எசேக்கியா ராஜா

தியானம்: 2025 நவம்பர் 9 ஞாயிறு | வேதவாசிப்பு: 2இராஜாக்கள் 18:5-8

YouTube video

அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும்… ஒருவனும் இருந்ததில்லை (2இராஜாக்கள் 18:5).

அநேகமாக ஆரம்பங்கள் நன்றாகவும் சிறப்பாகவும் இருப்பதுண்டு; ஆனால், காலம் கடந்து செல்ல செல்ல அதே சிறப்பு இருக்குமா? இன்னும் மெருகூட்டப்படுமா? அல்லது தேய்ந்துபோகுமா? நமது வாழ்வின் அனுபவங்களிலிருந்தே இதற்கான பதிலை நாம் கண்டுகொள்ளலாம்.

எசேக்கியா ராஜா, யூதா ராஜாக்களுக்குள் முக்கியமானவர்களில் ஒருவன். சுவர்ப்புறமாக தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுதவன் யார் என்று கேட்டால், உடனடியாகவே எசேக்கியா என்று சொல்லிவிடுமளவுக்கு இவனும் இவனது ஆட்சி காலமும் இன்றும் நம் மத்தியிலும் பேசப்படுகின்ற ஒன்று. இவனைக் குறித்து, “கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று” என்று வாசிக்கிறோம். இது எப்படி அனுகூலமாயிற்று? அதற்கான பதில் இதுதான். எசேக்கியாவைக் குறித்து வேதாகமம் தந்திருக்கிற சாட்சி, வேறு எவரைக் குறித்தும் கொடுக்கப்படவில்லை. யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ் மரித்த பிற்பாடு அவன் குமாரன் எசேக்கியா யூதாவை அரசாள தனது இருபத்தைந்து வயதில் ஆரம்பித்தான். “இவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.” இப்படியொரு அறிக்கையை இன்று நம்மைக்குறித்துக் கர்த்தர் கொடுப்பாரா? மேலும், அவன் கர்த்தரையே சார்ந்திருந்தான் என்று பார்க்கிறோம். இன்னும் முக்கியமாக, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகனைகளை எசேக்கியா கைக்கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்.

இன்று கர்த்தர் நம்மோடிருக்கிறாரா? அவரை நம்பி விசுவாசிப்பதாகக் கூறுகின்ற நாம் மெய்யாகவே நமது நம்பிக்கையை முழுதாக அவரில் கொண்டிருக்கிறோமா? அந்த நம்பிக்கை உறுதியானது என்றால், அவரை விட்டு நம்மால் விலகவும் முடியாது; அவருடைய கற்பனைகளை கட்டளைகளை உதாசீனம் செய்யவும் முடியாது. இன்று நமது கைகளிலே தேவனுடைய அன்பின் சுவிசேஷம் இருக்கிறது; கர்த்தருடைய அன்பின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்மைக் கரம்பிடித்து நடத்த ஆயத்தமாய் இருக்கின்றன. ஆனால் நாம் அந்த வார்த்தைகளில் நிலைத்திருக்கிறோமா என்பதே கேள்வி. நிலைத்திருந்தால், எந்த நிலையிலும் கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்குள் ஊன்றித் திளைத்திருக்கும். இந்த உலகமோ, பகைவனோ நம்மை அசைக்க முடியாது. யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (சங்.146:5).

ஜெபம்: கர்த்தாவே, எந்த சந்தர்ப்பத்திலும் எசேக்கியாவைப் போல கர்த்தர்மேல் வைத்த நம்பிக்கையிலே உறுதியாய் நிலைத்திருக்க எங்களுக்கு உமதருளைத் தாரும். ஆமென்.