கிறிஸ்தவனா? சீஷனா?

தியானம்: 2026 ஜனவரி 5 திங்கள் | வேத வாசிப்பு: மத்தேயு 28:16-20

YouTube video

…. அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் (ரோமர் 8:29).

தோற்றத்தில், பேச்சில், செயலில், செய்யும் தொழிலிலும்கூட தன்னைப் போலவே தன் மகனும் காணப்படுவதை அவதானிக்கும் ஒரு தகப்பன் பெருமைப்படாமல் இருப்பானா? ஒரு முதிர்ச்சியடைந்த சீஷனைக்குறித்து அந்நாட்களில் யூதர்கள் பின்வருமாறு சொல்வார்களாம்: “அவனுடைய குரு மரித்தாலும், அவர் மரிக்காதவர்போலவே காணப்படுவார். ஏனெனில் அந்தக் குரு தன்னைப்போலவே ஒருவனை விட்டுச்சென்றுள்ளார்.” இதையேதான் ஆண்டவரும் விரும்பினார். “சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல; தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்” (லூக்.6:40). இங்கே ஒரு காரியத்தை நாம் சிந்திக்கவேண்டும். நாம் கிறிஸ்துவைப்போலாக வேண்டுமானால், முதலாவது கிறிஸ்தவ குடும்பத்தில் பரம்பரையாக வந்த பெயர் கிறிஸ்தவர்கள் என்ற நினைவை மறக்கவேண்டும். அப்படியானால் நாம் யார்?

ஆம், இன்றைக்கு நமது சிந்தனையில் இருக்கிற கிறிஸ்தவர்களைப்போல வாழ நாம் அழைக்கப்படவில்லை. ஆண்டவர் நம்மை சீஷர்களாகவே அழைத்திருக்கிறார். “புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்றதான கட்டளையையும் கொடுத்திருக்கிறார். நமது இக்கட்டுகளில் அவரை “அப்பா” என்றழைத்து ஒரு தகப்பனாக அவரை அணுகுகிறோம். ஆனால் அவரைப் போலாகும் கடின பாதையிலே அவரைத் தகப்பனாக ஒரு குருவாக நாம் ஏற்றுக்கொள்கிறோமா? இந்தப் பாதையில் நாம் பிரவேசிப்பதற்கு முதலாவது, நமது பாவங்களறக் கழுவப்பட்டு, இயேசுவின் இரத்ததினாலான மீட்பை நாம் சுதந்தரிக்கவேண்டுமே! அந்த புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எவனும் அவரைப் பின்பற்றிச் செல்லத் தயங்கமாட்டான்.

“என்னைப் பின்பற்றி வா” என்று அழைத்ததும், பலனைப்பற்றி சிந்திக்காமல், யாவற்றையும் விட்டுவிட்டு ஆண்டவரையே பின்பற்றிச் சென்ற சீஷர்களை நினைக்கும்போது சிலசமயம் நமக்குப் பொறாமைகூட வரலாம். ஏனெனில் நம்மால் பலவேளைகளிலும் அப்படி முடியாமலிருக்கிறதே! “நான் எப்படியும் என் இயேசுவையே முழுமையாக பின்பற்றவேண்டும்.” இப்படியாக ஒரு வாலிபன் என்னிடம் சொன்னான். “என்னில் இயேசுவின் அழகு காணட்டும்” என்ற பல்லவி மிகுந்த அர்த்தம் செறிந்தது. ஆனால் பாடினால் போதாது. அந்த அழகைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், நான் கிறிஸ்தவன் என்று மாய்மாலம் பண்ணாமல், குரு பாதம் அமர்ந்து, காத்திருந்து, கற்றுக்கொண்டு, கீழ்ப்படிந்து, குருவுக்கே சேவை செய்து, அவரோடு அவர் வழி மாத்திரமே நடக்கின்ற உண்மையுள்ள சீஷர்களாக வாழவேண்டுமே! அதற்கு நாம் ஆயத்தமா? தேவ சாயலை வெளிப்படுத்துவேனா?

ஜெபம்: “நல்ல ஆண்டவரே, கிறிஸ்தவபெயரைத் தரித்துக்கொண்டவர்களாய் மட்டும் இருந்துவிடாமல் கிறிஸ்துவை வெளிப்படுத்தும் சாட்சியின் வாழ்க்கை வாழ எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.