அவரின் சித்தத்திற்காய் வாழ்
தியானம்: 2026 பிப்ரவரி 24 செவ்வாய் | வேத வாசிப்பு: மத்தேயு 26:36-56

… ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார் (மத்தேயு 26:39).
நாம் நம்முடைய விருப்பப்படி நடக்கிறோம், நமக்கு விருப்பமானதைச் செய்கிறோம், நமது தேவைகளெல்லாம் உடனுக்குடன் கிடைக்க வேண்டுமென்று ஆசிக்கிறோம். ஆனால் நாம் தேவனுடைய சித்தப்படிதான் எல்லாம் செய்கிறோம், அவருடைய சித்தப்படியே வாழுகிறோம் என்று தைரியமாகவே கூறிவிடுவதுமுண்டு.
தேவனுடைய சித்தப்படி வாழுவது என்றால் என்ன? நமது விருப்பத்தை, நம்முடைய சித்தத்தை அவருடைய சித்தத்துக்குள் புதைத்துவிடவேண்டும். பிதாவின் திட்டத்தை நிறைவேற்றவே, குமாரன் இப்பூமிக்கு வந்தார். பிதாவின் நாமம் மகிமைப்படும்படிக்கும், பிதாவின் சித்தம் நிறைவேறும்படிக்கும் இயேசு வாழ்ந்தார். இப்போது சிலுவை மரணத்தை நிறைவேற்றும் முன்பதாக பிதாவோடு உறவாடுகிறார். அந்நேரத்தில், “இந்தக் கொடிய பாவப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும். ஆகிலும் என்னுடைய சித்தப்படியல்ல உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது” என்று ஜெபிக்கிறார். முழுமையாக தம்முடைய சித்தத்தைப் பிதாவின் சித்தத்திற்குள் இயேசு புதைத்து விடுவதை இங்கே காண்கிறோம்.
குஷ்டரோகி ஒருவன் இயேசுவிடம் வந்தபோது, “ஆண்டவரே உமக்குச் சித்தமானால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்” என்கிறான். அதற்கு இயேசு, “எனக்குச் சித்தமுண்டு, நீ சுத்தமாகு” என்கிறார். அந்தக்கணமே அவனுடைய குஷ்டரோகம் மறைந்துபோனது. அவன் மறுபடியும் இயேசுவிடம் நன்றி சொல்வதற்காகத் திரும்பி வந்தான். ஆனால் பழைய ஏற்பாட்டில் நாகமான் என்னும் படைத்தலைவன் குஷ்டரோகம் சுத்தமாக வேண்டும் என்று எலிசாவினிடத்தில் தேடி வருகிறான். எலிசா சொன்ன பிரகாரம் யோர்தானில் ஏழுதரம் மூழ்கி எழுந்திருக்க அவன் ஆயத்தமில்லை. காரணம், தான் வந்ததும் எலிசா தன்னிடத்தில் வந்து, எண்ணை பூசி, தன்னைச் சொஸ்தமாக்குவான் என்ற எண்ணத்தோடு அவன் புறப்பட்டு வந்திருந்தான். அப்படி நடக்காதபோது, தனது எண்ணத்தை அவன் ஒப்புக்கொடுக்க ஆயத்தமில்லை. எலிசா சொன்னதைச் செய்யவும் விருப்பமில்லை. தான் எண்ணியபடியே எல்லாம் நடக்கவேண்டும் என்று எண்ணினான். தனது பெருமையை, சுயத்தை விட்டுக்கொடுத்த போது தானே அவன் குணமடைந்தான். இன்றும் நாம் தேவனுடைய நிறைவான சித்தம் நம்முடைய வாழ்வில் நிறைவேறாதபடிக்கு சுயநலமான சிந்தனைகளைப் பிடித்துக்கொண்டு இருக்கிறோமா? நமது சித்தத்தை தேவனுடைய சித்தத்திற்குள் அர்ப்பணிக்க தவறுகிறோமா? நமது வாழ்வில் அவரது சித்தம் இன்னதென்று அறிந்து அதற்கேற்ப வாழ நம்மை அர்ப்பணிப்போம். ஆகையால் நீங்கள் மதியற்றவர்களாயிராமல் கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் (எபேசியர் 5:17).
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, உம்முடைய சித்தம்போல் என்னை என்றும் நடத்த முற்றிலுமாய் அர்ப்பணிக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளும். ஆமென்.