நீ கர்த்தருடையவன்!
தியானம்: 2024 செப்டம்பர் 5 வியாழன் | வேத வாசிப்பு: 2 இராஜாக்கள் 24:11-16

பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான் (2இராஜாக்கள் 24:15).
“அழகானவனாக, கெட்டிக்காரனாக, நல்ல குடும்பத்தில் பிறந்தவனாக, தேவ பயம் உள்ளவனாக நான் இருப்பது தவறா?” தானியேலின் இடத்தில் நான் இருந்திருந்தால் இப்படித்தான் கேட்டிருப்பேன் என்று ஒரு வாலிபன் சொன்னான். ஒரு விஷயம் தெரியுமா? தேவபயமற்றவர்களைக் குறித்து சாத்தான் அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டான். ஏனெனில் அவர்கள் அவனுடையவர்கள். தேவபயத்துடன், என்னதான் நேரிட்டாலும் கர்த்தரையே சேவிப்பதாக தீர்மானம் எடுத்து வாழுகிறவர்கள் மேலேதான் சாத்தானின் கழுகுக் கண்கள் எப்போதும் வட்ட மிட்டுக்கொண்டிருக்கின்றன.
அதற்காக நாம் கர்த்தரை விட்டுப் பின்வாங்கிவிடலாமா? இல்லையே! நேபுகாத்நேச்சார் முதல் தடவை எருசலேமை முற்றிகையிட்டபோது, தேவாலயத்துப் பொன் வெள்ளி தொடக்கம், மிகச்சிறந்த பெலமுள்ள கெட்டித்தனமுள்ள சகல மனிதரையும் சிறைபிடித்து, ஏழைகளை மாத்திரம் மீதியாக விட்டுப்போனான். ஏழைகள் மீதுள்ள பரிதாபத்தினாலே அவன் அவர்களை விட்டுப்போனானா? இல்லை. அவர்கள் தனக்கு விரோதமாக கலகம் பண்ண முடியாது என்பதால்தான் விட்டுப்போனான். அப்படியானால் கெட்டிக்காரராய் இருப்பது தவறா? காரியம் அதுவல்ல. சோதனைகள்,தொல்லைகள் அதிகரிக்கும்போது, தேவ காரியங்களை முன்னெடுக்க முடியாதபடி தடைகள் வரும்போது, ஒன்றை நினைத்துக்கொள்வோம்; சாத்தான் நம்மை அழிக்க வருகிறான் என்பதல்ல, அவன் நம்மைக் கண்டு நடுங்குகிறான் என்பதுதான் உண்மை. ஆகையால்தான் அவன் நம்மை எதிர்க்கிறான். நாம் தேவபிள்ளைகள் என்பதற்கு அந்தவொரு நிரூபணமே போதும். ஏனெனில் கர்த்தருடைய மிகச் சிறந்ததையே அவன் நாசப்படுத்துவதில் கருத்தாயிருக்கிறான். அதுதான் ஏதேன் தோட்டத்திலும் நடைபெற்றது.
தேவபிள்ளையே, நாம் கர்த்தருக்காக வாழவேண்டும் என்று தீர்மானம் எடுக்கும்போது எத்தனை தடைகள் வருகிறது. உபவாசம் என்றால் அதிக பசி எடுக்கும். ஜெபநேரம் என்றால் ஒருநாளும் வராத விருந்தாளி வருவார். சில பாவ பழக்கங்களை விட்டுவிடத் தீர்மானித்தால் பலத்த சோதனை வரும். எல்லாமே வரட்டும்! அவற்றை சோதனை என்றெண்ணி சோர்ந்துவிடாமல், சவாலாக நினைத்து மேற்கொள்ளலாமே! நாம் சேவிப்பது வெறுமனே வல்லமையுள்ளவரை அல்ல; சர்வ வல்லமையுள்ள தேவனை என்பது நமது நினைவில் இருக்கட்டும். தேவனுக்காக அடி எடுத்து வைக்கும்போது துன்பங்கள் வந்தாலும், நாம் கர்த்தரோடு இருக்கிறோம் என்பதை நினைந்து சந்தோஷப்படுவோம். நமது இடுக்கங்களையெல்லாம் தேவன் வெற்றியாக மாற்றிப்போடுவார்!
ஜெபம்: அன்பின் தேவனே, எனது சோதனைகளிலும் நெருக்கங்களிலும் நீர் என்னோடு தான் இருக்கின்றபடியாலும் அவைகளை எனக்கு வெற்றியாக மாற்றி போடுகிறபடியாலும் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.