அரை மனதுள்ள அமத்சியா!

தியானம்: 2024 நவம்பர் 19 செவ்வாய் | வேத வாசிப்பு: 2 நாளாகமம் 25:1-28

YouTube video

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை (2நாளாகமம் 25:2).

“என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என்முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி” என்று சொல்லிப் பழகிவிட்டோம். இதிலே, “என் முழு உள்ளமே” என்ற சொற்களைக் கருத்துடன் சொல்லுகிறோமா? “முழு உள்ளம்” என்றால் அதில் மிச்சம் மீதி இருக்கமுடியாது. தேவனோடு இசைந்துள்ள என் ஆவி, நினைவுகளினாலும் சிந்தனைகளினாலும் நிறைந்த என் ஆத்துமா, நான் வாழும் இந்த சரீரம், இந்த முழுமையும் தேவனை சேவிக்க வேண்டும். கொஞ்சம் தேவனையும், மீதி உலகையும் என் சுயத்தையும் சேவிக்க முடியாது. அது இறுதியில் நம்மைச் சத்துருவின் கைக்குள் வீழ்த்திப்போடும்.

யோவாசின் மகன் அமத்சியா ராஜாவாகும்போது அவனுக்கு வயது 25. இவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான், அதாவது வெளிப் பார்வைக்கு அவன் சரியானதைச் செய்தான். ஆனால், அவனது உள்ளான இருதயம் தேவனுக்கு உண்மையாய் இருக்கவில்லை. அவனது கீழ்ப்படிதல் அரைமனதாகவே இருந்தது. இவன் யுத்தத்திற்கு ஆயத்தம் செய்தபோது, இஸ்ரவேலிலும் லட்சம் பேருக்கு பணத்தைக் கொடுத்து கூலிக்கு அமர்த்தினான். அதை மறுத்து, போக மனதானால் நீர் போம் என்ற தேவனுடைய மனுஷன், “ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும்” என்று சொல்லியும், தான் கொடுத்த பணத்தையே கணக்குப்பார்த்த இவன், தனது பணத்தைக் குறித்தே கவலைப்பட்டான். என்றாலும் இஸ்ரவேல் வீரரை அவன் அனுப்பிவிட்டான். கர்த்தர் அவனுக்கு ஏதோமியர்மீது வெற்றி கொடுத்தபோது, அவன் தன்னை மறந்தான், தேவனை மறந்தான். அந்நிய தெய்வங்களைக் கொண்டுவந்து, தனக்குத் தெய்வங்களாக்கி, பணிந்து வணங்க ஆரம்பித்தான். அதன்பின்னர் நடந்தவைகளை நாம் வாசித்தோம். “அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு” அவனது காலம் தள்ளாட ஆரம்பித்து, இறுதியில் தன் சொந்த ஜனத்தினாலேயே கொலை செய்யப்பட்டான்.

அன்பானவர்களே, இரு விஷயங்களை நாம் இங்கு சிந்திக்கவேண்டும். ஒன்று அரை மனது, முடிவில் அது ஒன்றுமில்லாமலே போய்விடும். பணத்தையும், சுயபெலத்தையும் சார்ந்துகொண்டு, தேவனைச் சேவிக்க நினைக்கக்கூடாது. தேவனில் நம்பிக்கை வைத்தால், எந்தச் சூழ்நிலையிலும் முழுமனதோடு நாம் அவரையே சார்ந்திருக்கவேண்டும். அடுத்தது, வெற்றிகளும் சாதனைகளும் மகிழ்ச்சியைத் தந்தாலும், அதைத் தொடர்ந்து சோதனைகளும் வரும் என்ற விழிப்புணர்வு நமக்கு இருக்கவேண்டியது அவசியம். தேவனை முழுமையாக சார்ந்து நின்றால், வெற்றியோ தோல்வியோ எதுவும் நம்மை அசைக்காது!

ஜெபம்: அன்பின் தேவனே, எனது வெற்றிகளுக்குப் பின்னர் நான் விழுந்துபோன நிகழ்வுகளுக்காக மனவருந்துகிறேன். இனி என் வாழ்வில் முழுமனதுடன் உம்மை மாத்திரமே சார்ந்துநிற்க எனக்கு கிருபை தாரும். ஆமென்.