விடுதலையோடு கற்றுக்கொள்!

தியானம்: 2026 ஜனவரி 6 செவ்வாய் | வேத வாசிப்பு: யோவான்; 8:24-36

YouTube video

கர்த்தராகிய ஆண்டவர் என் செவியை திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை (ஏசாயா 50:5).

வித்தியாசமான வாத்தியக்கருவிகளுடன் அமர்ந்திருக்கும் இசைக் குழுவினர் அனைவரும், முன்னே நின்று தம்மை நடத்துபவருடைய அசைவை உன்னிப்பாகக் கவனித்து, ஒழுங்காக இசை இசைப்பார்களே, மெய்யாகவே அது ஒரு அழகிய காட்சிதான். ஆனால் இப்படிப்பட்ட ஒரு குழுவில் சேர்ந்து இசைப்பது என்பது இலகுவான ஒன்று அல்ல. முதலில் இசையைக் கற்க வேண்டும், இசைக்கருவியை மீட்ட கற்கவேண்டும். பின்னர் அந்தக் குழுவில் இணைந்து கற்கவேண்டும். அடுத்தது அந்த வழிநடத்துபவருக்குக் கட்டுப்பட்டு ஒருங்கிணைந்து இசைக்கக் கற்கவேண்டும். இதற்கு எத்தனை நாட்கள் வருடங்கள் செலவாகிறது? அது ஒரு கடினமான பயிற்சி. ஆனால் முடிவில் அந்தக் குழுவில் அமர்ந்திருந்து இசைக்கும்போது அது எத்தகைய சந்தோஷத்தைக் கொடுக்கும் தெரியுமா?

இப்படியிருக்க, இயேசுவைப்போல நாமும் ஜீவிப்பதற்கு நமக்கு எவ்வளவு பயிற்சி தேவை. நாம் கற்றுக்கொள்ளவேண்டியது எவ்வளவு! கற்றால் மாத்திரம் போதாது. கீழ்ப்படியும் மனதும் அவசியம். அதிலும் மேலாக கட்டுப்பாடு, கட்டுப்பட்டு வாழும் மனது, ஒழுங்கான வாழ்வு, விடாமுயற்சி, எல்லாவற்றுக்கும் மேலாக அர்ப்பணமுள்ள ஜீவியம் நமக்கு அவசியம். இது சாத்தியமா? இவற்றை நாம் செயற்படுத்துவது எப்படி? “சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவா.8:32) இதுதான் இரகசியம். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். ஆம், அவரே சத்தியம். அவரை அறிவதே நமக்கு வாழ்வு, நித்திய ஜீவன் (யோவா.17:3). இந்த சத்தியமே நம்மை மீட்டு நித்திய ஜீவனுக்கு நேராக நடத்தும். அதற்கு நாம் இயேசுவைத் தரித்துக்கொள்ள வேண்டுமே!

நாம் ஆண்டவரை நேசிக்கிறோம். வேதத்தை வாசிக்கிறோம், தியானிக்கிறோம். இயேசுவோடு நித்தியமாய் வாழவும் வாஞ்சிக்கிறோம். ஆனால் உலக ஆசையிலிருந்து விடுதலையாகி, இயேசுவிடம் கற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறோமா? சுவிசேஷங்களிலே நாம் இயேசுவைக் குறித்த சத்தியங்களை வாசிக்கையில், வசனம் நம்மைப் புதுப்பிக்கிறது. கிறிஸ்துவைப் போலாகுதல் என்பது ஒரு நொடிப்பொழுதில் நிகழும் ஒன்றல்ல. படிப்படியாக ஒழுங்காக கட்டுப்பாட்டுடன் அவரையே உன்னிப்பாக நோக்கி கற்றுக்கொண்டு முடிவு மட்டும் நடக்கும்போது நாம் பெற்றுக்கொள்ளும் ஒரு அனுபவம் ஆகும். அது கடினம்தான். கடினமாயினும் கட்டுப்பாட்டுடன் கற்றுக்கொண்டால், அந்தச் சாயலைத் தரித்துக்கொள்ளும் நாளின் மகிழ்ச்சியில் அந்தக் கடினம் யாவும் பெறுமதி வாய்ந்ததாய் தெரியுமே! ஆகவே கற்றுக்கொள்ளும் கட்டுப்பாடுள்ள மனதைக் கேட்டுப் பெற்றுக்கொள்வோமாக.

ஜெபம்: அன்பின் அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவும், உமது பாதத்தில் தரித்திருந்து கற்றுக்கொள்ளுகிற கட்டுப்பாடுள்ள மனதையும் எங்களுக்குத் தாரும். ஆமென்.