அவருக்குள் வளரு

தியானம்: 2026  பிப்ரவரி 25 புதன் | வேத வாசிப்பு: 1பேதுரு 2:1-10

YouTube video

நீங்கள் வளரும்படி, … திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள் (1பேதுரு 2:3).

ஒரு குழந்தை பிறப்பதென்பது அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிற காரியம்தான். அடுத்து அந்த குழந்தை அழுகிறதா? பால் குடிக்கிறதா? என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அதாவது அக் குழந்தை சரியாக செயற்படுகிறதா, அதன் வளர்ச்சிபடிமுறை சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறோம். குழந்தை பால் குடித்தால்தானே வளரும். யாருமே பிறந்த குழந்தை என்றைக்குமே குழந்தையாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. அது வளர வேண்டும். அதுபோலவேதான் நமது ஆவிக்குரிய வாழ்விலும் நாம் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, என்றைக்கும் குழந்தைகளாகவே இருக்க முடியாது, நாம் வளரும்படிக்கு திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்று பேதுரு புத்தி சொல்லுகிறார். பிள்ளைகள் பிறக்கின்றபோது, அவர்கள் வளரும்படிக்கே பிறக்கிறார்கள். வளராமல் இருப்பதென்பது ஒரு குறைபாட்டையே குறிக்கின்றது. அதுபோலவே நாமும் கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து, பாவங்களை அறிக்கையிட்டு, அவர் நமக்கு தந்த இரட்சிப்பை அடைகின்றபோது, அவருக்குள் குழந்தைகளாகப் பிறக்கின்றோம். அதன்பின்னர் நமது ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாகும். அதற்கு குழந்தைகள் வளருவதற்குப் பால் எவ்வளவு அவசியமோ அதுபோலவே, ஆவிக்குரிய வாழ்வில் வளருவதற்கு, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பால் நமக்கு மிக மிக அவசியமாகின்றது.

திருவசனத்தை வாசிப்பதும், அதைத் தியானிப்பதும், அதற்குக் கீழ்ப்படிந்து நடத்தலுமே நம்மை ஆவிக்குரிய வாழ்வில் வளரச் செய்யும். சிலர் திரு வசனத்தை காலையும் மாலையும் தவறாது வாசிப்பதோடு தமது கடமை முடிந்தது என்று திருப்தியடைவதுண்டு. சிலர் அதைச் சற்றுத் தியானிப்பதோடு நிறுத்திக்கொள்வார்கள். மாறாக, அவற்றிற்குக் கீழ்ப்படிந்து நடப்பவனே, கிறிஸ்துவுக்குள் வளருகிறவனாகவும், அவர் நடந்தபடி நடப்பவனாகவும், அவரது மாதிரியைப் பின்பற்றுபவனாகவும், ஆவிக்குரிய வாழ்வில் வளருபவனாகவும் இருப்பான்.

இதில் நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை நம்மை நாமே நிதானித்துப் பார்த்து அறிந்துகொள்வோம். ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்விற்கு ஆவிக்குரிய வளர்ச்சியென்பது இன்றியமையாததாய் உள்ளது என்பதை உணர்ந்துகொள்வோம். அதற்குத் திருவசனத்தின் அவசியம் எவ்வளவு என்பதையும் உணர்ந்து அதைக் கடைப்பிடிப்போம். அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்கு, திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதன்படி செய்கிறவர்களாயும் இருங்கள் (யாக்கோபு 1:22).

ஜெபம்: கர்த்தாவே, ஆவிக்குரிய வாழ்வில் குழந்தையாகவே இருந்துவிடாமல் திருவசனத்தை வாசித்து தியானித்து எங்கள் வாழ்க்கையில் கைக்கொண்டு தேறின தேவமனுஷனாக காணப்பட உமதருள் தாரும். ஆமென்.