நாம் மிருகங்களல்ல!
தியானம்: 2025 அக்டோபர் 31 வெள்ளி | வேதவாசிப்பு: பிரசங்கி 3:18-22

உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? (பிரசங்கி 3:21)
“மிருகத்தைச் சுடுவதுபோல மனிதனையும் சுட்டுப்போடுகிறார்களே” என்று மனம் பேதலிக்கும்போது, “மனிதனும் சரி, மிருகமும் சரி, இவை எல்லாமே ஒரு இடத்துக்குத்தானே போகின்றன” என சில சமயம் நாம் அலுத்துக்கொள்வதுண்டு. அது உண்மைதான்! மனுஷனோ மிருகமோ சாகும்போது சரீரம் மண்ணில்தானே புதைக்கப்படுகிறது. இப்படி ஒரு மனுஷன் நினைப்பானானால், தான் நிலையற்றவன் என்ற உணர்வைத்தான் அவன் வெளிப்படுத்துவான். இவ்வுலகை பொறுத்தவரையிலும் நாம் நிலையற்றவர்கள்தான். ஆனால், இவ்வுலகில் வாழுவதற்கென்று தேவன் மனுஷனைப் படைக்கவில்லை என்பதை மறந்துபோவதால்தான் துன்பங்கள் மத்தியில் கசப்புணர்வுக்குள்ளாகிறோம். சாலொமோனுக்கும் அன்று அதுதான் நடந்தது. தான் இவ்வுலகை அனுபவிக்கப் பிறந்தவர்போல வாழ்ந்தார். ஆனால், பின்னர் உண்மையைக் கண்டு கொண்டார்.
“குரங்கிலிருந்து மனிதன் வந்தான்” என விஞ்ஞான பாடம் படித்தபோது, அது அந்த சிறுவயதில், மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், மனிதனையும் மிருகத்தையும் பலவிதங்களில் ஒப்பிட்டுப் பேசக் கேட்கும்போது, தேவனுடைய படைப்பு, அதாவது தேவனைக் குற்றப்படுத்தப்படுவதை உணரக் கூடியதாக இருக்கிறது. சுவாசிக்கும் எல்லா உயிர்களும், கரப்பான் பூச்சிகூட தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எவ்வளவாய் பாடுபடுகிறது. ஆம், எல்லா ஜீவன்களுக்கும் உயிர்களுக்கும் வாழவேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. ஆனால், நமக்கு, தேவன் நித்தியத்தை நமது இருதயத்திலே வைத்திருப்பதால், வெறும் வாழ்வு அல்ல; நித்தியத்திலே தேவனோடு வாழவேண்டும் என்ற வாஞ்சையே நம்மை நிரப்பியுள்ளது. ஆனால், அந்த நித்திய வாழ்வுக்காக நமக்கொரு நியாயத்தீர்ப்பு உண்டு. இவை எதுவும் மிருகங்களுக்கு இல்லையே!
தேவபிள்ளையே, “நாம் மேன்மையான படைப்புகள்” என்பதை அடிக்கடி மறந்துபோகிறோம். தேவனோடு உறவுகொள்ளும் ஆவியும், அதைத் தாங்கி நிற்கும் ஆத்துமாவும், அவை வாழுகின்ற சரீரமும் நமக்குண்டு. நம்மைப் படைத்தவரோடு நாம் உறவு கொள்கிறோம். ஆனால், இந்த உறவு மிருகங்களுக்கு இல்லை. நாம் சாகும்போது நமக்கு ஆவியைத் தந்த தேவனிடமே நமது ஆவி செல்கின்றது. ஆனால், மற்ற ஜீவராசிகளுக்கு இந்தப் பாக்கியம் இல்லை. ஆனாலும், ஒரு காரியம். தேவனோடு உறவுகொள்ளும் பாக்கியம் பெற்ற நாம், அதை உதாசீனப்படுத்தி மிருகங்கள்போல வாழ எத்தனிக்கக்கூடாது. பின்னர் நியாயத்தீர்ப்பில் நாம்தான் வெட்கப்பட வேண்டிவரும். தேவன் தந்த ஈவாகிய இந்த வாழ்வை தேவனுக்கென்று வாழ அர்ப்பணிப்போமா!
ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, உம்மோடு நித்தியமாய் வாழவென்று இந்த வாழ்வை ஈவாகத் தந்திருப்பதால், அதை உமக்கென்றே வாழ கிருபை புரியும். ஆமென்.”