தலைப்பில் சகோ.வஷ்னி ஏர்னஸ்ட் அவர்களது செய்தியும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய குணமாக்குதலும் விசுவாச ஜெபமும் என்ற தலைப்பில் விசுவாச ஜெபத்தைப் பற்றிய தொடர்செய்தியும், தேவன் அமைத்த குடும்பம் என்ற தலைப்பில் திரு.பிரகாஷ் ஏசுவடியான் அவர்களது தொடர் செய்தியில் வாலிபபிள்ளைகளை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தும் சிறந்த ஆலோசனைகளும் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் ஒவ்வொன்றும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்