தலைமைத்துவம்!
தியானம்: 2026 பிப்ரவரி 8 ஞாயிறு | வேத வாசிப்பு: எண்ணாகமம் 17:1-13

அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும் (எண்ணாகமம் 17:5).
தலைமைத்துவத்துக்காக போட்டியிடுவோர் பலர். இன்று நாட்டிலும், வீட்டிலும், சபையிலும், வேலை ஸ்தலத்திலும் மலிந்து கிடக்கிறார்கள். எல்லா இடத்திலும் தலைமைத்துவத்துக்காக அநேகர் போட்டியிடுகிறார்கள். தகுதியிருக்கிறதோ, இல்லையோ, அந்தப் பொறுப்பைச் செய்ய முடியுமோ இல்லையோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்த இடத்தை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்பதே அவர்களது நோக்கமாகும். போட்டி வலுப்பெறும்போது தேர்தல் உருவாகிறது.
இங்கே ஆண்டவர் அழகான ஒரு தெரிவைத் தேர்தல் இல்லாமலேயே நடத்தி முடிக்கிறார். இதற்கு முந்திய அதிகாரத்திலே கோராகு என்பவன் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக எழும்பி, கலகம் பண்ணி அதனால் இஸ்ரவேல் மக்கள் எத்தனையோபேர் மடிந்துபோனார்கள். இப்பொழுது தேவன் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவுகொண்டு வருகிறார். ஒவ்வொரு கோத்திரத்திலும் இருந்து ஒவ்வொரு கோலாக வாங்குகிறார். அவனவன் கோலிலே அவனவன் பேரை எழுதி தேவனுடைய சமுகத்தில் வைத்தார்கள். நான் தெரிந்து கொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும் என்பதை ஆண்டவர் நிச்சயமாகச் சொல்லியிருந்தார். மறுநாளிலே பார்த்தபோது ஆரோனின் கோல் துளிர்த்தது, கர்த்தர் ஆரோனைத் தெரிவு செய்தார். ஆரோனின் கோலை சாட்சி பெட்டிக்கு முன்பாக திரும்பவும் வைக்கும்படி கர்த்தர் சொன்னார். இதன் மூலமாக இஸ்ரவேல் புத்திரருக்குள் இருக்கும் முறுமுறுப்பை நீக்குவேன் என்றார்.
தேவன் தமது பணிக்கு உகந்தவனைத் தெரிவு செய்தார். அவன் அழகானவனோ, படித்தவனோ, அந்தஸ்துள்ளவனோ, திறமையுள்ளவனோ என்று பார்த்தல்ல, மாறாக, எவன் அதற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறானோ, எவன் அதை அர்ப்பணத்துடன் செய்ய வல்லவனாக இருக்கிறானோ, எவன் உண்மைத்துவத்துடன் இருக்கிறானோ அவனையே தேவன் தன் பணிக்காகத் தெரிந்தெடுப்பார். அவரது தெரிந்தெடுப்பு மனிதனின் தெரிந்தெடுப்பை விட மிகவும் வித்தியாசமானது. நான் தெரிந்தெடுப்பவனின் கோல் துளிர்க்கும் என்று தேவன் முன்கூட்டியே சொன்னார். அதேபோலவே ஆரோனின் கோல் துளிர்த்துப் பூத்து வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. இன்று கர்த்தரின் பணியைச் செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நாம், அதை அவருக்கு உகந்ததாய், அவருக்குச் சித்தமானபடி செய்ய நம்மை அர்ப்பணித்திருக்கிறோமா? அவருக்காக பூத்துக் கனிதர நம் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறோமா? சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக மோசே பணிவிடைக்கார னாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான் (எபி. 3:5).
ஜெபம்: ஆண்டவரே, நான் தலைவனாக ஆசைப்படாமல், அர்ப்பணமுள்ள, கிறிஸ்துவின் உண்மையான பணிவிடைக்காரனாக இருக்க எனக்கு கிருபை செய்யும். ஆமென்.