நாசமலை

தியானம்: 2025 நவம்பர் 24 திங்கள் | வேதவாசிப்பு: 2இராஜாக்கள் 23:1-20

YouTube video

அவனைப்போலொத்த ராஜா அவனுக்கு முன் இருந்ததுமில்லை, அவனுக்குப் பின் எழும்பினதுமில்லை. (2இராஜாக்கள் 23:25).

இப்படியொரு அறிக்கை சொல்லப்படுவதற்கு உலகம் போற்றத்தக்க பெரிய அதிசயங்களை யோசியா ராஜா செய்யவில்லை. அவன் செய்ததெல்லாம், கர்த்தருடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்து, தன்னையும் மக்களையும் தேசத்தையும் சுத்திகரித்தான், அவ்வளவும்தான். ஆனால் இது இல்லாமல் எதுவுமே இல்லை!

கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை எழுதிய மோசே, விடுதலையின் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில், கர்த்தருடைய சந்நிதியில், இஸ்ரவேலர் எல்லாரும்கேட்க இதை வாசிக்கவேண்டும் என கட்டளையிட்டார் (உபா.31:9-13). ஆனால், தீயராஜாக்களின் நீண்ட ஆட்சிக்காலங்களில் இந்தப் புத்தகம் மறக்கப்பட்டுப்போனது. யோசியாவின் காலத்தில் ஆசாரியன் இல்க்கியா, ஆலய சுத்திகரிப்பின்போது அதைக்கண்டெடுத்து, ராஜாவிடத்தில் அனுப்பினான். அதை வாசிக்கக்கேட்ட ராஜா, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இதைக் கைக் கொள்ளாதே போனபடியினால்தான் கர்த்தருடைய உக்கிரம் நம்மேல் மூண்டது என்று சொல்லி அழுதான். மேலும், பிரமாணங்களின்படி நடக்க உடன்படிக்கை பண்ணினான். கர்த்தருக்கு அருவருப்பான அனைத்தையும் (2இராஜா.23:4-12) சுட்டெரித்து, சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, இரதங்களை சுட்டெரித்து கீதரோன் ஆற்றங்கரையில் கொட்டினான். எருசலேமுக்கு எதிரே இருந்த நாசமலையின் வலதுபுறத்தில் சாலொமோன் உண்டாக்கிய அருவருப்புகளையெல்லாம் உடைத்து நிர்மூலமாக்கினான்.

தற்போதைய ஒலிவமலைதான், நாசமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் விக்கிரக மேடைகளின் முக்கிய இடமாக அன்று இந்த இடம் அமைந்திருந்தது. சாலொமோன் (1இரா.11:7) முதற்கொண்டு பல ராஜாக்கள் இங்கேதான் மேடைகளை அமைத்தார்கள். ஆனால் எசேக்கியாவும் யோசியாவும், இவற்றை அழித்தார்கள். இயேசுவின் காலத்தில் அவர் ஒலிவ மலை மீது உட்கார்ந்திருந்து, தமது சீஷர்களுக்குப் போதித்ததைக் காண்கிறோம் (மத்.24:3). இறுதியில் ஆண்டவர் பாதம் ஒலிவமலையின்மேல் நிற்கும் (சக.14:4).

இன்று தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, நமது இருதயத்தைக் கிழித்து நாம் மனந்திரும்புகிறேமா? அன்று, எருசலேமுக்கு எதிரே இருந்த ஒலிவமலையை, இஸ்ரவேலர் நாசமலையாக்கி வைத்திருந்தார்கள். அதைச் சுத்திகரிக்க யோசியாவுக்கு ஊன்றுகோலாயிருந்தது கர்த்தருடைய வார்த்தை கள்தான். இன்று கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம் நம்மிடம் உண்டு; நாமே நமக்கு உண்டாக்கிய நாசமலைகளை அழித்துப்போடுமளவுக்கு அது நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த இடமளித்திருக்கிறோமா? சிந்திப்போம்.

ஜெபம்: கர்த்தாவே, நாசமலை போன்று எங்கள் வாழ்விலிருந்து நீக்கப்படாமல் இருக்கிற அருவருப்பானவைகள் அனைத்தையும் சுட்டெரித்துப்போடுகிறோம். உமது இரத்தத்தால் எங்களைக் கழுவியருளும். ஆமென்.