தேவனுடைய காலங்கள்!

தியானம்: 2025 அக்டோபர் 29 புதன் | வேதவாசிப்பு: பிரசங்கி 3:11-14

YouTube video

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரசங்கி 3:11).

சில ஆண்டுகளுக்குமுன் ஒரு காரியத்தையிட்டு, அதைச் செய்துமுடிக்க வேண்டிய சகோதரனை அவசரப்படுத்தினேன். என் நச்சரிப்பைப் பொறுக்கக் கூடாத அவர், அந்த ஆண்டின் காலண்டரின் முதற்பக்கத்தைத் தூக்கிக்காட்டி னார். அதிலே மேலே காண்கின்ற வாக்கியம் இருந்தது. என் உள்ளத்தை ஒருவித சமாதானம் கவ்விக்கொண்டதை உணர்ந்தேன். அதன்பின் அதைப் பற்றி நான் பேசவேயில்லை. இது நடந்தும், பல மாதங்களின் பின்னர்தான் காரியம் நிறைவேறியது. ஆனால், அது தந்த பலனை நான் இன்றும் மறப்பதில்லை. என் நச்சரிப்பினால் அவர் அதை முன்னரே செய்திருந்தால் இத்தனை பலன் கிடைத்திருக்காது என்பதை உணர்ந்தேன்.

காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறதினால், அதை நமது கரங்களில் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால், அதற்கும் மேலாக தேவன் ஒரு காரியத்தைச் செய்துள்ளார். அது என்னவெனில் உலகத்தை நமது உள்ளத்திலே வைத்துவிட்டார். அதாவது காலத்தைப்பற்றிய உணர்வை நமக்குத் தந்திருக்கிறார். அதனால் பூமிக்குரியவைகளுக்கும் மேலான வாஞ்சை ஒன்று நமக்குள் இருக்கிறது. இது தேவனால் வைக்கப்பட்டிருக்கிறது. நித்தியமாக வாழவேண்டும் என்ற ஆசை நமக்குள் இருக்கிறது. ஏன் தெரியுமா? நாம் தேவனால் அவரது சாயலிலே படைக்கப்பட்டவர்கள். ஆகவே, நாம் இவ்வுலகத்தின் மதிப்பையும் அதன் செயற்பாடுகளையும் அனுபவிக்க விரும்பினாலும், அது நம்மை ஒருபோதும் திருப்திப்படுத்தவே மாட்டாது.

தேவபிள்ளையே, இந்த வாழ்வை நாம் சந்தோஷமாகக் கழிக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அதற்காகவே நமக்கு அவர் சகலத்தையும் தந்திருக்கிறார். ஆனால், அவற்றை தவறானவிதத்தில் அனுபவிக்க முற்படுவது மிகவும் ஆபத்தானது. தேவன் ஈவாகக் கொடுத்தவற்றில் மகிழ்ந்திருப்பதை விட்டு, சம்பாதித்து சந்தோஷமாய் இருக்க நாம் முற்படும்போதுதான் ஆபத்தில் சிக்கிவிடுகிறோம். ஆகவே, நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். நாம் தேவனுக்குப் பயந்து அவரை கனப்படுத்தி அவருக்கென்று வாழ பழகிக்கொள்ள வேண்டும். நாம் நல்லவர்கள், நாம் பலவற்றை அறிந்திருக்கிறோம் என்ற அடிப்படையில் நாம் வாழக்கூடாது. நாம் அறிந்திருப்பவர் யார்? அல்லது நாம் யாரை அறிந்திருக்கிறோம்? என்பதிலிருந்தே நாம் வாழ்வை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில்,தேவனிலிருந்துதான் எல்லாம் ஆரம்பிக்கிறது. அப்போது காலங்கள் எல்லாம் கர்த்தருக்குள் நமக்கு ஆசீர்வாதமாகவே இருக்கும்.

ஆகவே தேவபிள்ளையே, இதுவரை வாழ்ந்ததைவிட்டு, இப்போதே தேவனின் காலத்துக்குள் நீ திரும்பு.

ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, என் காலங்கள் உமது கரத்திலிருப்பதால், என் காரியங்களை அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்தருளும், ஆமென்.”