உபவாசத்தால் ஜெயித்தார்
தியானம்: 2026 மார்ச் 2 திங்கள் | வேத வாசிப்பு: மாற்கு 1:1-13

அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார் (மாற். 1:13).
நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உடனடியாக உறங்கச் செல்லவேண்டாம் என்பது வைத்தியர்கள் தரும் முக்கிய ஆலோசனைகளில் ஒன்று. ஏனெனில் உணவு நன்றாக செரிமானம் அடையாது. இதனால் அதிகளவில் வயிற்றுப் பிரச்சனைகள் உருவாகும். பயங்கர கனவுகள் வந்து உறக்கத்தைக் கெடுக்கும். நாம் சாப்பிடும் உணவு மாம்ச சரீரத்தை புஷ்டியாக வைத்திருக்க உதவினாலும்கூட, சோம்பலையும் உண்டாக்கும்; அத்துடன் பல சோதனைகளும் பெருகும்.
இயேசுவானவர் உபவாசத்தை முடித்துக்கொண்டதும் அவரைச் சோதிப்பதற்காக சோதனைக்காரன் வந்து அவர் முன்பாக நிற்கிறான். இயேசுவோ சுலபமாக அவனை ஜெயித்துவிட்டார். பிசாசானவன் சாதாரணமாக சோதிக்கவில்லை. தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டே சோதிக்கிறான். இயேசுவும் தேவனுடைய வார்த்தைகளைக்கொண்டே அவனுக்குப் பதிலடி கொடுத்து அவனை ஜெயிப்பதைக் காண்கிறோம். முதலாவது, உபவாசத்தின் பின்னர் அவர் பசியோடு இருப்பதைக் கண்ட பிசாசானவன், “இந்தக் கல்லுகளை அப்பங்களாக்கிப் புசித்துவிடும்” என்று அவருக்கு ஆசைகாட்டி மோசம் செய்யப் பார்க்கிறான். ஆனால் இயேசுவோ தேவனுடைய வார்த்தைகளாலேயே ஒருவன் பிழைக்க முடியும் என்பதைக் கூறி அவனுக்குப் பதிலடி கொடுத்தார்.
பிசாசானவன் நமது பலவீனங்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான். அவற்றைக்கொண்டே நம்மை வீழ்த்தவும் அவன் முயற்சிக்கிறான். ஆகவே நாம் எப்போதும் எச்சரிப்போடு இருக்கவேண்டியது அவசியம். நமது மாம்ச சரீரம் பெலவீனமானது. எனவேதான் இந்த பலவீனமான மாம்சம் அடிக்கடி தேவனுடைய வார்த்தையைவிட்டு விழுந்து போகிறது. எனவே நமது மாம்சத்தை ஒடுக்குவதற்கும், ஆவியை உற்சாகமாக்குவதற்கும் இந்த உபவாசம் நமக்கு உதவுகிறது. உபவாசத்தைக் கடைபிடிப்பதற்கு லெந்து நாட்கள்தான் வரவேண்டும் என்பதல்ல. எப்போதும் நாம் உபவாசித்து ஜெபிக்கலாம். உபவாசம் நமது ஆவிக்குரிய வாழ்வை பெலப்படுத்த மாத்திரமல்ல, ஆவிக்குரிய வாழ்வில் வெற்றியடையவும் வழிகாட்டுகின்றது.
இந்த லெந்து நாட்களை நமது உபவாச வாழ்வுக்கு ஒரு ஆரம்ப நாட்களாக வைத்துக்கொள்வோம். பிசாசானவனை ஜெயிப்பதற்கும் அவனை வெற்றிகொண்டு தேவனோடு நெருங்கி வாழ்வதற்கும் இந்த லெந்துகாலங்கள் ஒரு நல்ல தருணத்தைப் பெற்றுத் தருகின்றன. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வோமாக.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, உபவாசத்தால் எங்கள் மாம்சத்தை ஒடுக்கும்போது ஆவி உயிர்ப்பிக்கப்படுவதற்காய் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். ஆமென்.