யோசியாவுமா?
தியானம்: 2025 நவம்பர் 26 புதன் | வேதவாசிப்பு: 2நாளாகமம் 35:20-27

நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும், அவனோடே யுத்தம் பண்ண வேஷம்மாறி, …வந்தான் (2நாளாகமம் 35:22).
கர்த்தர் யாருடன் பேசுவார், யார் மூலமாகப் பேசுவார் என்பதெல்லாம் கர்த்தருடைய திட்டமும் சித்தமுமாகும். அதைப் பகுத்தறியத்தக்க கிருபை நமக்கு அவசியம். தேவனுடைய செய்தி நாம் எதிர்பாராத வழிகளில் வரலாம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தர் புறவின ராஜாக்களுடன் பேசிய சம்பவங்களை நாம் பார்க்கிறோம் (உதாரணமாக ஆதி.12:17-20). அவர் இன்றும் தமது காரியமாக யாரையும் உபயோகிப்பார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இன்று நாம் வாசித்த சம்பவம் கி.மு. 609ல், அசீரியாவின் தலைநகரம் நினிவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோனில் அழிக்கப்பட்ட பின் நடந்தது என்று அறியப்படுகிறது. பாபிலோன் வலுத்துவிடும் என்று பயந்த எகிப்திய ராஜா நேகோ. அசீரியாவுக்கு விரோதமாகப் போனபோது, யோசியா ராஜா அவனுக்கு எதிராக எழும்பினான். அப்போது, நோகோ அவனிடம் ஆள் அனுப்பி, “நான் உமக்கு விரோதமாக வரவில்லை, இன்னொருவனுக்கு விரோதமாகவே போகிறேன். நான் சீக்கிரமாகப் போகவேண்டும் என்று தேவன் சொன்னார், தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடி, அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும்” என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினான். ஆனால் யோசியாவோ இந்த புறவினத்தானுடன் தேவன் பேசுவாரா என்று நினைத்தாற்போல, நேகோ சொன்ன தேவனுடைய வர்த்தைக்குச் செவிகொடாமல் யுத்தம் பண்ணப்போய், அம்பெய்யப்பட்டு, பின்னர் மரணமடைந்தான். என்ன பரிதாபம்! இளவயது முதற்கொண்டு கர்த்தருக்கென்று வைராக்கியமாய் இருந்தவன் அநியாயமாக மாண்டுபோனான்.
யூதாவின்மீது தேவகோபம் இருந்தது (2ராஜா.23:26-27). ஆகவே கர்த்தர் சொன்னபடி நடந்தது என்றாலும், யோசியாவைப் பொறுத்தளவில், தனது வாழ்வு முழவதும் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருக்கும் அவருடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுத்துதானும் நடந்து, தன் ராஜ்யபாரத்தையும் சிறப்பாக நடந்தியிருந்தபோதும், ஒருதடவை தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்தான்; அதுவே அவனுக்கு விக்கினமாக மாறியது. அவன் தன்வாழ்வை இழந்து போனான். இது நமக்கு இன்று எச்சரிக்கையாக இருக்கட்டும். இந்த இடத்தில் நாம் மோசேக்கு மறுக்கப்பட்ட கானான் பிரவேசத்தையும் நினைத்துப் பார்ப்பது நல்லது. முடிவுபரியந்தம் நிலைத்திருக்கும் பாக்கியத்தைத் தேவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்வோமாக. நாம் தேவனுக்கென்றே வாழ்ந்து வந்தும், ஒரு சந்தர்ப்பத்தில் நாம் அவருடைய வார்த்தையை விட்டு விலகிவிடுகின்ற அந்தத் தருணத்தில் நமது மரணம் நேரிடுமானால், ஆண்டவரின் வருகை இருக்குமானால் நமது நிலை என்ன? சிந்திப்போம்.
ஜெபம்: நியாயாதிபதியாக மீண்டும் வரப்போகிற இராஜாவே, எங்கள் அழைப்பில் நிலைத்திருந்து, இரட்சிப்பை காத்துக்கொள்ளவும், நினையாதவேளையில் இருக்கும் உமது வருகையில் நாங்கள் காணப்படவும் எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்.