எழுந்து கட்டுவோம் வாருங்கள்!
அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2024)
Dr.W.வாரன் வியர்ஸ்பி
வேதபகுதி: எஸ்றா 4 :1-3
சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பபட்டபோது, அவர்கள் செருபாபேலிடத்துக்கும், தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம் (எஸ்றா4:1-2).
இலக்கை அடைய ஒரு நோக்கம்
பாபிலோனிய சிறையிருப்பிலிருந்த யூதர்கள் தங்களது தேசத்துக்குத் திரும்புவதற்கு ஆண்டவரே வழிதிறந்தார் (2 நாளாகமம் 36:22-23). இவ்வுலகின் மீட்பின் திட்டத்துக்கு யூத நாடு மீண்டும் எழும்பவேண்டும், யூத தலைநகர் மக்களால் நிரப்பப்படவேண்டும், யூத ஆலயம் மீண்டுமாகக் கட்டப்படவேண்டும். பூமியின் எந்த ஒரு தேசத்துடனும் செய்யாத உடன்படிக்கையை தேவன் இஸ்ரவேலுடன் செய்தார்; அவர் அவ்வுடன்படிக்கையைக் காத்துக்கொள்வார் (ஆதி.12:1-3; 13:14-17; 17; 22:15-19). தேவகுமாரன் பெத்லெகேமிலே பிறந்து, நாசரேத்தில் வளர்ந்து, பரிசுத்த பூமியெங்கும் ஊழியம் செய்து இறுதியில் எருசலேமுக்கு வெளியே சிலுவையில் அறையப்பட்டு கல்லறையில் வைக்கப்படும் ஒருநாள் வரும். மரித்த அவர் மீண்டுமாக உயிரோடு எழுந்து தம்மைப் பின்பற்றியவர்களுக்குக் காட்சியளிப்பார். பின்னர் மீண்டுமாக பரலோகம் சென்று பிதாவுடன் சிம்மாசனம் அமருவார். “பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்” (1 யோவான் 4:14).
தவிர்க்கவேண்டிய ஆபத்து
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் தேசம் இஸ்ரவேல் என்பதால், அது தேவனுடைய வார்த்தையையும் தேவனுடைய குமாரனையும் அலட்சியம் செய்யும் மனிதர்களின் இலக்காகவும் அமைந்துள்ளன. மோசே தேவனிடம் “நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்கிறோம்” (யாத் 33:16) என்றார். இஸ்ரவேல் மக்கள், தனியாக வாழ்கின்றதொரு மக்கள் கூட்டம். இது வேற்றினத்தாரோடு தன்னையும் ஓர் இனமாய் இணைத்துக் கொள்ளவில்லை (எண்.23:9). மற்ற இனங்களிலிருந்து இஸ்ரவேலரைப் பிரித்தெடுத்தது தேவனே (லேவி.20:26). எனவே மற்ற இன மக்களின் வழிகளையும் பழக்கங்களையும் பின்பற்றாதிருப்பீர்களாக என்று தேவன் கட்டளையிட்டிருந்தார். யூதர்கள் இந்த பிறவின மக்களின் உதவியை ஏற்றுக்கொண்டிருந்தால் அவர்கள் தங்களுடைய எதிரிகளோடு வேலை செய்தனர் என்ற பொருளாகும். எனவே தேவன் அவர்களை ஆசீர்வதிக்க இயலாது. யூதர்கள் தங்களது புறமத பெண்களை மணப்பதன் மூலம் அவர்களோடு ஐக்கியமாகி விட்டனர் (எஸறா 10:2). இதே கொள்கை தற்கால சபைகளுக்கும் பொருந்தும்.
“அவிசுவாசிகளோடு இணைக்கப்படாதிருப்பீர்களாக” என்று அப்.பவுல் எச்சரித் தார் (2 கொரி. 6:14-7:1). தேவனுடைய மக்கள் பிரித்தெடுக்கப்படவேண்டும். ஆனால் தனிமைப்படுத்தப்படக்கூடாது (எபே.5:8-14). ஆனால் ஆபிரகாம் மூலமாக தேவன் இஸ்ரவேலருக்கு, “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி.12:2) என்று மாறாத வாக்குறுதியைக் கொடுத்தார். ஆனால் அந்த தேசம் தேவனுடைய சித்தத்துக்கு விலகி, அவரையும் அயல் தேசத்து கடவுள்களை வணங்கியபொழுது. அத்தேசத்து மக்கள் பஞ்சம், வறட்சி, கொள்ளைநோய் மற்றும் அடிமைத்தனத்துக்குள்ளாக நேரிட்டது. ஆனால் தேவனுடைய உடன்படிக்கையின் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்தபொழுதோ அவர்களது குடும்பங்களிலும், வயல்களிலும், ஆடுகளிலும் மந்தைகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டு, தேசத்தில் சமாதானத்தை அனுபவித்தனர்.
சிறையிருப்பிலிருந்து திரும்பிய யூத மக்களின் வரலாறு மகிழ்ச்சியாக அமையவில்லை. அநேக ஆண்கள் புறஜாதி பெண்களை மணந்தனர். இதில் சில ஆசாரியர்களும் அடங்குவர் (எஸ்றா 9-10). யூதமக்கள் தங்களுடைய பரம்பரையை மாசில்லாமல் காத்துக்கொள்ளவேண்டும்; ஏனெனில் மேசியா யூத கன்னியிடமே பிறப்பார் (ஏசாயா 7:14). “என் சபையைக் கட்டுவேன்” (மத்.16:18) என்று இயேசு சொன்னார். பிரித்தெடுக்கப்பட்ட, தேவ ஆவியால் நிரம்பிய மக்கள் அவருக்குத் தேவை. உலகத்தோடு ஒத்துப்போகும் கிறிஸ்தவர்கள் அவருடன் அல்ல, அவருக்கு எதிராக செயல்படுகிறார்கள். எனவேதான், “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (2 கொரி.6:17). பிரிவினை என்பது தனிமையல்ல; ஏனெனில் விசுவாசிகள் உலகத்துக்கு உப்பாகவும் வெளிச்சமாகவும் இருந்து, அழிவையும் இருளையும் மேற்கொள்பவர்கள் (மத்.5:13-16). இத்தகைய மக்களையே தேவன் தமது சபையைக் கட்ட பயன்படுத்தமுடியும்.
ஆகையால் பிரியமானவர்களே, இந்த வாக்குறுதியைப் பெற்றுள்ள நாம், மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான சகல அசுத்தங்களிலிருந்தும் நீங்க நம்மை சுத்திகரித்துக்கொண்டு பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம் (2 கொரி 7:1).
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை