தெரிந்துகொண்ட துக்கம்
தியானம்: 2026 ஜனவரி 11 ஞாயிறு | வேத வாசிப்பு: மாற்கு 10:17-24

ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது (மாற்கு 10:24).
அவன் ஒரு பணக்கார வாலிபன். மிகவும் கவனமாக கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்ந்தவன். வாலிப வயதிலும் அப்படியொரு கட்டுப்பாடு. அவனுக்குள்ளும் ஒரு தாகம். அதற்குப் பதில் இயேசுதான் என்று நம்பி. இயேசு விடம் ஓடிவந்தான். வந்தவன் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டான். அவன் கேட்ட கேள்வியோ இயேசுவையே அசைத்திருக்கும். வாலிபனுடைய மனதிலே இருந்த நித்திய ஜீவனைக் குறித்த வாஞ்சை அவனது கேள்வியிலே வெளிவந்தது. ஆண்டவர் அவனை அன்போடு பார்த்தார். அவனுடைய தாகம் உண்மையாயினும், அதற்குத் தடையாக அவனுக்குள்ளே மறைந்திருந்த வேறொரு உண்மையை உணர்த்தினார். செல்வத்தின்மீது அவனுக்கு இருந்த பற்றுதல் மிக ஆழமாக இருந்ததை வெளிப்படுத்தினார். ஆனால் அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நித்திய சந்தோஷத்தை நாடித் தேடி வந்தவன், தனக்குத்தானே துக்கத்தைத் தெரிந்துகொண்டு திரும்பிப்போனான்.
இந்த வாலிபன் தன்னுடைய முக்கிய தேவையை அடைய முடியாதபடி முக்கியமான குறையொன்று அவனைத் தடுத்துவிட்டது. நினைத்திருந்தால் அந்தக் குறையைத் தீர்த்து, தான் விரும்பிய சந்தோஷத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் அவனுடைய வாழ்வில் அவனுடைய விருப்பத்தைப் பார்க்கிலும். முக்கியம் என்று அவன் எண்ணிய குறையானது முக்கியம் வாய்ந்ததாய் இருந்தது.
இந்த வாலிபனைப்போல இன்றும் பல வாலிபர்களும் பெரியவர்களும் உன்னதமான நோக்கங்களோடு வாழுகிறோம். இயேசுவிடம் வந்து முழங்காற் படியிடுகிறோம். எப்படியாவது பரலோக ராஜ்யத்தை அடைய வேண்டும் என்று தீராத தாகம்! யார்தான் நரகத்திற்குப் போக விரும்புவர்? ஆனால் இன்று அதிக பட்சமானவர்களின் வாழ்வு நித்தியத்திற்கு நிலைத்திராத பலவித நிச்சயமற்ற உலககாரியங்களில் மூழ்கிப் போயிருக்கிறது. உலகம் காட்டுகிற பலவித சந்தோஷங்களை நாடித் தேடுவதை நிறுத்த முடியாமல் தவிக்கிறது. இதனாலே தான் இவனைப்போல அநேகர் துக்கத்தைத் தெரிந்தெடுத்தவர்களாக தினமும் துக்கத்தோடே ஜீவிக்கிறோம். ஒருவேளை நம்மிடம் ஆண்டவரை முற்றும் முழு அர்ப்பணத்தோடு பின்பற்றுவதற்கு ஐசுவரியம் தடையாக இல்லாதிருக்கலாம். வேறு பல குறைகள் இருக்கும். அந்த முக்கிய குறைபாடுகளை இனங்கண்டுகொள்ளவே நாம் தயங்குகிறோம். இதனால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறித்தும் அறிவற்றவர்களாக இருக்கிறோம். நமது குறைபாடுகளைக் குறித்து நாம் அறிவீனமாக இருக்கலாமா? தேவபிள்ளையே, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்போமா? நித்திய துக்கமா? நித்திய மகிழ்ச்சியா!
ஜெபம்: “கர்த்தாவே, முக்கியமானது என்று கருதினாலும், உமது பார்வையில் குறை என்று காண்பதை எனக்கு இப்போதே உணர்த்திக் காட்டும் ஐயா. ஆமென்.”