அன்பின் உறவுகளையுமா?

தியானம்: 2026 ஜனவரி 16 வெள்ளி | வேத வாசிப்பு: மத்தேயு 10:34-39

YouTube video

யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் … தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் … (லூக். 14:26).

நமது மாணவ பருவத்தில், லெந்துகாலம் வந்துவிட்டால் “மாமிசம் சாப்பிடுவதில்லை” என்று ஒரு தீர்மானம் எடுப்போம். “நமக்குப் பிரியமானதை ஒறுத்து, அந்தப் பணத்தை காணிக்கையாகக் கொடுப்போம்” என்று பெருமைப்பட்டும் கொள்வோம். அந்நாட்களில் உபவாசத்தைக் குறித்த நமக்கிருந்த அறிவு அவ்வளவுதான். சிலவேளை மாமிசம் சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தால் சாப்பிட்டுவிட்டு, அதை மற்றவர்கள் பார்த்துவிட்டால், அதற்கு சாக்குப்போக்குச் சொல்லி சமாளித்துவிடுவோம். அதை இப்போது நினைத்துப் பார்க்க சிரிப்பாக இருந்தாலும், சிலவேளை சிலருடைய கிறிஸ்தவவாழ்வு இன்றும் இப்படித்தான் இருக்கிறது என்பது வேதனைக்குரியது.

கிறிஸ்துவைப் பின்பற்றுவதும், அவரது சாயலைப் பெற்றுக்கொள்வதும், நாம் நினைக்கின்ற அல்லது வாழ்ந்துகொண்டிருக்கின்ற கிறிஸ்தவ வாழ்வில் இலகுவானதல்ல. அதன் பெறுமதி பெரிது. அதற்கு நாம் கொடுக்கவேண்டிய விலை, அதாவது அதைப்பெற்றுக்கொள்ளும்படி விட்டுவிடவேண்டியவை அதிகமாயிருக்கும். இப்பெறுமதியை இழப்பு என்று எண்ணக்கூடாது. பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்கும்போது, பணத்தை இழந்து இதனைப் பெற்றோம் என்றா சொல்லுகிறோம்? இல்லையே. அதுபோலவே கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு நமக்கு மிக அருமையான பல விஷயங்களைக் கொடுக்கவேண்டிவரும்.

சிலசமயம் நமக்கு மிக அருமையான உறவுகள் மாத்திரமல்ல நமது வாழ்வுதனையே விலையாகக் கொடுக்கவேண்டியும் வரும். உறவுகள் தேவனுடைய கொடை. பெற்றோருக்குக் கீழ்ப்படிவது தேவகட்டளை. அப்படியிருக்க குடும்பத்தை வெறுத்துவிடு என்று இயேசு சொல்லவில்லை. ஆனால் கிறிஸ்துவுக்காக வாழ, அவர் வழி நடக்க உறவுகளும் தடையாக அமையலாம் என்பதையே ஆண்டவர் நமக்கு உணர்த்துகிறார். ஆண்டவரா? உறவா? நமது வாழ்வா? என்று வரும்போது நம் தெரிந்தெடுப்பு என்ன? குடும்ப உறவுகளுக்கும், தங்கள் உயிருக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பின்தங்கியிருந்தால் உலகம் அநேக மிஷனரிகளை இழந்திருக்கும். நமது தேசமும் கிறிஸ்துவைக் கேள்விப்பட்டிருக்கமாட்டாது. இன்று சில பெற்றோர் தமது பிள்ளைகள் உயர்பதவி அடையவேண்டுமென விரும்புவதில் தவறில்லை. ஆனால் தேவபணியில் பிள்ளைகள் இறங்குவதை ஏன் விரும்புவதில்லை? இச்சந்தர்ப்பத்தில் பிள்ளையின் தெரிந்தெடுப்பு என்ன? தேவஅன்புக்கு முன்னே எந்தவொரு மனுஷஅன்பும் ஒன்றுமில்லை. கிறிஸ்துவிலுள்ள அன்புக்கு உறவுகளோ சுயநேசமோ தடையாக வரவிடக் கூடாது. பிதாவின் கட்டளையை நிறை வேற்றும் பணியில் இயேசுவும் அப்படியே நடந்தார் அல்லவா! நாமும் அவர் வழி நடப்போமாக.

ஜெபம்: “எங்களை அழைத்தவரே, நீர் தந்த உறவுகளுக்காக ஸ்தோத்திரம். அந்த உறவுகளை வெறுக்காமல் உம்மையே நேசிக்கவும், உமக்கே முதலிடம் கொடுக்கவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.”