உண்மையுள்ளவனாயிரு!

தியானம்: 2024 அக்டோபர் 14 திங்கள் | வேத வாசிப்பு: தானியேல் 6:1-3

YouTube video

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் (நீதிமொழிகள் 28: 20).

உண்மையுள்ளவர்கள் என்று பிறர் நம்மைப் பாராட்டும்போது நமக்கு சந்தோஷம்தான். ஆனால், மனிதர் நம்மை உண்மையுள்ளவர்கள் என்று சொல்லும் படிக்கு நாம் மேற்பூச்சாய் வாழுகிறோமா? அதற்காக பிரயத்தனங்களை எடுக்கிறோமா? அல்லது உண்மைத்துவம் நமது வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறதா என்பதே கேள்வி.

வாலிபப் பிராயத்தில் சிறைக்கைதியாக பாபிலோனுக்குக் கொண்டுவரப்பட்ட தானியேலுக்கு இந்த 6ஆம் அதிகாரம் தொடங்கும்போது ஏறத்தாழ 80 வயது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இத்தனை ஆண்டுகளும் மெய்த்தேவனை அறியாத மக்கள் மத்தியில் வாழ்ந்து, புறஜாதி அரசர்களிடம் நற்பெயர் பெற்று, அவர்களுக்குப் பணிபுரிந்து, இந்த முதிர்ந்த வயதிலும், மற்றுமொரு புறஜாதி ராஜாவின் மனதிலும் இடம்பிடிக்குமளவுக்கு தானியேலிடம் காணப்பட்ட விசேஷம் என்ன? தேவனை மறந்து, பிறதெய்வங்களை வணங்கி மக்களின் கவனத்தை ஈர்த்தாரா? ராஜாக்களின் விருப்பத்தை நிறைவேற்றினாரா? தனக்கு மேன்நிலை கிடைக்கவேண்டுமென்று குறுக்கு வழிகளை நாடினாரா? அல்லது, தேவன் அருளிய கிருபைவரத்தைப் பயன்படுத்தி தனது பெயரை நிலைநாட்ட முயற்சித்தாரா? இல்லை! மாறாக, தானியேல் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். “அவர் தன் தேவனுக்கு முன்பாக உண்மையாக வாழ்ந்தார்”. மற்ற எல்லாரிலும் பார்க்க மிக நேர்மையாக நேர்த்தியாக பணி செய்தார். புறவின ராஜாவின் கவனம் ஈர்க்கப்படுமளவுக்கு தானியேலின் வாழ்வில் தனித்துவம் காணப்பட்டது. பாபிலோன் அரசாட்சி முடிந்து மேதிய ராஜா ஆளத் தொடங்கியபோதும், ராஜ்யம் முழுவதற்கும் தானியேலை அதிகாரியாக்க நினைக்குமளவுக்கு தரியு ராஜாவின் உள்ளத்தில் தானியேல் இடம்பிடித்தார். இன்று கெட்டுப்போவதற்கு சூழ்நிலைகளைச் சாக்காகச் சொல்லுகிறவர்களும், சூழ்நிலைக்கேற்றபடி மாறாவிட்டால் வாழுவது கஷ்டம் என்று நியாயப்படுத்துகிறவர்களும் அநேகர். ஆனால், தானியேலின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு சவாலாகவே அமைந்திருக்கிறது.

சூழ்நிலைகள் ஒரே நிலையில் இருக்காது, அது மாறும். அப்போது நாமும் எத்தனைதரம் தான் நம்மை மாற்றிக்கொள்வது? புறவின மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு கிறிஸ்தவர்களே பிழையான வழிமுறைகளைப் பின்பற்றக்கூடாது. தேவனுக்கு முன்பாக உண்மைத்துவமாக இருக்கின்ற ஒருவனை சூழ்நிலைகள் மாத்திரமல்ல, எந்த மனுஷனுமே அசைக்கமுடியாது. ஏனெனில் கர்த்தர் அவனுடனே கூடஇருக்கிறார். அவனது பணி தேவனுக்கென்று செய்யப்படுகிறது. தேவனே அவனது எஜமான்! எனவே, தேவனுக்கு முன்பாக உண்மைத்துவமாய் இருந்து நமது பணிகளை முன்னெடுப்போமாக. புறவினத்தார் முன்னிலையில் அது மெய்யான சாட்சியாக இருக்கும். கர்த்தர் நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

ஜெபம்: அன்பின் பிதாவே, சூழ்நிலைக்கேற்றாற்போல் எங்களை வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொள்ளாமல், ஒரேநிலையாய் உண்மையாய் எப்போதும் காணப்பட உமது அருள் தாரும். ஆமென்.