சத்திய வசனம் பங்காளர் மடல்
செப்டம்பர்-டிசம்பர் 2020
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தபடி செப்டம்பர்-அக்டோபர் மாத இதழையும் நவம்பர்-டிசம்பர் மாத இதழையும் இணைத்து கூடுதல் பக்கங்களோடு ஒரே இதழாக வெளியிட்டிருக்கிறோம். 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வழக்கம்போல் இருமாதங்களுக்கொருமுறை சத்தியவசன சஞ்சிகை வெளிவரும் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
இவ்வாண்டு முழுவதும் சத்தியவசன ஊழியப் பணிகளை உற்சாகமான காணிக்கையாலும் ஜெபத்தினாலும் தாங்கிவந்த அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம். பல ஆண்டுகளாக பீபா வானொலி நிலையத்தோடு இணைந்து சத்திய வசன நிகழ்ச்சிகளை நாம் ஒலிபரப்பி வந்தோம். தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் வானொலி ஒலிபரப்பை பீபா நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகள் இனி வெளி வராது. மாலையில் ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வெளிவரும்.
2021ஆம் ஆண்டு சத்தியவசன காலண்டர் அச்சு பணியில் உள்ளது. வழக்கம்போல் பங்காளர்களுக்கு அனுப்பி வைப்போம். இவ்வூழியத்தின் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாத நன்மைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். 2020ஆம் ஆண்டு அனுதினமும் கிறிஸ்துவுடன் அட்டவணைப்படி ஒரு வருடத்திற்குள் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இவ்வாண்டில் ஆதாரவாளர் திட்டத்தில் இணைந்து சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தாங்கிய அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கிறோம்.
இவ்விதழில் உறுதியாக நிற்றல் என்ற தலைப்பில் போதர் நாட் க்ராபோர்டு அவர்களது தொடர் செய்தியும், தேசத்தின் பாவங்களுக்காக ஜெபிக்க ஆரம்பிப்பதே தேசத்தின் எழுப்புதலுக்கான ஜெபம் இதை வலியுறுத்தி ஜெபவீரன் தானியேல் என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்களது செய்தியும் இடம்பெற்றுள்ளன. கசப்புணர்விலிருந்து வெளிவருதலைக் குறித்த சத்தியங்களை சகோ.பிரேம் குமார் அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய குணமாக்குதலும் விசுவாச ஜெபமும் என்ற தொடர் வேதபாடமும் இடம்பெற்றுள்ளது. கிறிஸ்துமஸ் சிறப்புப் பகுதியில் அடிமையின் ரூபமெடுத்து… என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய கிறிஸ்துமஸ் செய்தியும், கிறிஸ்து எப்படி பிறப்பார்? என்ற தலைப்பில் வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய கட்டுரையும், முதற்பேறானவர் என்ற தலைப்பில் Dr.W.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதிய சிறப்பு கட்டுரையும், வேதாகமத்தில் கிறிஸ்துமஸ் கீதங்கள் என்ற கட்டுரையும், திரு.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் அளித்த தேவன் அமைத்த முதல் குடும்பம் என்ற தொடர் செய்தியும் இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஆவிக்குரிய நன்மைகளைக் கொண்டுவர வேண்டுதல் செய்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்