உபத்திரவமா? சமாதானமா?

தியானம்: 2024 ஜூலை 3 புதன் | வேத வாசிப்பு: யோவான் 16:23-33

YouTube video

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார் (யோவான் 16:33).

இன்று நமது தேசம் இருக்கின்ற நிலையில் யாரைக் கேட்டாலும், சமாதானமாக இருக்கமுடியாது என்றுதான் சொல்லுவார்கள். நாளுக்குநாள் தற்கொலைகளும், அகால மரணங்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அப்படியானால் நாம் சமாதானத்தை எங்கே தேடுகிறோம்? உபத்திரவம் பெருகிக்கிடக்கும் இடத்தில் சமாதானம் இருக்கமுடியுமா?

இங்கே, “என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” என்கிறார் இயேசு. இவைகள் என்றால் எவைகள்? இதற்கு மேலே பல விஷயங்களை அவர் சொல்லிக் கொண்டேவருகிறதை நாம் வாசிக்கலாம். “நீங்கள் எல்லாரும் என்னை தனித்து விட்டுப் போவீர்கள். ஆனாலும் நான் தனித்திரேன். பிதா என்னோடேகூட இருக்கிறார்” என்றும் சொல்லுவதைக் காண்கிறோம். இயேசு இவ்வுலகத்தில் இருந்தபோது அவரும் பல கடினமான பாதைகளுக்கூடாகக் கடந்துசென்றார். அவர் தனித்து விடப்பட்ட நிலைக்குள் தள்ளப்பட்டார். அவர் எந்தவொரு மனிதனை சார்ந்தோ அல்லது தமது சீஷரை சார்ந்தோ இருக்கவில்லை. அவர் எப்போதும் பிதாவையே சார்ந்திருந்தார்.

பிதாவின் நோக்கத்தை நிறைவேற்றவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார், வாழ்ந்தார், தமது பணியை நிறைவேற்றினார், வெற்றியோடு சென்றும் விட்டார். அதுபோலவே நாமும் இவ்வுலகத்திற்கு ஒரு நோக்கத்தோடு கொண்டுவரப்பட் டோம். அப்பணியை நிறைவேற்றுவதற்கு நாம் இயேசுவில் சார்ந்திருப்பது மட்டுமே நமக்குத் தேவை. எனவே உலகத்தில் இருக்கும்போது நாம் எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகளையும் நாம் கிறிஸ்துவின் பெலனோடு எதிர்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும்.ஏனெனில் அவரே உலகத்தை ஜெயித்தவர். அதைப் போன்று நாமும் உலகத்தை ஜெயித்து அவர் பணியை முடிக்கவேண்டும்.

தேவபிள்ளையே, உலக வாழ்வில், இன்றும் நமக்கு உபத்திரவங்கள் உண்டென்று நம் ஆண்டவரே கூறியிருக்கிறார். ஆனால், உலகத்தை ஜெயித்தவர் அவரே! அவர் நம்முடன் இருக்கும்போது நமக்கு என்ன கவலை! நாம் அதிக உபத்திரவங்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய காலங்கள் வருகிறது. ஏனெனில் உலகமுண்டானதுமுதல், இதுவரைக்கும் சம்பவித்திராததும் இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்போது உண்டாயிருக்கும் (மத்.24:21). ஆனால், நமக்குள் இருக்கும் சமாதானத்தை எதுவும் பறித்துவிட முடியாதே! நம் நேசர் இயேசு திடன்கொள்ளுங்கள் என்கிறார். அவர் இவ்வுலகத்தை ஜெயித்ததை எப்பொழுதும் நமது நினைவில் வைத்திருப்போமா!

ஜெபம்: அன்பின் தேவனே, எனது உபத்திரவங்கள் நடுவில் நான் திடமாயிருந்து, எனது சமாதானத்தைக் காத்துக்கொள்ள எனக்கு உதவியருளும். ஆமென்.