யாருக்கு முதலிடம்?

தியானம்: 2024 நவம்பர் 5 செவ்வாய் | வேத வாசிப்பு: 1ராஜா.15:10-14; 2நாளா.15:16-19

YouTube video

தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் … (மாற்கு 3:35).

உலகத்தோற்றத்தின் முன்னர் நம்மைக் குறித்துவைத்த தேவன், உலகத்துக்குள் நம்மைக் கொண்டுவரவேண்டிய வேளையில், நமக்காக தாமே தெரிந்தெடுத்த பாத்திரங்களே நமது பெற்றோர். தேவனுக்கு அடுத்ததாக அவர்களே நமக்கு எல்லாம். ஆகவேதான், பத்துக் கற்பனைகளில், மனித உறவுகளுக்கான ஆறு கட்டளைகளில் முதல் கட்டளையாக, “உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக” என்று “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு” என்ற வாக்குறுதியுடன் கொடுத்த ஒரே கட்டளை இதுதான். இத்துடன், பெற்றோரைக் கனப்படுத்துவது குறித்து ஏராளமான வேதவாக்கியங்கள் வேதாகமத்தில் உண்டு.

இப்படியிருக்க, தனது ஆளுகையில் சுத்திகரிப்புச் செய்த ஆசா ராஜா, “தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிவிட்டான்” என்று வாசிக்கிறோம். ஆசா துணிந்து அவளை ராஜ ஸ்தானத்திலிருந்து விலக்கிவிட்டான், ஏன்? பிதாக்கள் உண்டுபண்ணின விக்கிரகங்கள் ஒருபுறம் இருக்க, இந்த மாகாளும் தேவனுக்கு விரோதமாக அருவருப்பான விக்கிரகங்களை உண்டாக்கியிருந்தாள். அவற்றையும் ஆசா நிர்மூலமாக்கி கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான். கர்த்தருக்காக வைராக்கியம் காட்டிய ஆசாவின் இருதயம் உத்தமமாயிருந்தது.

ஆசா தன் தாய்க்குச் செய்தது சரியா? ஒரு தடவை இயேசுவின் தாயாரும் சகோதரரும் அவரை அழைக்கும்படி வந்தனர். அதை இயேசுவுக்கு அறிவித்தபோது, அவர் சொன்ன பதில் இதுதான்: தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் (மாற்.3:35) என்றார். இங்கே இயேசுவானவர் தன் தாயைக் கனவீனப்படுத்தினாரா? இல்லை. யார் அவருக்கு உறவினர் என்பதை உணர்த்தினார். பின்னர் இன்னுமொரு தடவை, யாதொருவன் என்னிடத்தில் வந்து தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும்… தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாக இருக்கமாட்டான் (லூக்கா 14:26) என்றார். இங்கே “தன் ஜீவனையும்” என்பதைக் கவனிக்கவும்.

ஆக அன்பானவர்களே, பெற்றோரைக் கனம் பண்ணுவது கட்டாயம்; ஆனால், இயேசுவைப் பின்பற்றுவதற்கும், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் நமது பெற்றோருக்குக் கொடுக்கும் கனம் தடையாக இருக்கக்கூடாது. அவர்களுக்கும் மேலாக தேவனுக்கே கனமும் புகழும் முக்கியத்துவமும் முதலிடமும் நாம் கொடுக்கவேண்டும்.

ஜெபம்: அன்பின் தேவனே, எனது ஆவிக்குரிய வாழ்வுக்கும் உமது சித்தத்தை நிறை வேற்றுவதற்கும் தடையாயிருக்கிற யாவற்றையும் என்னைவிட்டு விலக்கி உமக்கே முதலிடம் தருவதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.